இலங்கையில் இனப் படுகொலைப் போர் முடிந்து பதினாறு ஆண்டுகள் ஆகியும், இன்னும் போர்க் குற்றத்துக்கான நீதிக் குரல் ஓயவில்லை.
குறிப்பாக, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நடந்த போர்க்குற்றத்துக்குப் பொறுப்பேற்றுக்கொள்வது, இரு தரப்புகளுக்கும் இடையே நல்லிணக்கம் என்பது தொடர்பாக, அவ்வப்போது உத்தேசத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இலங்கைப் போர்க் குற்றம் தொடர்பாக முள்ளிவாய்க்கால் போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு முதல் 11 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
போரைத் தொடர்ந்தும் 2012, 2013, 2014, 2015, 2017, 2019, 2021, 2022, 2024 ஆகிய ஆண்டுகளில் வரிசையாகப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையைப் பொறுத்தவரை, ஐ.நா.வில் உள்ள அனைத்து நாடுகளும் இதில் இடம்பெறுவது இல்லை. ஒரு நேரத்தில் 47 நாடுகள் மட்டுமே உறுப்பினராக இடம்பெற முடியும்.
அந்த நாடுகளுக்கு மூன்று ஆண்டுகள்வரை இந்த உறுப்புரிமை தொடரும். இப்படியான சூழலில், இலங்கை விவகாரம் மனித உரிமைப் பேரவையில் விவாதத்துக்கு வரும்போது, உறுப்பு நாடுகளுக்கு இடையே நிலைப்பாடுகள் மாறும். அதையொட்டி தீர்மானங்கள் வெற்றிபெறவோ தோல்வி அடையவோ செய்யும்.
இப்படியாக, இப்போது நடைபெற்றுவரும் மனித உரிமைப் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரிலும் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. வழக்கமாக, இலங்கை தொடர்பான தீர்மானத்தை விவாதத்துக்கு விடுவார்கள். அப்போது அந்தந்த நாடுகள் தத்தம் கருத்தைத் தெரிவிக்கும். ஆனால் கடந்த 6ஆம் தேதியன்று கொண்டுவரப்பட்ட- இலங்கையில் மனித உரிமை மீறல்களை மேம்படுத்துவது, போர்க்குற்றத்துக்குப் பொறுப்புக்கூறுவது ஆகியவை தொடர்பான 60/1 தீர்மானம், அப்படியே அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது, அதன்மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. இதில் இலங்கை அரசின் சார்பாக எந்த எதிர்வினையும் உடனடியாக ஆற்றப்படவில்லை.
தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் காரணமாக, ஏற்கெனவே இலங்கையில் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அங்கேயே தொடர்ந்து நீட்டிப்பதற்கு தீர்மானத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முன்னதாக, அக்டோபர் முதல் தேதியன்று இந்தத் தீர்மானத்தின் வரைவானது உறுப்பு நாடுகள் அனைத்துக்கும் முன்வைக்கப்பட்டது. பின்னரே 6ஆம் தேதியன்று தீர்மானமாகக் கொண்டுவரப்பட்டது. இருபத்து இரண்டு நாடுகள் இதற்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டன. முக்கியமாக, பிரிட்டன், கனடா, மலாவி, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்கவை.
வழக்கம்போல, தீர்மானத்தை எதிர்ப்பதாக இலங்கை அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
அந்நாட்டில் அறகலய போராட்டத்துக்குப் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, சிங்கள இடதுசாரித் தீவிரவாத அமைப்பாக இருந்த ஜேவிபி தலைமையிலான அரசாங்கம் புதிதாகப் பதவியேற்றது. தமிழ் மக்கள் மத்தியிலும் கணிசமான ஆதரவைப் பெற்ற அந்தக் கட்சியின் கூட்டணி அரசாங்கம், சிங்கள- தமிழ் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த தாங்கள் பாடுபடுவதாகவும் எனவே தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள வெளிநாட்டுத் தீர்வு முறை தேவையில்லை என்றும் வாதிடப்பட்டது.
ஆனால், ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அண்மைய அறிக்கையில், அரசு கூறுவதற்கு மாறாகவே யதார்த்தம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது மட்டுமின்றி, யாழ்ப்பாணம் அருகே நான்கு மாதங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட அகழ்வுச் சோதனையில், பெரிய மனிதப் புதைகுழி கண்டறியப்பட்டது. இதுவரை தோண்டியெடுக்கப்பட்டதில் 240 மனித உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இதில் ஒரு வயதுக்கும் குறைவாக உள்ள பிஞ்சுக் குழந்தைகளின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டது, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களையுமே உலுக்கி எடுத்துவிட்டது.
இவர்கள் எல்லாம் எந்தக் காலகட்டத்தில் அங்கு புதைக்கப்பட்டார்கள் என்பது இனிதான் தெரியவரும்.
இறுதிப் போர் எனப்படும் முள்ளிவாய்க்கால் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உறுதியாகவும் அதிகாரபூர்வமாகவும் தெரிவிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களில், போர் தொடங்குவதற்கு முன்னர் உயிரோடு இருந்து பின்னர் காணாமல்போனவர்கள், போர் முடிவடைந்த பின்னர் குடும்பத்தினர் முன்னிலையில் சரண் அடைந்த போராளிகள், இயக்கத்தைச் சார்ந்த மற்ற பணியாளர்கள், இயக்கத்துக்குத் தொடர்பே இல்லாமல் கைதுசெய்யப்பட்டவர்கள் (குடும்பத்தினர், நண்பர்கள் முன்னால், போரில் கொல்லப்பட்டவர்கள் தவிர) என பொதுவாகக் கருதப்படுகிறது.
இதற்கு முன்னர் பல்வேறு நாடுகளின் தலைவர்களும், ஐநா அதிகாரிகளும் இலங்கைக்குச் சென்றபோதெல்லாம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தங்களுடைய கோரிக்கையை முன்வைப்பதும் முறையிடுவதும் தொடர்ந்துவருகிறது.
பெரும்பாலும் பெண்களே இதில் அதிக அளவில் பங்கெடுத்து வருகிறார்கள். வட இலங்கையின் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஈழத்தமிழர்கள் இன்றுவரை, தங்களின் அன்புக்குரியவர்களைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களுடையே ஒரே கேள்வி, எங்கள் உறவுகள் என்னவானார்கள்?
அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியவேண்டும்.
அண்மையில் வெளியே வந்த மனிதப் புதைகுழிகள் ஓர் உண்மையைப் பளிச்செனச் சொல்கின்றன. இதையும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.
இப்போதைக்கு இந்தத் தீர்மானம் நிராகரிக்கப்படாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது சிறிதாவது சாதகம்தான். இதற்கு அடுத்து, மனிதப் புதைகுழி குறித்து இன்னும் விரைவாக ஆராய்ந்து, உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதுதான் குறைந்தபட்ச நீதியாக இருக்கும்.
அதுவே, போர்க்குற்றத்துக்கான நீதியை வழங்குமா சிங்களப் பெரும்பான்மை இலங்கை அரசு என்பதன் அறிகுறியாகவும் இருக்கும்.