இந்தியாவின் தேடப்பட்ட குற்றவாளியாக இருந்துவந்த அன்மோல் பிஷ்னாயை ஒருவழியாக அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது.
குஜராத்தின் சம்பர்மதி சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ள பிரபல குற்ற கும்பல் தலைவன் லாரன்சு பிஷ்னாயின் தம்பிதான், இந்த அன்மோல். இவனை இந்தியாவுக்கு அனுப்பியதன் மூலம் இங்கு ஏற்கெனவே நிலுவையில் உள்ள பல்வேறு உயர்மட்ட, பரபரப்பான வழக்குகளில் துப்பு கிடைக்கும்; விசாரணையை விரைவுபடுத்த வழி ஏற்படும் என்று காவல்துறையினர் காத்துக் கிடக்கிறார்கள்.
அமெரிக்க அரசின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கடந்த செவ்வாய் அன்றே தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக்கின் குடும்பத்தினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துவிட்டது. அமெரிக்க மண்ணிலிருந்து அன்மோல் பிஷ்னாய் அகற்றப்பட்டு விட்டார்...இந்தக் குற்றவாளி 18ஆம் தேதியன்று இங்கிருந்து அனுப்பப்பட்டு விட்டார் என்று அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அமெரிக்க அரசு சித்திக்கின் குடும்பத்திற்கு இதைச் சொல்வதற்குக் காரணம், மகாராஷ்டிர மாநில அமைச்சராக இருந்த பாபா சித்திக்கை கடந்த ஆண்டு அக்டோபரில் சுட்டுக்கொன்றதில் அன்மோலும் சதி மூளையாகச் செயல்பட்டான் என்பதுதான்!
அந்தக் கொடூரக் கொலைக்கு முன்னரே, கடந்த ஆண்டு ஏப்ரலில் மும்பை, பந்த்ராவில் உள்ள சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதிலும் இவனுடைய கை இருக்கிறது என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
அன்மோல் பிஷ்னாயை ஒரு விமானத்தில் கொண்டுவந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஞ்சாப்பின் பசில்கா மாவட்டத்தில் பிறந்த இவன், போலி பாஸ்போர்ட்டில் நாட்டைவிட்டு ஓடியவன் என்று போலீஸ் கூறுகிறது.
முதலில் நேபாளத்துக்கும் அங்கிருந்து துபாய்க்கும் கென்யாவுக்கும் பறந்து தப்பியிருக்கிறான், அன்மோல். தற்செயலாக அமெரிக்காவுப் போனவன், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பேக்கர்ஸ்பீல்டில் ஜாலியாக உலாவிக்கொண்டிருந்துள்ளான். அப்போது அவனுடைய வழக்கைப் புலனாய்வு நடத்திவரும் பிரிவினரிடம் வகையாக மாட்டிக்கொண்டான்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அன்மோலை அங்குள்ள காவல்துறையினர் கைதுசெய்தார்கள். அப்போதிருந்தே அவனை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டன. ஆனாலும் ஆண்டு முடியப்போகும் தறுவாயில்தான் அது நிகழ்ந்திருக்கிறது.
அன்மோலைக் கைதுசெய்த காரணம், போலி பாஸ்போர்ட் வழக்கு. ஐயோவா மாநிலத்தின் போட்டவாட்டமீ கவுண்டி சிறையில் அவன் அடைக்கப்பட்டிருக்கிறான்.
இவன் கைதான தகவல் அறிந்ததும், கொல்லப்பட்ட சித்திக்கின் மகன் ஜீஷான், தங்கள் குடும்பத்தின் சார்பில் அமெரிக்க அரசின் பல்வேறு துறைகளிடமும் முறையிட்டுள்ளனர். அன்மோலைப் பற்றிய தகவல்களை அவர்களுக்கு அவ்வப்போது தெரிவித்தும் வந்திருக்கிறார்கள், அமெரிக்க அரசு அதிகாரிகள். அப்படித்தான் கடைசியாக, கடந்த 18ஆம் தேதி தகவலையும் தெரிவித்துள்ளனர்.
” அவனை மும்பை போலீஸ் கைதுசெய்ய வேண்டும் என விரும்புகிறோம். என் தந்தையின் கொலைக்குப் பின்னால் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரிந்தாகவேண்டும்.” என ஊடகத்தினரிடம் கூறினார், ஜீஷான் சித்திக்.
பாபா சித்திக்கின் படுகொலை அந்தக் குடும்பத்தை நிம்மதி இழக்கச் செய்திருப்பது, நிதர்சனம்.
தேடப்பட்ட குற்றவாளியாக அன்மோலை அறிவித்த தேசியப் புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., அவனுடைய தலைக்கு 10 இலட்சம் ரூபாய் விலையும் வைத்தது. 2022ஆம் ஆண்டில் பஞ்சாபியப் பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்பட்டதிலும் அன்மோலின் பங்கு இருக்கிறது என்பது அவன் மீதான இன்னுமொரு முக்கியமான குற்றச்சாட்டு.
இவன் இருந்ததோ வெளிநாடுகளில்... எப்படி இந்தக் கொலை, குற்றங்களையெல்லாம் செய்திருப்பான் எனும் கேள்வி எழுவது இயல்புதான். தொலைதூரத்திலிருந்து சக குற்றவாளிகளை இயக்கியதுதான் இவனுடைய திறமை என்கிறது காவல்துறை!
சிறையில் உள்ள லாரன்சின் இன்னொரு முகமாக வெளிநாடுகளில் அன்மோல் செயல்பட்டிருக்கிறான்; அவன் மூலம்தான் பன்னாட்டுச் சதிவேலைகள் அரங்கேறியிருக்கின்றன என்கிறது போலீஸ்.
ஆங்காங்கே உள்ள கிரிமினல்களோடு தொடர்பும் நெருக்கமும் பேணி, வலுவான வலையமைப்பில் பிஷ்னாய் கும்பல் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறது.
அரபு நாடுகள் உட்பட்ட மேற்கு ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் இந்த கும்பல் சுதந்திரமாகச் செயல்பட்டு வந்திருக்கிறது.
இவனுடைய வரலாற்றில் இன்னொரு முக்கிய கதாபாத்திரம், கோல்டி பிரார். அமெரிக்காவில் எங்கோ பதுங்கிக்கொண்டு பயங்கரவாத, கிரிமினல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறான். போதைப்பொருள் கடத்தல், ஆயுதக்கடத்தல், புகழ்பெற்ற திரைப்படப் புள்ளிகள், பாடகர்கள், வர்த்தகர்- தொழிலபதிர்கள், சமூக- மதவாதப் புள்ளிகளைக் கடத்துவது, கொலைசெய்வது ஆகியவை இந்த கும்பலின் கைவந்த கலையாக இருந்துவருகிறது.
இவ்வளவையும் செய்யும் இந்த கும்பல், காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தினருடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதாகவும் போலீஸ் துறை தகவல் தெரிவிக்கிறது.
ஓரிரு வாரங்களில் அன்மோல் பிஷ்னாயிடம் காவல்விசாரணை செய்தால் குறைந்தபட்ச தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறார்கள், என்.ஐ.ஏ. அதிகாரிகள்!