டாட்டா டிரஸ்ட்டில் டுவிஸ்ட்டு மேல் டுவிஸ்ட்டுகள்-இன்றுவரை நடப்பதென்ன?

டாட்டா டிரஸ்ட்டில் டுவிஸ்ட்டு மேல் டுவிஸ்ட்டுகள்-இன்றுவரை நடப்பதென்ன?
Published on

இந்தியாவின் அடையாள நிறுவனங்களில் ஒன்றான டாட்டா குழுமத்தில், இரத்தன் டாட்டா மறைவுக்குப் பிறகு அடுத்தடுத்து திருப்பங்களாக அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன.

அண்மை சம்பவமாக, தமிழ்நாட்டின் டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன், டாட்டா டிரஸ்ட்டில் துணைத்தலைவராகவும் அறங்காவலராகவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த ஆண்டில் இரத்தன் டாட்டா காலமானதை அடுத்து, டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நோயல் டாட்டா ஆயுள்கால அறங்காவலராக ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து வேணு இப்போது டாட்டா அறக்கட்டளைகளின் ஆயுள் கால அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையொட்டி, டாட்டா டிரஸ்ட்டின் சக அறங்காவலர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் வேணு மரியாதை நிமித்தமான கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்து இன்னொரு அறங்காவலரான மிஸ்திரி அனுப்பிய கடித விவரம் ஊடகங்களில் கசிந்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறந்துபோன இரத்தன் டாட்டாவுக்கு நெருக்கமானவரான மிஸ்திரிக்கு பொதுவாகவே ஒரு கோதா உண்டு. அதனாலும் மற்ற காரணங்களாலும் நோயல் டாட்டா தரப்பினர் இவருக்குப் போட்டியாக, அதிருப்தியாளராகச் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அக்டோபர் 23ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த வேணுவின் டிரஸ்ட்டி பதவிக்காலம், இந்த வாரத் தொடக்கத்தில் நீட்டிக்கப்பட்டது. மெகுலி மிஸ்திரியும் மற்ற மூன்று டிரஸ்ட்டிகளும் இதற்கு ஒப்புதல் அளித்திருந்தனர். ஆனால் இதில் மிஸ்திரி ஒரு நிபந்தனையை முன்வைத்திருந்தார்.

இதனிடையே, மூன்று ஆண்டு கால டிரஸ்ட்டி பதவிக்காலம் முடிவடைந்ததும் அதை ஆயுள் காலம் முழுவதற்கும் நோயல் டாட்டாவைப் போல நீட்டிக்கவேண்டும் என்றும் இல்லையில்லை முதலில் பதவிக்காலத்தைப் புதுப்பித்துவிட்டு, அதன்பிறகு டிரஸ்ட்டியாக ஆயுள் காலம் முழுவதும் நீட்டித்துக்கொள்ளலாம் என இரு தரப்பாக வாதிட்டனர்.

அது ஒருவழியாக முடிவுக்கு வந்து, டிரஸ்ட்டியாகவும் மூன்று டாட்டா அறக்கட்டளைகளுக்குத் துணைத்தலைவராகவும் தொடர வேணுவுக்கு ஒப்புதலும் கிடைத்தது.

அப்போது, மிஸ்திரி போட்ட நிபந்தனை, வேணுவைப் போலவே இனி டிரஸ்ட்டி பதவிக்காலம் ஆயுள் முழுவதற்கும் நீட்டிக்கும் அனைவருக்கும் நிபந்தனை, தடங்கல் எதுவும் செய்யாமல் மற்ற டிரஸ்ட்டிகள் ஒப்புதல் வழங்கவேண்டும் என்பதுதான்.

அவசர, அவசிய காரணம் இல்லாமலா....?

டாட்டா டிரஸ்ட்டுகளில் வரும் 28ஆம் தேதியுடன் மெகுலி மிஸ்திரியின் டிரஸ்ட்டி பதவிக்காலம் முடியவுள்ளது. வேணுவைப் போல அவரும் எந்தவித சிரமமுமின்றி பதவியில் நீட்டிக்க வேண்டும் என்பதுதான் அவரின் அக்கறை!

இதற்காக எழுத்துபூர்வமாகவே அவர் தன்னுடைய நிலைப்பாட்டை சக டிரஸ்ட்டிகளுக்கு தெரிவித்துள்ளார்.

ஒருவேளை இப்போதைய டிரஸ்ட்டிகளில் யாரும் ஆயுள்கால ஒப்புதல் தரவில்லை என்றால், அவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவோ ஆயுள்காலத்துக்கும் டிரஸ்ட்டியாக ஆக்கவோ ஒப்புதல் தரப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டது, டாட்டா வட்டாரங்களுக்குள் பெரும் பரபரப்பை உண்டுபண்ணிவிட்டது.

ஆவலோடு எதிர்பார்த்த காட்சி என்பதைப்போல, மிஸ்திரியின் பதவிக்காலத்தை நீட்டிக்கவும் முறைப்படி இன்று டாட்டா டிரஸ்ட்டுகளின் தலைமைச் செயல் அதிகாரி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, சர் தொராப்ஜி டாட்டா டிரஸ்ட், சர் இரத்தன் டாட்டா டிரஸ்ட் ஆகியவற்றில் ஆயுள் கால டிரஸ்ட்டியாக மிஸ்திரி நீட்டிப்பதற்கு அறக்கட்டளை உத்தேசித்துள்ளது என்பது தகவல். ஆனாலும் இதை அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அங்கீகரித்து ஒப்புதல் அளித்தால்தான் இறுதியாகும்.

