
கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தால் மாநிலமே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
சென்னை, மதுரைக்கு அடுத்து கோவையிலும் மிகப் பெரும் நூலகத்தை அமைத்த தி.மு.க. அரசாங்கம், அதற்கு பெரியார் அறிவுலகம் என்று பெயரிட்டது. இதை அண்மையில் முதலமைச்சர் விஜய் திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் இதை உருவாக்கியதற்காக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.க. பாராட்டு விழா நடத்தியது.
சர்ச்சை!
இந்தப் பின்னணியில், கோவை பெரியார் நூலகப் புத்தகத் தேர்வுக் குழு உறுப்பினராக இருந்த எழுத்தாளர் பெருமாள் முருகன், அங்கு போலி நூல்கள் இருப்பதாகவும் அதில் குறிப்பாக அகல் விளக்கு, பீனிக்ஸ் ஆகிய பெயர்களில் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் விலை பல மடங்கு என்பதையும் இதில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்றிருக்கும் என்றும் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அதையொட்டி, புத்தக வாசிப்பாளர்கள், பதிப்பாளர்கள் மத்தியில் இன்று முழுவதும் இதுவே பேசுபொருளாக மாறியது.
மேலும், ஆளும் த.வெ.க.வும் ஆண்ட கட்சியான த.வெ.க.வும் மாறிமாறி இதில் சாடிக்கொண்டிருக்கின்றன.
இதனிடையே இந்த விவகாரத்தில் தி.மு.க. ஊழல் செய்தது என்றும் விசாரணை நடத்தப்படும் என்றும் நூலகத்துக்குப் பொறுப்பான பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் இராஜ்மோகன் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களிலும் விவாதம் சூடுபறக்கிறது.
உண்மையில் நடந்தது என்ன?
1. கோவை பெரியார் அறிவுலகம் உட்பட 5 சிறப்பு நூலகங்களுக்கும் புதிய 6 மாவட்ட மைய நூலகங்களுக்கும் நூல்கள், மின்னூல்களைக் கொள்முதல் செய்துகொள்ள நிதி ஒதுக்கி கடந்த ஆண்டு நவம்பர் 5 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, கோவை பெரியார் அறிவுலகத்துக்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
2. நூல்களைப் பரிந்துரைசெய்ய 137 பேரைக் கொண்ட பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் கடந்த ஆட்சியிலேயே தங்களின் பரிந்துரையையும் வழங்கினர்.
3. அவர்கள் பரிந்துரைத்த நூல்களிலிருந்து தேர்வுசெய்து இறுதிப்பட்டியல் தயாரிக்க 13 பேரைக் கொண்ட நூல் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, அவர்களும் பட்டியலை வழங்கினர்.
4. அந்த நூல்களைக் குறைந்த விலைக்குப் பேசி கொள்முதல் செய்வதற்கான பொதுநூலக இணை இயக்குநர் தலைமையிலான 5 அதிகாரிகளைக் கொண்ட கொள்முதல் பேச்சுவார்த்தைக் குழுவும் அமைக்கப்பட்டு தன் பணியைச் செய்தது.
5. இத்துடன், ஆலோசனை வழங்க பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் தலைமையில் தமிழ் வளர்ச்சித் துறையின் செயலாளர், பாடநூல் கழக மேலாண் இயக்குநர், பொதுநூலக இயக்குநர் உட்பட ஐவர் குழுவும் அமைக்கப்பட்டது.
தெளிவான விதிமுறைகள்
இந்தக் குழுவினர் அவர்களாக தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப எதையும் செய்துவிட முடியாது. அதற்காக நூல் தேர்வுசெய்வதில் கடைப்பிடிக்க வேண்டிய 10 நடைமுறைகள், மின்னூல்கள், மின்னிதழ்களுக்கான 3 நடைமுறைகள், கொள்முதலுக்கு 2 நடைமுறைகள் என தெளிவாக வரையறுக்கப்பட்டது.
அகராதிகள் தொடங்கி மகளிர் மேம்பாடுவரையில் மொத்தம் 54 துறைகள் தொடர்பாக நூல்களைப் பரிந்துரைப்பதற்காக துறைசார் வல்லுநர்களாக 137 பேர் நூல்களைக் கொள்முதல் செய்வதற்காகப் பணியாற்றியுள்ளனர்.
தவறு எங்கே?
இவர்கள் பரிந்துரைக் குழுவினர் மட்டும் அல்ல. கணிசமான நூல்களை நிராகரிக்கவும் செய்துள்ளனர். அந்திமழை அறிந்தவரை 137 பேரிடமும் ஒவ்வொரு கதை இருக்கும் என்பது தெரிகிறது.
இதில், இப்போது சிக்கியிருக்கும் போலி நூல்களை யாராவது பரிந்துரைத்திருந்தால் அவர்கள் நிச்சயமாகப் பிடிபடும் அளவுக்குதான் நூல் கொள்முதல் விதிகளும் நடைமுறைகளும் இருந்தன.
சர்ச்சைக்குரிய அந்தப் போலி கும்பலுக்குச் சாதகமாகச் செயல்பட்டது யார் என்பதை அறிய பெரிய புலனாய்வெல்லாம் செய்யவேண்டியதில்லை.
அந்த நபர்களுக்கு அரசின்சார்பில் பணம் வழங்கப்பட்டதற்கு யார் பின்னணி என்பதை அரசின் ஆவணங்களின் மூலமாகவே தெரிந்துகொள்ள முடியும்.
இந்தச் செயல்முறையில் எல்லாமே இணையவழியாகவும் வங்கிப் பரிவர்த்தனை மூலமுமே நடைபெற்றிருக்க வேண்டும் என அடித்துச் சொல்கிறார்கள் பதிப்பாளர்கள்.
நாட்டிலேயே தொழில் வளர்ச்சியுடன் சமூக வளர்ச்சியையும் அடைந்த மாநிலங்களில் நம் தமிழ்நாடும் முக்கியமானது என்பதற்கான காரணங்களில் கல்வியறிவு குறிப்பாக நூல் வாசிப்பு குறிப்பிடத்தக்கது.
அதிலேயே ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான், வருங்காலத் தமிழ்நாடும் பெருமைகொள்ள முடியும்.