
"பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்" என்பார்கள். இந்த பழமொழி யாருக்கு பொருந்துமோ இல்லையோ இலங்கைக்கு நூறு சதவீதம் பொருந்தும்.
உள்நாட்டுப் போர், பொருளாதார நெருக்காடியைத் தொடர்ந்து, இலங்கை இப்போது ‘டிட்வா’ புயலின் கோரத்தாண்டவத்தால் நிலைகுலைந்து போயிருக்கிறது.
தற்போதுவரை 330 பேர் இறந்திருப்பதாக கூறப்படும் நிலையில், நாடே முடங்கி இருக்கிறது. இந்த இக்கட்டான சூழலில், இலங்கையில் சிக்கித்தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் 177 பேரை தமிழ்நாடு அரசு நேற்று (நவ.30) பத்திரமாக மீட்டு வந்துள்ளது.
இதெல்லாம் தெரிந்ததுதான் என்றாலும், புயலுக்கு முன்னரே தமிழ்நாட்டு எழுத்தாளர் ஒருவர் இலங்கைக்கு சென்றதோடு, இன்று வரை அங்கேதான் உள்ளார்.
பத்திரிகையாளர், பாடலாசிரியர், எழுத்தாளர், பதிப்பாளர் என பன்முகம் கொண்ட வடிவரசுதான் அவர்.
அவரிடம் நலம் விசாரித்துவிட்டு அவரிடம், வாட்ஸ் அப் வழியாக உரையாடினோம்...
”யாழ்ப்பாணம் அருகே உள்ள மல்லாகம் என்ற பகுதியில்தான் இப்போது தங்கியுள்ளேன், குடும்பத்துடன். இங்கு நாங்கள் வந்த பிறகு, மூன்று நாள்கள் இடைவிடாமல் மழை கொட்டித்தீர்த்தது. ஆனாலும் பாதிப்பு பெரிதாக இல்லை. இது மேடான நிலப்பகுதி.
வாசக நண்பர் ஒருவரது அழைப்பின் பேரில் நவ.22ஆம் தேதி மதியம் நாங்கள் யாழ்ப்பாணம் வந்தோம். அப்போது முதல் மழை விட்டுவிட்டு பெய்துகொண்டிருந்ததால் முதல் மூன்று நாட்கள் தூரமாக எங்கும் செல்லாமல் அருகேயுள்ள சில இடங்களுக்கு மட்டும் குடைபிடித்துக் கொண்டு நடந்தேவும், நண்பர் காரிலும் போய் வந்தோம். அதற்கடுத்த நாள் 26ஆம் தேதி முல்லைத்தீவு, நந்திக்கடல், முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களுக்கு சென்றோம். அன்றும் மழைதான். குடை பிடித்துக்கொண்டுதான் சுற்றிப்பார்த்தோம். அங்கிருந்து திருகோணமலையை நோக்கிச் சென்றபோதுதான் மழையின் பாதிப்பு தெரிந்தது.
விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியிருந்தன. சாலையில் நீர் தளும்பிக் கொண்டிருந்தது. ஓடைகள், ஆறுகள் தண்ணீரால் நிரம்பி வழிந்தன. ஒருநாள் இரவு மட்டும் திருகோணமலையில் தங்கினோம். இரவு சரியான மழை. இருந்தாலும் காலையில் கோணேஸ்வரர் கோயிலுக்கு சென்றோம். மிகக்கடுமையான காற்று மழையோடு கோயிலை சுற்றிப்பார்த்தோம்.
”இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே” என்ற ஆசையில் குடை பிடிக்காமல் ஓடிப்போய் கோயிலின் முன்பாக மலை போல் இருந்த இடத்தில் கேட்டையும், மரத்தையும் பிடித்துக் கொண்டு கடல் அலையைப் பார்த்தேன்.
”இது வேற மாதிரியான மழையாக இருக்கும்” என உணர முடிந்தது. முழுமையாக எங்களால் திருகோணமலையை சுற்றிப் பார்க்க முடியவில்லை. நிறைய பகுதிகளை ப்ளாக் செய்திருந்தார்கள். சீக்கிரமே அங்கிருந்து கீழே வந்தோம். அருகே இருந்த இரண்டு கோயில்களை மட்டும் பார்த்தோம். புயல் குறித்து உணர்ந்திருந்ததால் கடற்கரை பக்கமே செல்லவில்லை.
