நெய்வேலியைக் குறிவைக்கும் பண்ருட்டி வேல்முருகன் - தி.மு.க. எண்ணம்?

panrutti velmurugan
பண்ருட்டி வேல்முருகன்
Published on

சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. அணியில் தொடர்ந்து இடம்பெற்றுள்ள பண்ருட்டி வேல்முருகன் இந்த முறை நெய்வேலி தொகுதியைக் குறைவைக்கிறார்.

தி.மு.க. கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு, இந்த முறை ஓர் இடம் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக, கடந்த 28ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. குழுவினருடனான பேச்சுவார்த்தையில், த.வா.க. ஒரு மாநிலங்களவை இடமும் 5 தொகுதிகளும் கேட்டது. அன்று நடைபெற்ற ஏழு கட்சிகளுடனான தொகுதிப்பேச்சில் மற்ற கட்சிகளுக்குச் சொன்னதைப் போலவே, தலைமையிடம் கேட்டுவிட்டுச் சொல்வதாக தி.மு.க. குழு தெரிவித்தது.

அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், காங்கிரஸ், முஸ்லிம் லீக், ம.ம.க., ம.தி.மு.க. ஆகிய நான்கு கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்திருக்கிறது.

கூட்டணியில் முக்கிய கட்சியாக இருந்துவரும் வி.சி.க., புதிதாகச் சேர்ந்துள்ள தே.மு.தி.க. ஆகியவற்றுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியானநிலையில், வேல்முருகனின் த.வா.கா. இரண்டு தொகுதிகளையாவது தங்களுக்குத் தரவேண்டும் என்று வலியுறுத்தியது. அதில், வேல்முருகன் போட்டியிடும் தொகுதி தவிர, தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சாதியினர் அடர்த்தியாக வசிக்கும் ஒரு குறிப்பிட்ட தொகுதியும் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தி.மு.க. தரப்பில் இந்தக் கோரிக்கையைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவே இல்லை என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

இடதுசாரிகளைப் போலவே வேல்முருகனும் கூட்டணியை விட்டுப் போய்விடமாட்டார் என்பதுதான் அதற்குக் காரணம். இந்தப் பிரச்னையை முன்னிட்டு அணி தாவுவார் எனக் கூறப்பட்டதற்கு, கடந்த மாதம் நடைபெற்ற டெல்டா நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் தெளிவாக மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இந்தப் பின்னணியில்தான், தி.மு.க.வசம் தற்போது உள்ள நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதியை வேல்முருகன் தரப்பு தங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டுவருகிறது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வடசென்னை, திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிட்ட வேல்முருகன், தோல்வியைத் தழுவினார்.

அதன்பிறகு, அவருடைய சொந்த ஊர் அடங்கிய பண்ருட்டி தொகுதியில் 2001, 2006 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் வெற்றிபெற்றார்.

பின்னர் 2011இல் தொகுதி மறுசீரமைப்பில் அவருடைய வாக்குவங்கிப் பகுதிகளில் கணிசமானவை, புதிய நெய்வேலி தொகுதிக்குச் சென்றுவிட்டன. மேலும், நெய்வேலி நகரியம் முழுக்க இத்தொகுதியில் வருவதால், இதன் மேம்பாட்டுப் பணிகளில் முக்கியமாகத் தலையிட்டு தீர்வுகாண்பதில் த.வா.க. ஆர்வம் காட்டுகிறது.

ஏற்கெனவே, இத்தொகுதியில் பா.ம.க. சார்பிலும் த.வா.க. சார்பிலும் போட்டியிட்டு வேல்முருகன் தோல்வியடைந்தார். ஆனாலும் இந்த முறை அதே தொகுதியைக் கேட்டு அடம்பிடித்து வருகிறார் என்கின்றன தி.மு.க. வட்டாரங்கள்.

ஆனால், வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து செய்யப்படும் நெய்வேலியைக் கைவசம் வைத்திருக்கும் தி.மு.க. தரப்பில் குறிப்பாக உள்ளூர் நிர்வாகிகள் அதை விட்டுவிட விரும்பவில்லை.

கூட்டணியில் ஒரே தொகுதியைப் பெறும் கட்சிகளின் பட்டியலில் இருப்பதால், த.வா.க.வின் கோரிக்கை நிறைவேறுமா என்பது சஸ்பென்ஸ்!

logo
Andhimazhai
www.andhimazhai.com