வார்த்தைகளைக் கொட்டிய வைகோ- தந்தையைக் காக்க முயலும் துரை!
தேர்தல் வந்துவிட்டாலே அரசியல் கட்சிகளுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு சுறுசுறுப்பு வருமோ, தீயாய் வேலையில் இறங்கிவிடுகின்றன. இதே வேகத்தை ஆண்டு முழுவதும் காட்டலாமே என்கிற வாசகர்களின் மன ஓசை அதாங்க மைண்டுவாய்ஸ் கேட்கிறது. அது ஒருபக்கம் இருக்கட்டும்.
நடந்தது என்னவென்றால்...
கடந்த 9ஆம் தேதி, விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வைகோ கலந்துகொண்ட ம.தி.மு.க. கூட்டம் நடைபெற்றது. அந்தக் கட்சியின் நெல்லை மண்டல ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம், அது.
பழைய கட்டைக் குரலில் வைகோ ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார். மாலையில் தொடங்கிய கூட்டம் இரவுநேரம் வந்தும் மேடைப்பேச்சால் நீண்டுகொண்டிருந்தது.
அப்போது, பா.ஜ.க. சார்பு என விமர்சிக்கப்படும் ஊடகங்களைச் சேர்ந்த சில ஒளிப்பதிவாளர்கள், கூட்டத்தில் இருந்த காலியான நாற்காலிகளைப் படம்பிடித்தனர். வைகோ அதைப் பார்த்து அவருக்கே உரித்தான படபடப்புடன் சத்தம்போடத் தொடங்கிவிட்டார்.
இப்படியான நேரங்களில் அவர் நிதானம் தவறிவிடுவதும் உண்டு. முன்னர் பல முறை அவர் கோபப்பட்டு தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டு சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்.
சிறந்த பாலிமெண்டேரியன் என்று பெயர் எடுத்த வைகோ, அவை கண்ணியத்தை மீறும்படியாக அதாவது அன்பார்லிமெண்டரியாகப் பேசிவிட்டார். “காலி சேரப் படம் எடுக்க காலிப் பயதான் இங்க வருவான். உன் டிவியில போட்றதுக்காகப் படம் பிடிக்கிற... காலி சேர்(நாற்காலி)களைப் படம்பிடிக்கிறயே ஏம்பா உனக்கு அறிவிருக்கா... வெளில ஆயிரம் பேர் இருக்காங்களே அதப் போய் படம் பிடிக்கமாட்டியா...” என்று வார்த்தைகளை விட்ட வைகோ, கட்சியினரிடம் கேமராக்களைப் பிடுங்கி பிலிமை உருவுமாறு சொன்னார். (பழைய காலத்து நெனைப்பு பேராண்டி)
எந்தத் தலைவன் சொன்னாலும் கொள்கையை உடனடியாகக் கடைப்பிடிக்கிறார்களோ இல்லையோ அடிடா பிடிடா என்றால், பாய்ந்து பிறாண்டிவிடுகிறார்கள், தொண்டர்கள் பெயரில் இருக்கும் சில குண்டர்கள். ஆமாம், எல்லாரையும் வைகோவைப் போலவே நாமும் குறிப்பிட்டுவிட முடியாது. அங்கும் குண்டர்கள் செய்தியாளர்களைத் தாக்கி காயமும் ஏற்படுத்தினார்கள்.
செய்தியாளர்கள் மீதான இந்தத் தாக்குதலுக்கு செய்தியாளர் அமைப்புகள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அப்பட்டமாக வைகோவின் அராஜக உத்தரவை தொலைக்காட்சிகளிலும் வலைக்காட்சிகளிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பினார்கள்.
அதையடுத்து, மறுநாள் சென்னையில் நடைபெற்ற மண்டல செயல்வீரர் கூட்டத்தில் பேசிய வைகோ, தான் செய்தியாளர்களைத் தவறாக ஒன்றுமே சொல்லவில்லை என சாதித்தார். அவர்களைக் கண்ணியமாகப் பேசியதாகவும் பச்சையாகப் பொய் கூறினார்.
திருச்சியில் இதுகுறித்து விளக்கம் அளித்த அவரின் மகன் துரையும், தன் தந்தை கோபக்காரர் எனவும் அவருக்குக் கோபம் வந்தால் எப்படி நடந்துகொள்வார் என்பது எல்லாருக்கும் தெரியும் என்கிறபடி விளக்கம் தரவே அதிகமாக முயன்றாரே தவிர, தன் அப்பா செய்தது ஒரு குற்றம் என்பதை உணர்ந்ததாகவே தெரியவில்லை.
ஆனால் பாருங்கள், இந்த வைகோ தன் மேடைகளில் இன்னமும் முழங்குகிறார், பாசிசம் ஒழியவேண்டும், ஜனநாயகம் மலரவேண்டும்.
இந்த வழியில் ஜனநாயகம் எப்படி மலரும்?