இந்த இரண்டு டிரஸ்ட்டுகளுக்கும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

’இங்கதான் நிக்கிறான் சந்திரன்’ எனும் திரைப்பட வசனத்தைப் போல, ஒட்டுமொத்த டாட்டா குழுமத்தில் அதாவது டாட்டா சன்ஸ் நிறுவனத்தில் இந்த டிரஸ்ட்டுகளின் பங்கு மட்டும் 66 சதவீதம். அதாவது, தீர்மானிக்கும் அதிகாரம் இருக்கிறது.

ஏன் இது பிரச்னையாகிறது?

முன்னதாக, கடந்த செப்டம்பரில் டாட்டா டிரஸ்ட்டுகளில் உள்ள விஜய்சிங்கை டாட்டா சன்ஸ் இயக்குநர் குழுவில் நியமிக்க முறைப்படியான ஒப்புதல் கோரப்பட்டது. அதற்கு, மிஸ்திரியும் அவரது கோஷ்டியில் உள்ள டேரியஸ் கம்பட்டா, ஜெகாங்கிர் எச்.சி. ஜெகாங்கிர், பிரமித் ஜாவேரி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காரணமாக அவர்கள் தரப்பில் சொல்லப்படுவது, டாட்டா சன்சில் நடக்கும் விவகாரங்களை நோயல் டாட்டா, வேணு, விஜய்சிங் மூன்று பேர் அணி, டிரஸ்ட்டுகளின் அறங்காவலர் குழுவுக்கு உரியபடி தெரிவித்ததில்லை என்பதுதான்! பல சம்பவங்களை அடுக்கும் அந்தத் தரப்பு, அண்மையில் நடந்த இத்தாலி இவெக்கோ கம்பெனியை டாட்டா மோட்டார்ஸ் வாங்கியதை எல்லாம் பேசி முடித்தபிறகு கடைசிக் கட்டத்தில்தான் மூச்சுவிட்டிருக்கிறார்கள். 380 கோடி யூரோ மதிப்புள்ள கொள்முதல் இது.

கடந்த ஏப்ரலில், நோயலைத் தலைவராகக் கொண்ட டாட்டா இண்டர்நேசனல் டாட்டா சன்ஸ் மூலம் 1000 கோடி ரூபாய் நிதி வழங்குவதைப் பற்றியும் இப்படித்தான் மூவர் குழு கையாண்டதாகக் கூறப்படுகிறது.

இவை ஒரு பக்கம் இருக்க, டாட்டா சன்சில் 18 சதவீதம் பங்கு வைத்திருக்கும் சபூர்ஜி பல்லோஞ்சி குழுமம், பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமான இதை பப்ளிக் லிமிட்டெடாக மாற்றவேண்டும் எனக் கூறிவருகிறது. இதற்கு மிஸ்திரியின் ஆதரவும் இருக்கிறது எனக் கூறப்படுகிறது. அந்தக் குடும்பத்துடன் இவருக்கு திருமணம்சார்ந்த உறவு இருப்பதால் ஒரே அணியாகக் கைகோர்க்க வாய்ப்பு உள்ளது.

அப்படி டாட்டா சன்ஸ் பொதுப் பங்கு நிறுவனமாக மாற்றப்பட்டால், பொதுவான பங்குதாரர்களுக்கு நிறுவனத்தின் வர்த்தகத்தைப் பற்றித் தெரிவிக்க வேண்டிய கடமை வந்துவிடுகிறது. அண்மைக் காலமாகத்தான், மைய அரசு குறிப்பாக பாதுகாப்புத் துறையின் சில வேலைகளை டாட்டா குழுமம் எடுத்துச் செய்துவருகிறது; அதில் எந்த பாதகமும் ஏற்பட்டுவிடக்கூடாது என அரசுத் தரப்புக்கும் அக்கறை இருப்பது இயல்பு.

இந்தப் பின்னணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோருடன் டாட்டா டிரஸ்ட்டிகள், நிர்வாகிகள் அண்மையில் நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டது, குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டில் இப்படி பல விவகாரங்கள் இருக்க, பிரிட்டனில் ஜாகுவார் கார் தயாரிக்கும் நிறுவனத்தை நிர்வகிப்பதில் டாட்டா குழுமத்துக்கு பெரும் பாதகம் ஏற்பட்டது. அந்நாட்டு அரசாங்கம் மானியம் தருவதாகக் கூறியுள்ளதால் பல பத்தாயிரம் கோடி ரூபாய் இழப்பை எதிர்கொள்ளாமல் டாட்டா தப்பித்திருக்கிறது.

எல்லாம் சுற்றுச்சுற்றி வந்து கடைசியில் டாட்டாவின் பங்குகளை விற்பனை செய்வதில்தான் நிற்கிறது. ஆனால் அரசாங்கத்துக்கு இதைப் பற்றி குறிப்பாக என்ன நிலைப்பாடு என்பது அறிகுறியாகக்கூட காட்டப்படவில்லை.

உள்ளுக்குள் இரு தரப்புகளும் பொதுநிறுவனமாக ஆக்குவதா இல்லையா என்பதில் தீர்மானத்துக்கு வராமல் இழுத்தபடியே இருக்கின்றன.

logo
Andhimazhai
www.andhimazhai.com