அடுத்ததாக, வீட்டுக்கு செல்லலாமா அல்லது பக்கத்தில் உள்ள மத்திய இலங்கை பகுதிகளான அனுராதபுரம், சிகிரியா, பொலன்னறுவைக்கு செல்லலாமா என்ற குழப்பத்தில் இருந்தோம். மத்திய இலங்கையின் சூழல் குறித்து அங்குள்ள நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள் வரவேண்டாம் என்றும், மிகக்கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார்கள். உஷாராகிட்டோம். கார் டிரைவர் கொடுத்த நம்பிக்கையால் அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு கிளம்பினோம். நிறைய இடங்களில் சாலைகளை ப்ளாக் செய்திருந்தார்கள். முட்டிக்கால் அளவு தண்ணீரை பல இடங்களில் கடந்து வர வேண்டியிருந்தது. வவுனியா தாண்டி வரும்போது, ஒரு இடத்தில் சாலையை கடக்கவே முடியவில்லை. “இதற்கு மேல் செல்லமுடியாது” என்றார்கள் காவலர்கள். சாலைகளை சுத்தி சுத்தி ஐந்து மணி நேரத்தில் வந்து சேர வேண்டிய இடத்திற்கு பத்து மணி நேரம் ஆனது. அன்று யாழ்ப்பாணத்துக்கு வரவில்லை என்றால் நாங்கள் மழை வெள்ளத்தில் மாட்டியிருப்போம்.
வீட்டுக்கு வந்த பிறகுதான் இலங்கையின் மத்திய பகுதியான பதுளை என்ற இடம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிந்து கொண்டோம். மிக மோசமான நிலச்சரிவு மத்திய பகுதியில் தான் ஏற்பட்டது. நல்லவேளையாக நாங்கள் யாழ்ப்பாணம் வந்துவிட்டோம். அங்கு போயிருந்தால் நாங்கள் வீட்டுக்கு திரும்பி வந்திருப்போமா என்று தெரியாது.
மேலும் நாங்கள் பார்த்துவிட்டு வந்த முல்லைத்தீவு முழுவதுமே நீரில் மூழ்கி கடுமையாக பாதிக்கப்பட்டுளதாக அறிந்து வருத்தமுற்றோம்.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயிலுக்குள் மழை வெள்ளம் புகுந்ததாக சொன்னார்கள். யாழ்ப்பாணத்தின் பாதிப் பகுதியும் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். இன்றுவரை நாங்கள் பாதுகாப்போடுதான் இருக்கிறோம்.
மக்கள் வருத்தத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. போக்குவரத்து இன்னும் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்டுதான் உள்ளது. அக்கம் பக்கத்தில் போய் வரலாம். நெடுந்தூரம் போய் வர முடியாது. இப்போதுள்ள நிலைமை சரியாக இன்னும் நாளைந்து நாட்கள் ஆகலாம்.
நாங்கள் இன்னும் பன்னிரண்டு நாட்கள் இலங்கையில் இருக்கப்போகிறோம். டிச. 13 வரை. அதற்குள் இன்னும் சில இடங்கள் செல்ல திட்டமிட்டிருக்கிறோம். அனுராதபுரம் செல்ல ஆசை இருக்கிறது. ஆனால் செல்ல முடியுமா என்று தெரியவில்லை.” என்றவர், இந்த பயணத்தின் உருக்கமான சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.
”முள்ளி வாய்க்காலுக்கு சென்றபோது கண்கலங்கிவிட்டேன். அங்குள்ள மனிதர்கள் இப்போதுதான் கொஞ்சம் முன்னேறி வருகிறார்கள். அதற்குள் இடியாய் வந்த விழுந்திருக்கிறது இந்த புயல் மழை.
தமிழர்கள் பகுதியில், நவ. 27ஆம் தேதி மாவீரர் தினம் அனுசரிப்பார்கள். போரில் யார் யார் இறந்தார்களோ அவர்களின் பெற்றோரை அழைத்து அங்கீகரிப்பார்கள். அந்த சமயத்தில் இந்த இயற்கைப் பேரிடர் வேறு நடந்து நாட்டை உருக்குலைத்திருப்பது மனதை உலுக்கி விட்டது.” என்கிறார் வடிவரசு.