அவன் பொருளையே எடுத்து அவனைப் போட்றது... ப.சிதம்பரம் பற்றி விஜய் முக்கிய முடிவு!

Published on

தமிழ்த் திரைப்பட சண்டைக் காட்சிகளில் அடிக்கடி வரும் பிரபல வசனம், ’எதிரி பொருளை எடுத்து அவனையே போட்றது’... இப்படி வெற்றிக் களிப்புடன் வில்லன்கள் பேசிக்கொள்வதைப் போலவே அரசியல் தளத்தில் நாயகர்களும் பேசிக்கொள்ளும் தருணங்களும் அமைவது உண்டு.

அறுதிப் பெரும்பான்மை பெறாத விஜய் தலைமையிலான த.வெ.க., தி.மு.க. கூட்டணியிலிருந்த கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்தது. அத்துடன் இடதுசாரிகள் தவிர்த்த கட்சிகளை அமைச்சரவையிலும் சேர்த்துக்கொண்டது. ஆனால் விஜய் தலைமையில் கூட்டணி என அறிவிக்கப்படவில்லை.

இந்தப் பின்னணியில், இம்மாதம் முதல் நாளன்று மாமல்லபுரத்தில் த.வெ.க. தோழமைக் கட்சிகளின் கூட்டம் ஒன்றை நடத்தினார், முதலமைச்சர் விஜய். ஆனால் அதில் கலந்துகொள்ள முடியாது என முன்னரே இடதுசாரிக் கட்சிகள் தெரிவித்துவிட்டன.

காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக் கட்சிகளின் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதில் கலந்துகொண்டனர்.

ஆனால், கூட்டணியின் பெயர்கூட அதில் முடிவுசெய்யப்படவில்லை. அடுத்த கூட்டங்களில் இதுகுறித்து தீர்மானிக்கப்படும் என்று மட்டும் தமிழக காங்கிரசின் புதிய தலைவர் மாணிக்கம் தாகூர் சொன்னார். கிட்டத்தட்ட, அவர் அந்தக் கூட்டத்துக்கான செய்தித்தொடர்பாளரைப் போல, கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரைப் போல ஊடகத்தினரிடம் பேசினார்.

அதுவே அவருடைய ஆசையும் என்கின்றன விஜய் கட்சி வட்டாரங்கள். ஆனால், மூத்தவர்களில் யாராவது ஒருவரைத்தான் அந்தப் பதவியில் அமர்த்துவது அரசியல் மரபு. அப்படிப் பார்த்தால் வைகோ அந்தப் பட்டியலில் வருகிறார். அவருக்கு அடுத்து ப.சிதம்பரம் வருகிறார். வைகோ உணர்ச்சிமயமானவர் என்பதால் விஜய்க்கு யோசனையாக இருக்கிறது என்கிறார்கள்.

சிதம்பரத்தை அந்த இடத்தில் அமரவைப்பதில்தான் அவருக்கு விருப்பார்வம் என்றும் சொல்கிறார்கள். காரணம், கூட்டணியின் முதல் கட்சியாக காங்கிரஸ் கைகோத்தாலும்கூட, தி.மு.க.வுடனும் இந்தியா கூட்டணி தொடரவேண்டும் என நினைப்பவர்களில் சிதம்பரம் முக்கியமானவர்.

இதுவே, விஜய்க்கு அவரை ஒருங்கிணைப்பாளராக ஆக்க வேண்டும் என்பதன் பின்னணியாகவும் அமைந்துவிட்டது என்பதுதான்!

ஏதாவது தெளிவில்லாதபடி தோன்றினால், தலைப்பை மீண்டும் வாசியுங்கள்!

logo
Andhimazhai
www.andhimazhai.com