‘சாதிய ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம்’ என்ற கோரிக்கை மீண்டும் வலுவாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அதற்குக் காரணம், தூத்துக்குடி பொறியாளர் கவின் செல்வகணேஷின் கொடூர படுகொலை!
முன்னர் ‘கெளரவக் கொலை’ என அழைக்கப்பட்டு இப்போது ‘சாதி ஆணவக் கொலை’ என அழைக்கப்படும் இந்தக் கொடூரக் கொலைகள், சாதி கெளரவம் என்பதற்காக இழைக்கப்படும் கொலைக்குற்றங்களாகப் பார்க்கப்படுகின்றன.
நவீனமும் அறிவியல் தொழில்நுட்பமும் வளர்ச்சி பெற்றிருக்கும் இந்தக் காலகட்டத்திலும், மீண்டும் மீண்டும் சாதிய ஆணவக் கொலைகள் அரங்கேறுவதால் இதைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க. முதலிய கட்சிகளும் சாதியெதிர்ப்பு அமைப்புகளும் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில், சாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சிறப்புச் சட்டம் தேவை என்ற கோரிக்கைக்கு முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நடைமுறையில் உள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படையில் தீவிரமான, வேகமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியானது.” என்று கூறி கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஏற்கெனவே இருக்கும் கிரிமினல் சட்டங்களே போதுமானது என, இன்னும் அரசு கருதிக்கொண்டிருக்கும் நிலையில், சாதிய ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் தேவை என்பதை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்ட சி.பி.எம். கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணனிடம் பேசினோம்:
”சாதி மாறிக் காதலிப்பவர்களை, சாதிமறுப்புத் திருமணம் செய்துகொள்பவர்களைக் கொலைசெய்வது சாதி ஆணவம் ஆகும். சாதாரண படுகொலைகளுக்கும் சாதியப் படுகொலைகளுக்கும் வித்தியாசம் உள்ளது.
சாதிய ஆணவக் கொலைகளைத் தடுக்க எஸ்.சி/ எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் மட்டும் போதாது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாதி ஆணவக் கொலைகள் புதிய சட்டத்தின் தேவையை வலியுறுத்துகின்றன. சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க, தமிழ்நாடு அரசு தனிச்சட்டத்தை விரைவில் கொண்டுவர வேண்டும். அதேபோல், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு ஒன்றில், சாதி மாறி காதலிப்பவர்களுக்கும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க காவல் நிலையங்களில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதை மாநில அரசு உடனடியாக செய்ய வேண்டும்.” என்ற கூடுதல் கோரிக்கையையும் முன்வைத்தார்.
“தனிச்சட்டம் வேண்டும்தான். இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், எஸ்.சி./ எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் இதுவரை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.” என்கிறார் எஸ்.சி./ எஸ்.டி. ஆணையத்தின் முன்னாள் துணைத்தலைவரும் தலித் முரசு ஆசிரியருமான புனித பாண்டியன்.
மேலும், “தீண்டாமை ஒழிக்கப்பட்டதாகச் சட்டம் சொல்லி 75 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்றுவரை தீண்டாமை நடைமுறையில் உள்ளது. ஏற்கெனவே பி.சி.ஆர். சட்டம் இருந்தது. அதுபோதாது என்று எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு, அதில் திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது. இந்த அளவுக்கு வலிமையான சட்டம் இருந்தும், அது ஏன் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை?
சட்டத்தை நீதிமன்றமோ, காவல்துறையோ, அரசு நிர்வாகமோ செயல்படுத்துவதில்லை; சமூகத்தின் மனசாட்சிதான் நடைமுறைப்படுத்துகிறது என்பார் அம்பேத்கர். சட்டத்துக்கு சமூகத்தின் கூட்டு மனசாட்சி இசைவு அளிக்கவில்லை என்றால் எந்தச் சட்டம் கொண்டுவந்தாலும் பயனளிக்கப்போவதில்லை.
ஆனால், இங்கு சமூகம் என்பதே இல்லை. பிறகு எங்கு கூட்டு மனசாட்சி என்பது இருக்கப்போகிறது? சாதியக் குழுக்களைச் சமூகமாக்க முதலில் நாம் ஏதாவது செய்ய வேண்டும். அதனால்தான் சாதி ஒழிப்பை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்
சாதிச் சங்க மாநாடுகளையும் விழாக்களையும் நடக்க அனுமதி அளித்துவிட்டு, சாதிப் படுகொலைகள் நடக்கும்போது கவலைகொள்கிறோம். இந்த சமூகம்தான் முதல் குற்றவாளி. அதை மாற்றுவதற்கான வேலைத்திட்டம் தான் சாதி ஒழிப்பு.” என்றார்.
தனிச்சட்டம் தேவையா, அதற்கான அவசியம் என்ன என்ற கேள்வியை எழுத்தாளரும் எஸ்.சி. / எஸ்.டி. ஆணையத்தின் இப்போதைய துணைத்தலைவருமான இமையத்திடம் முன்வைத்தோம்.
“சாதிய ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். அதேநேரத்தில் சட்டத்தின் மூலம் மட்டுமே நாட்டில் நடக்கக்கூடிய சமூகக் கலவரத்தைத் தடுத்துவிட முடியும் என நினைக்கவில்லை. சமூகத்தில் மாற்றம் வரவேண்டும். படித்தவர்கள் மத்தியில் உள்ள சாதிய வன்மம் குறைய வேண்டும்.
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை தருவது ஒருவிதம் என்றால், மக்கள் மனதில் மாற்றம் நிகழ வேண்டும்.
எஸ்.சி./எஸ்.டி. ஆணையத்தை அமைத்தது இந்த அரசுதான். சமூக குற்றங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு ஒத்துழைக்க வேண்டியது மக்களின் கடமை. மக்கள் ஒத்துழைத்தால்தான் அரசின் திட்டங்கள் வெற்றிபெறும். சட்டங்கள் மூலம் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது.
எஸ்.சி./எஸ்.டி. சட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த அரசு பரிசீலிக்க வேண்டும். வன்கொடுமை வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்தாலே போதுமானது.” என்றார்.
“சாதிய ஆணவக் கொலை வழக்குகளில் விரைந்து நீதி வழங்க வேண்டும். தண்டனை கடுமையாக இருந்தால் பயம் ஏற்படலாம். அதனால் குற்றங்கள் குறையலாம்.
இப்போதுள்ள எஸ்.சி./ எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தில் நீண்ட காலம் எடுப்பது ஒரு குறையாக உள்ளது.
சிறப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டால் கொலைக் குற்றவாளி மட்டுமில்லாமல், கொலை செய்யத் தூண்டியவர்கள், அதை ஆதரித்துப் பேசக்கூடியவர்கள், நியாயப்படுத்தக் கூடியவர்களைத் தண்டனை வளையத்துக்குள் கொண்டு வந்துவிட முடியும் என்கிறார்கள் வழக்கறிஞர்கள். தனிச்சட்டம் அவசியம் தேவை என்பதே என் கருத்து.
இதுபோன்ற கொலைகள் நிகழ்த்தப்படும்போது பாதிக்கப்படும் பெண்களை குடும்பத்தினரிடமிருந்து மீட்டு பாதுகாப்பான இடத்தில் அரசு தங்க வைக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும்.” என்கிறார் எழுத்தாளர் ஓவியா.
நீண்ட காலமாகத் தொடரும் சாதிய ஆணவக் கொலைகளுக்கு சட்டங்கள் முடிவுகட்டுமா என்பது விவாதத்துக்குரியது.
இதில், திராவிடமாடல் அரசு என்ன செய்கிறது என்று பார்ப்போம்!