
உலகமே ஓடிடி என ஓடிக்கொண்டிருக்க, இந்தியாவிலோ இன்னும் பழைய காலத்து டிவி பெட்டிகளில்தான் மக்கள் திளைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த 2024ஆம் ஆண்டில் 1400 கோடி டாலர் அளவுக்கு இந்தியாவில் தொலைக்காட்சி வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இது வரும் 2029ஆம் ஆண்டில் 1810 கோடி டாலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
தொழில் சேவைகள் வலையமைப்பு பிடபிள்யூசி இது தொடர்பான ஆய்வில் இந்த கணிப்பை வெளியிட்டுள்ளது.
இத்தனைக்கும் உலக அளவிலான அதிநவீன மாற்றங்கள் இந்திய ஊடகக் கருவிகளிலும் ஏற்பட்டுவரும் நிலையில், இங்கும் ஓடிடி நுகர்வோரின் எண்ணிக்கை ஒரு பக்கம் பெருகி வருகிறது.
ஆனாலும், பன்னாட்டு நிலவரத்தைப் போல இந்தியாவில் தொலைக்காட்சிப் பெட்டிகள் என்பன குறைந்துவிடவில்லை. அங்கெல்லாம் நடந்ததைப்போல, ஓடிடி தளங்கள் கேபிள் தொலைக்காட்சியை அகற்றி அந்த இடத்தில் தாம் உட்காந்துகொள்ள முடியவில்லை. ஓடிடி என்பது தொலைக்காட்சியின் கூடுதல் பயனாகத்தான் பாவிக்கப்படுகிறதே ஒழிய, அது தனியானதாகக் கோலோச்சும் இடத்துக்கு வரவில்லை.
இதற்குக் காரணம், இந்தியப் பண்பாட்டில் குடும்பத்தோடு குழுவாகச் சேர்ந்து தொலைக்காட்சியைப் பார்ப்பது என்பது ஊறிப் போய்விட்ட ஒன்று எனக் குறிப்பிடுகின்றனர் துறை வல்லுநர்கள்.
ஒரு பக்கம் இணைய ஊடகங்களின் வளர்ச்சியால் வருவாய் குறைந்துவரும் தொலைக்காட்சித் துறை, இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் வட்டார, தேசிய இன மொழிகளில் நிகழ்ச்சிகளைத் தருவதை இரு மடங்குவரை அதிகரித்துள்ளன.
சுமார் 16 கோடி இந்திய வீடுகளில் இப்போதும் முதன்மையாக தொலைக்காட்சியைத்தான் பார்க்கின்றனர் என்றும் இரண்டு கோடி முதல் மூன்று கோடி வரையிலான வீடுகளிலும் புதியவகை ஓடிடி தளங்களைப் போன்றவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்; அவர்களும் தொலைக்காட்சியிலேயே தொடங்குகின்றனர்; அதாவது, கையடக்கக் கருவிகள், மடிக்கணினி, மேசைக்கணினி போன்றவற்றிலேயே ஓடிடி தளங்களைப் பார்ப்பதும் ஒரு வகையினர்; அப்படி இல்லாமல் தொலைக்காட்சிகளிலேயே ஓடிடி தளங்களைப் பார்ப்பதும் கணிசமாக இருக்கிறது என்கிறார் தனியார் ஒளிபரப்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் சந்தீப் குப்தா.
புதுவகை நுகர்வோர் வகைப்பாட்டின்படி, நடுத்தர வருவாய் ஈட்டுவோர், ஒரு கேபிள் தொலைக்காட்சி இணைப்புடன் ஒரு டிடிஎச் இணைப்பையும் சேர்த்து சுமார் 200 ரூபாய் முதல் 350 ரூபாய்வரை கட்டணம் செலுத்துகின்றனர். இதில் அவர்கள் 100 பல மொழி சேனல்களைப் பார்க்கமுடியும் என்பது தொலைக்காட்சியில் பரவலாக உகந்த கட்டணமாக இருக்கிறது.
இதுவே, ஓடிடி என்றால் பல்வேறு தளங்களுக்கு பல்வேறு கட்டணங்கள், இணைய இணைப்பின் கட்டணம் இரண்டும் சேர்த்து குடும்பத்தின் செலவினத்தை ஏற்றிவிடுகிறது என்பதையும் குறிப்பிடுகிறார்கள் வல்லுநர்கள்.
பண்பாட்டுரீதியாக ஓடிடி தனிநபர் மையமானதாகவும் நகர்ப்புறம் சார்ந்ததாகவும் இருக்கும்நிலையில், தொலைக்காட்சி இன்னும் குடும்பரீதியானதாக இருப்பதை முக்கியமாகச் சொல்கிறார்கள்.
இந்நிலையில், ஓடிடி தளங்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களுடன் உடன்பாடு செய்துகொண்டு கூட்டாக நுகர்வோரிடம் பல்வேறு வகையிலான கட்டண பேக்குகளைத் தரும் சூழலையும் உண்டாக்கியுள்ளது.