அவசரப் பயணமாக நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்கள் ஆங்காங்கே சுங்கச் சாவடிகளில் தேவையில்லாமல் காத்திருக்க வேண்டிய நிலையை மாற்ற புதிய முறை கொண்டுவரப்படுகிறது.
நாடு முழுக்க பதினாறு சுங்கச்சாவடிகளில் இந்த முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை-48இல் உள்ள நெமிலி, சென்னசமுத்திரம், தேசிய நெடுஞ்சாலை 45இல் சென்னையை அடுத்த பரனூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் புதிய முறை வரவுள்ளது.
புதிய முறையில், வாகனங்களின் எண் பலகையைத் தானாகவே கண்டறியும் தொழில்நுட்ப கேமரா மூலம், வானொலி அலைவரிசையின் உதவியுடன் வாகனத்தில் உள்ள ஃபாஸ் டேக் குறியீட்டைப் படித்தறிந்து அதன்வழியாக சுங்கக் கட்டணத்தை செயற்கை நுண்ணறிவு முறையில் மிக வேகமாக வசூலிக்கப்படும்.
நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்லும் வேகத்திற்குள் கேமரா வாகன எண் பலகையைப் படம்பிடித்து அனுப்ப, அதை உடனடியாகப் படித்தறிந்து கட்டணப் பிரிவுக்கு தானாகவே அனுப்பும் முறை உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படி நிகழ் நேரத்திலேயே வாகனத்துக்கு உரிய சுங்கக் கட்டணத்தை வசூலித்துவிடுவதால், நீண்ட வரிசையில் காத்திருந்து நொந்துபோக வேண்டிய ஒரு நிலை இனி தவிர்க்கப்படும்.
மேலும், வாகனங்களை நிறுத்தி கட்டணம் வசூலிக்க ஆட்களை நியமிப்பதும் இதன்மூலம் குறைக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இதற்கான பணிகளை ஒப்பந்தம் விட்டு, கேமராக்களை நிறுவுவது முதலிய பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. நான்கு மாதங்களுக்குள் இந்தப் பணி முழுவதுமாக முடிந்ததும், சோதனையோட்டம் நடத்தப்பட்டு, புதிய முறை செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை ஃபாஸ் டேக் படிப்பான் சரியாக வேலை செய்யாவிட்டால், வாகன எண் பலகை கேமரா சரியாக வேலைசெய்வதை உறுதிப்படுத்தும் வகையில் இரட்டை அமைப்பு முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் வாகனங்களின் ஃபாஸ் டேக் பதிவாகாமல் சென்றுவிட்டால்கூட, கேமரா சேகரத்தில் அந்த வண்டிகளின் விவரம் இடம்பெற்றிருக்கும். இதன்மூலம் கட்டணம் விதிக்கப்படாத நிலை ஏற்பட்டு, அதனால் வருவாய் இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.
புதிய முறையின் மூலம் வாகன எரிபொருள் சேமிப்பு உண்டாவதுடன், வாகனப் புகை மாசும் கட்டுப்படுத்தப்படும். மேலும், சுங்கச் சாவடிகளில் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆட்களையும் குறைத்து, செலவைக் குறைக்க முடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக, 36 சுங்கச்சாவடிகளில் புதிய முறை நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.