
மத்திய கிழக்கு போர்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்கள் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் வாகங்கள் வரிசைகட்டி நிற்பதோடு சில பங்குகள் மூடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே, நாட்டில் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால், மக்கள் தண்ணீர் கேன் உள்ளிட்ட பொருள்களில் பெட்ரோல், டீசலை வாங்கிச் செல்லும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஒரு சில பங்குகளில் நூறு ரூபாய்க்கு மேல் பெட்ரோல் போடுவதில்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
நேற்று இரவு முதல் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பல்வேறு பெட்ரோல் நிலையங்களில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பெட்ரோல் நிரப்ப வரிசையில் காத்திருந்தனர். அதே நிலைதான் இன்றும் தொடர்வதாக வாகன ஓட்டிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
“கோவூர், குன்றத்தூர் பகுதிகளில் உள்ள பாரத் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்தியன் ஆயில், ஹெச்.பி. பங்குகளில் மட்டும் பெட்ரோல் போடுகிறார்கள். அதுவும் ஸ்பீடு பெட்ரோல் மட்டும் தான் போடுகிறார்கள்.” என்கிறார் மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்க்கும் அபிஷேக்.
கார்த்திக் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், “இப்பதா ஒருவழியா ஆஃபிஸ் வந்து சேர்ந்தேன். பெட்ரொல் பங்க்ல 45நிமிடம் க்யூல நின்னேன்...
வில்லிவாக்கம், மாதவரம், ரெட்ஹில்ஸ், அண்ணாநகர் வர்ற வழி பூராவே பெட்ரோல் பங்க்ல கூட்டம். தவிர்க்கமுடியாத பயத்துல இருக்காங்க மக்கள் !!” என்று பதிவிடுள்ளார்.
டீசல் தட்டப்பாடு இருக்கிறதா என்று லாரி உரிமையாளர் சதீஷ்குமார் என்பவரிடம் கேட்டோம், “இப்போது வரை டீசல் தட்டுப்பாடு இருப்பதாக தெரியவில்லை. நாங்கள் வழக்கமாக டீசல் போடும் பங்கிலிருந்து அழைத்து, லாரிகளில் முழு அளவுக்கு டீசலை நிரப்பிக் கொள்ள சொன்னார்கள். எங்களுடைய எல்லா லாரிகளிலும் எரிபொருளை நிரப்பிக் கொண்டோம். இப்போது வரை தமிழ்நாடு, ஆந்திராவில் டீசல் தட்டுப்பாடு இல்லை. இன்று மாலை அல்லது நாளை டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கலாம்.” என்கிறார் அவர்.
“தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் 21 நாள்களுக்கு பெட்ரோல், டீசல் ஸ்டாக் இருப்பதாக நிறுவனங்களிடமிருந்து அதிகாரப்பூர்வமான தகவல் வருகிறன. டீலர்களிடமும் 3 நாள்களுக்கு ஸ்டாக் இருக்கும். அதனால் மக்கள் பீதியடைய வேண்டாம். எந்த பெட்ரோல் நிலையத்திற்கு எப்போது சென்றாலும் பெட்ரோல் இருக்கும். ” என்கிறார் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்க தலைவர் கே.பி. முரளி.
“மக்கள் பீதியடைய வேண்டாம்” என பெட்ரோல் நிறுவனங்கள் விளக்கம் இன்று விளக்கம் அளித்திருந்தாலும் வாகனங்கள் சாரைசாரையாய் அணிவகுத்து நிற்பதை பார்க்க முடிகிறது.
ஒரு கேனை எடுப்பா நாமளும் போய் பெட்ரோல் வாங்கிட்டு வருவோம்...!