சன் குடும்பம்... சீரியல் அல்ல சீரியஸ்; மாறன்கள் மல்லுக்கட்டு!

சன் குடும்பம்... சீரியல் அல்ல சீரியஸ்; மாறன்கள் மல்லுக்கட்டு!
Published on

தொலைக்காட்சி சீரியல்களுக்குப் பெயர்பெற்ற சன் டிவி சேனலில் குடும்பம் என்ற தொடர் வந்துபோயிருக்கலாம். அந்தச் சேனலின் உரிமையாளர்களுக்குள் இப்போது குடுமிப்பிடி சண்டை நடந்துவருவது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டபோது, தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதி, அவரின் அக்கா மகன் முரசொலி மாறன் ஆகியோரின் குடும்பத்தினரால் தொடங்கப்பட்டது, சன் டிவி. பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமாகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், பப்ளிக் லிமிட்டெட் நிறுவனமாக பங்குச்சந்தையில் நம்பிக்கையான நிறுவனமாகப் பெயரெடுத்தது. இப்போது பெரும் சாம்ராஜ்யமாக வளர்ந்துநிற்கும் அந்தக் குழுமத்தில்தான், குடும்பச் சண்டை வெடித்திருக்கிறது.

நேற்று வெளியான நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் எச்சரிக்கை நோட்டீஸ், உள்விவகாரங்களைப் புட்டுப்புட்டு வைத்துவிட்டது.

சாரமாக, இரு சகோதரர்களின் தந்தை முரசொலி மாறன் இறப்புக்குப் பின்னர், மூத்தவரான கலாநிதி மாறன் சன் டிவியின் கணிசமான பங்குகளை முறைகேடாக சுருட்டிக்கொண்டார்; மாறன் இறந்ததும் வாரிசுச் சான்றிதழ் பெறாமலேயே அவருக்கு இருந்த பங்குகளை அவரின் மனைவியான தங்களின் தாயார் மல்லிகாவுக்கு மாற்றி, பின்னர் அவற்றைத் தன் பெயருக்கு மாற்றிக்கொண்டார் கலாநிதி; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு இப்படி மோசடியாக கலாநிதி தனக்கு பங்குகளை வாங்கிக்கொண்டார்; குறிப்பாக, சன் குழுமத்தில் ஒரு சதவீதம்கூட பங்குதாரராக இல்லாத அவர், திடீரென அந்தக் குழுமத்தின் தீர்மானிக்கக்கூடிய அளவுக்கு 60 சதவீதப் பங்குகளை வசப்படுத்திக்கொண்டார் என்பது தயாநிதியின் குற்றச்சாட்டுகள்.

கடந்த அக்டோபரில் இந்த விவகாரம் தொடர்பாக முதல் நோட்டீசை தயாநிதி அண்ணனுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அதற்கு கலாநிதி உரியபடி பதில் அனுப்பவில்லை. இதன் காரணமாக, மீண்டும் இந்த மாதம் 10ஆம் தேதியன்று தயாநிதி மீண்டும் கலாநிதி, அவரின் மனைவி காவேரிக்கும் சன் குழும அதிகாரிகளுக்கும் ஆலோசகர்களுக்குமாக 6 பேருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்தபடி பங்குகளின் நிலையைத் தொடரும்படியும் அப்படி செய்யாவிட்டால் கலாநிதி, அவரின் தரப்பு மீது செபி போன்ற மத்திய அமைப்புகளிடம் புகார் செய்யப்போவதாகவும் கலாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த முறை அமைதியாகக் கடந்துசெல்லாத கலாநிதி தரப்பு, பதிலுக்கு சன் குழுமம் சார்பில் மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை இரு அமைப்புகளுக்குமே விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தது. அதில், தயாநிதியையோ கலாநிதியையோ குறிப்பிட்டுச் சொல்லாமல், இந்த விவகாரம் பற்றிய செய்திகளுக்குப் பதில்கூறுவதைப் போல விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, குழுமத்தின் புரமோட்டரான கலாநிதிக்கும் அவரின் குடும்ப உறுப்பினருக்கும் இடையிலான குடும்ப விவகாரம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்படும் சம்பவம், 22 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது என்றும் அது சன் குழுமம் தனிப்பட்ட பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமாகச் செயல்பட்ட காலத்தில் நடந்தது என்றும் அந்தத் தகவல்கள் ஊகமானவை, சட்டத்தின்படி சரியில்லாதவை, தவறானவை, அவதூறானவை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது பொது நிறுவனம் ஆவதற்கு முன்னர் எல்லா நடவடிக்கைகளும் முறைப்படி சட்ட முறைமைகளுக்கு உட்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் இது முழுக்க முழுக்க கலாநிதியின் குடும்ப விவகாரம் என்பதால் நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்றும் முறையீட்டு அலுவலரான ஆர். இரவி தெரிவித்துள்ளார்.

சன் டிவியின் தரப்பில் வெளியிடப்பட்ட பட்டும்படாமலுமான இந்த விளக்கம், தயாநிதியின் நோட்டீசின் காட்டத்துக்குக் கிடைத்த பதிலாகவும் இருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இப்படியொரு குடும்பச்சண்டை ஒன்று வந்தது. அது கருணாநிதியின் குடும்பத்துக்கும் மாறன் சகோதரர்கள் தரப்புக்குமானது. அதில் மதுரையில் தினகரன் நாளேட்டின் அலுவலகத்தில் மு.க. அழகிரியின் ஆதரவாளர் கும்பல் ஒன்று நடத்திய பெட்ரோல் குண்டுத் தாக்குதலில் அப்பாவி ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

அதன்பிறகு அறிவாலயத்திலிருந்த சன் டிவி சேனலை உடனடியாக காலிசெய்யுமாறு கருணாநிதி தரப்பு கட்டாயப்படுத்தியது. தொடர்ந்து, கலைஞர் டிவி என கருணாநிதி குடும்பம் தனியாக ஒரு சேனலை உருவாக்கியது. இப்போது அது தனி குழுமம் அளவுக்கு வளர்ந்துவிட்டது. இரண்டு சேனல்களும் போட்டிபோடும்படி நடந்துகொண்டன.

எல்லாம் சில காலம்தான்.

திரைப்பட வசனகர்த்தாவான கருணாநிதி, இதயம் இனித்தது கண்கள் பனித்தன என்று எழுதி குடும்பச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

இடையில் சிக்கிக்கொண்டவர்கள் அவதிப்பட்டார்கள் என்பது ஒருபுறம் இருக்க, அதுபோலவே மீண்டும் ஒரு சமாதானக் காட்சி அரங்கேறுமா அல்லது அம்பானி மகன்களைப் போல ஆகிவிடுமா என்பது கேள்வியாக நிற்கிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com