நயமாகவும் நாகரிகமாகவும் நாடாளுமன்றத்தில் கருத்துகளைப் பேசி சிறந்த எம்.பி. எனப் பெயரெடுத்த திருச்சி சிவா, சாதாரண கட்சிக் கூட்டத்தில் பேசி கடுமையான கண்டனத்துக்கும் சர்ச்சைக்கும் உள்ளாகியிருக்கிறார், முதல் முறையாக!
அவர் என்ன நினைத்துப் பேசினாரோ, காமராசர் பிறந்த நாளன்று சென்னை, பெரம்பூரில் தி.மு.க. கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி கடந்த இரண்டு நாள்களாக சமூக ஊடகத்தில் சூடான விவாதப்பொருள் ஆகியிருக்கிறது.
காமராசர் தன் கடைசி காலத்தில் உடல்நலிவு காரணமாக ஏசி இல்லாமல் தூங்கமாட்டார் என்றும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர் வெளியூர்களில் சென்று தங்கும் அரசினர் விடுதிகளில் ஏசி வசதியைச் செய்துதர வேண்டும் என தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி உத்தரவிட்டார்; இந்திரா காந்தியின் அவசரநிலைக் காலத்தில் காமராசர் திருப்பதிக்குப் போகும் தகவல் அறிந்து அவரை அங்குவைத்து கைதுசெய்துவிடுவார்களோ என அதிகாரிகள் மூலம் முதலமைச்சர் கருணாநிதி தடுத்தார்; அதற்கு காமராசர், தான் தி.மு.க.காரன் அல்ல, காங்கிரஸ்காரன், தனக்கு கருணாநிதி கட்டளையிடுவதா என்று பதில்சொல்ல, உடனே கருணாநிதியும் தி.மு.க. தலைவராக தான் இதைச் சொல்லவில்லை; முதலமைச்சராகச் சொல்கிறேன் எனச் சொல்ல, பிற்காலத்தில் சாகும்தறுவாயில், அவர் கருணாநிதியின் கையைப் பிடித்துக்கொண்டு, இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்- என்பதுதான் திருச்சி சிவாவின் பேச்சின் மையம்.
இந்தப் பேச்சு ஊடகங்களிலும் பின்னர் சமூக ஊடகங்களிலும் வெளியானதும் ஆங்காங்கே காங்கிரஸ் கட்சியினர் சிவாவைக் கண்டித்து அடையாள ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சமூக ஊடகங்களில் சிவாவைக் கண்டபடி வறுத்தெடுத்துவருகின்றனர்.
அதற்குப் பதிலடியாக தி.மு.க. ஆதரவாளர்களும் காமராசரைப் பற்றி கடுமையாகச் சாடியும் கிண்டலடித்தும் எழுதத் தொடங்கினர்.
பிரச்னை பெரிதானதைத் தொடர்ந்து நேற்று இரவு திருச்சி சிவா பெயரில் அவருடைய கட்சிப் பொறுப்பையும் குறிப்பிட்டு தன்னிலை விளக்க அறிக்கை ஒன்று வெளியானது. ஆனால் அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள், விமர்சனங்களுக்கான பதில் ஏதும் இடம்பெறவில்லை.
அதன் காரணமாக மேலும் சூடானது, காங்கிரஸ் தரப்பு. சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் இராஜேஸ்குமார், சிவாவை கண்ணியக் குறைவாகக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
முன்னதாக, கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி, திருச்சி சிவாவின் பேச்சைக் கடுமையாகக் கண்டித்ததுடன், காமராசரைப் பற்றி தி.மு.க. கட்டுக்கதைகளைப் பரப்பிவிட்டது என்றும் கூர்மையான வார்த்தைகளால் கருத்துத் தெரிவித்தார். பிரச்னை குறித்து தி.மு.க. தலைவரிடம் கொண்டுசெல்ல உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமிழக காங்கிரஸ் தலைமை மாற்றப்படலாம் எனும் பரபரப்பில், மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையோ, திருச்சி சிவா இப்படிப் பேசியதைத் தவிர்த்திருக்கலாம் என்கிற அளவில் நிறுத்திக்கொண்டு, கண்டனமும் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் செல்வப்பெருந்தகையையும் சேர்த்து அவருடைய கட்சியினர் குறைகூறி விமர்சித்தனர். காங்கிரஸ் தரப்பில் திருச்சி வேலுச்சாமி உட்பட்ட சிலர் சிவாவை ஒருமையிலும் கண்ணியமில்லாமலும் ஊடகத்தில் வசைபாடினர்.
அதைத் தொடர்ந்து, இன்று காலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதுவும் சிவா பாணியிலேயே அமைந்திருந்தது. மேற்கொண்டும் இதைப் பிரச்னையாக வளர்த்தெடுக்க வேண்டாம் என்பதுதான் அவரின் கருத்தும்.
“கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்!
பெருந்தலைவர் காமராசரைப் 'பச்சைத்தமிழர்' என்று போற்றியவர் தந்தை பெரியார். குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா.
பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர். உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு!
அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும்.
சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்றுசேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்!” என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுடன் முடித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் கடைசியாக, தி.க. தலைவர் கி.வீரமணி, இன்று மாலையில் சுருக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காமராசருடனான சந்திப்பு குறித்து கருணாநிதி தன் நெஞ்சுக்கு நீதி நூலில் எழுதியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரே கூட்டணிக் கட்சிகளான தி.மு.க.- காங்கிரஸ் இடையிலான இந்தச் சிக்கலுக்கு, எதிர்த்தரப்பில் கண், காது, மூக்கு வைத்து வளர்க்கவும் முயல்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் தி.மு.க.வின் மாணவரணிச் செயலாளர் இராஜீவ்காந்தி, அதைத் தொடர்ந்து கட்சியின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் காமராசர் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகளை எதிராகத் தொகுத்து முன்வைக்கிறார்கள்.
ஏதாவது பலன் கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பை அவர்களிடம் அதிகமாகப் பார்க்கமுடிகிறது. அந்த அளவுக்கு இந்த விவகாரம் போகுமா என்பதை அடுத்துவரும் நாள்கள்தான் சொல்லவேண்டும்.