ஆதார் தொல்லைகள் இனி இல்லை - வருகிறது ஒரே ஆப்பு!

ஆதார் செயலி
ஆதார் செயலி
Published on

ஆதார் அடையாள அட்டை விவரங்களைச் சேர்ப்பது, புதுப்பிப்பது ஆகியவற்றுக்காக இனி மெனக்கெட்டு அலைய வேண்டியதில்லை. ஆதார் மையங்களைத் தேடி வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.

ஆம். இ-ஆதார் எனப்படும் மின்னணு ஆதார் வசதி மூலம் வீட்டிலிருந்தே நீங்கள் பெயர், பிறந்த நாள், முகவரி முதலிய தனிப்பட்ட விவரங்களை சரிசெய்யவோ புதுப்பிக்கவோ முடியும். இதற்கான தனிச் செயலியை மைய அரசின் தனித்துவ அடையாள அமைப்பு - யுஐடிஏஐ உருவாக்கி வருகிறது.

ஆதார் எண் உள்ளவர்கள் அனைவரும் இதைப் பயன்படுத்த முடியும். தொடக்கத்தில் குறிப்பிட்ட சில விவரங்களை மட்டும் அப்டேட் செய்யக்கூடியதாக இருக்கும். பிறகுதான் மற்ற வசதிகள் கிடைக்கும் அளவுக்கு மேம்படுத்தப்படும்.

இன்னும் இந்தச் செயலி உருவாக்கம் இறுதி வடிவத்துக்கு வரவில்லை என்றாலும், ஆண்டுக் கடைசிக்குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்பதை மட்டும் யுஐடிஏஐ தரப்பில் உறுதிபடச் சொல்கிறார்கள்.

பயனாளர்களுக்கு ஆதார் அட்டை நடைமுறைகளை எளிமைப்படுத்தித் தருவதுதான் இதன் நோக்கம் என்கிறார்கள், அதிகாரிகள்.

மின்னணு ஆதார் என்பதன் நோக்கமே, ஆதார் மையங்களுக்கு நேரில் போகவேண்டிய சிரமத்தைக் குறைத்து, தங்கள் செல்பேசியிலேயே குறிப்பிட்ட விசயங்களைச் செய்துகொள்ள முடியும் என்பதுதான்!

ஆதார் பயனாளர்கள் வரும் நவம்பர் மாதம் முதல் விரல் ரேகை, கருவிழிப் பதிவு போன்ற பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கு மட்டும் ஆதார் சேவை மையங்களை நாடினால் போதும் எனும் நிலை உருவாகும் என்பது அதிகாரிகளின் நம்பிக்கை.

மக்களுடைய நேரம், ஆற்றல், அலைக்கழிப்பு ஆகியவற்றைக் குறைப்பது ஒரு புறம் என்றால், அரசாங்கத்துக்கு ஆதார் முறையில் தற்போதுள்ள பல குறைகளையும் போக்க முடியும் என நினைக்கிறது. முதலில் பெரிய சுமையாக இருக்கும் காகித முறை, பிறகு, போலி ஆதார் அட்டை- இவை இரண்டையும் குறைப்பதும் இதில் முக்கிய பலன் என்கிறார்கள் யுஐடிஏஐ தரப்பில்.

இதில் இன்னொரு முக்கிய அம்சமும் உண்டு. புதிய முறையின் மூலம் உங்களின் பிறந்த நாள், வருமான வரிக் கணக்கு பான் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், ரேசன் அட்டை, நூறு நாள் வேலைத் திட்டம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவரங்களையும் ஒருங்கே திரட்டிக்கொள்ளுமாம்.

முகவரியை உறுதிசெய்ய மின் கட்டண இரசீதையும் கேட்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

அதாவது, குடிமக்களின் பெரும்பாலான தனிப்பட்ட தகவல்களும் ஆதார் மூலம் அரசாங்கத்தின் கைகளில் சென்று சேரும்படியாகவும் நிச்சயம் இது இருக்கும்!

logo
Andhimazhai
www.andhimazhai.com