பதின்மூன்று நாள்களாக தலைநகர் சென்னையில் போராடி ரிப்பன் மாளிகைப் போராட்டத்தை வரலாற்றுப் பதிவாக ஆக்கிவிட்டனர், தூய்மைப் பணியாளர்கள்.
இவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று, தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி தங்களைப் பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பதுதான்!
ஆனால் வாக்குறுதி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் உள்ள சேகர்பாபுவோ, ”அப்படியா, யார் சொன்னது; எடுத்துக்கொடு” என்று, கேள்வி கேட்ட செய்தியாளரிடமே எகிறுகிறார். சென்னை மேயரோ இப்படியொரு சங்கதி வேறு யார் தொடர்புடையதோ என்கிறபடி, அந்தப் பேச்சுக்கு உள்ளேயே போகவில்லை.
காட்சி ஊடகங்களில் இதை நேரடியாகப் பார்த்த துறைக்குச் சம்பந்தமில்லாத பொது மக்கள், உண்மையில் என்னதான் நடந்தது என்று குழப்பம் அடைந்தனர். அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் தி.மு.க.வின் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளை அச்சொட்டாக அப்படியே எடுத்து, சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
போராட்டக் குழுவின் இந்தச் செயல்பாட்டைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தி.மு.க. ஆதரவு கருத்துப் பரப்பல் அணியினர், போராட்டத்தை ஆளும் கட்சிக்கு எதிராகப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என வேறு சில தரப்புகளைக் குற்றஞ்சாட்டினார்கள்.
உருப்படியாக மிகச் சிலர் மட்டுமே தி.மு.க. கடந்த காலத்திலிருந்து தூய்மைப் பணியாளர்களுக்காக நல்லன செய்தது என்று குறிப்பிட்டனர். அவர்களும் ஏனோ மேற்கொண்டு விவரமாக எதையும் கூறவில்லை.
சரி, தி.மு.க. இதுவரை என்னதான் செய்திருக்கிறது என ஒரு பருந்துப் பார்வையில் பார்ப்போம்.
நலவாரியத்தில் 3.25 இலட்சம் பேர் சேர்ப்பு
முதல் முறையாக 2007இல் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்களின் செயலாக்கத்தைக் கண்காணித்து முன்னேற்றுவதற்காக தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியம் தொடங்கப்பட்டது.
இந்த வாரியத்தில் 3.25 இலட்சம் பேர் உறுப்பினர்களாகப் பதிந்துள்ளனர். இதுவரை 9,969 பேருக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 11.96 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கருணாநிதியின் தலைமையிலான ஆட்சியில் 2008ஆம் ஆண்டு முதல் 2010வரையிலான காலகட்டத்தில், இவ்வாரிய உறுப்பினர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு மூன்று கோடி ரூபாய் அளவுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இடையில் 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆண்ட பிறகு, மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி வந்ததுமுதல் 2021-22ஆம் நிதியாண்டில் வாரியத்தின் பல்வேறு உதவித்தொகைகள் உயர்த்தப்பட்டன. அதற்காக, 1.53 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அடுத்த நிதியாண்டில் மொத்தம் 68,700 பேர் உறுப்பினர்களாகப் பதிவுசெய்யப்பட்டனர். அவர்களின் நலத்திட்டங்களுக்காக 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
ரூ.110 கோடியில் ஆயிரம் வீடுகள்
அதே நிதியாண்டில், வீடற்ற 500 தூய்மைப் பணியாளர்களுக்கு 55 கோடி ரூபாயில் வீடு வழங்க நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதில் 448 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டன.
2023-24ஆம் நிதியாண்டில் மேலும் 552 வீடுகள் என மொத்தம் 110 கோடி ரூபாயில் வீடுகள் வழங்கப்பட்டன. இந்த வீடுகளுக்கு பயனாளிகள் 10 சதவீதம் செலுத்தவேண்டும். வாரியம் 90 சதவீதம் தொகையைச் செலுத்தும்.
இவற்றைத் தவிர ஆதிதிராவிடர் நலனுக்கான பல திட்டங்களில், தூய்மைப் பணியாளருக்கும் உரிமை உண்டு. ஆனால் குறிப்பாக எத்தனை பேர் அவற்றின் மூலம் பயன்பெற்றனர் என்கிற விவரம் வெளிப்படையாக இல்லை.
இதேசமயம், நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் குறிப்பாக இந்தப் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற சென்னையில் கழிவகற்றுவதில், மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் அவலத்தைத் தவிர்க்க, கழிவகற்றலை இயந்திரமயம் ஆக்குவது என இந்த அரசாங்கம் முடிவெடுத்தது. அதன்படி, 2020-21ஆம் நிதியாண்டில் 245 தூர்வாரும் இயந்திரங்கள், 119 ஜெட்ராடிங் இயந்திரங்கள், 29 ஜெட்டிங்- உறிஞ்சு இயந்திரங்கள், 53 அதிவேக உறிஞ்சு இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பயன்பாட்டுக்கும் விடப்பட்டன என்பது அரசின் அதிகாரபூர்வ தகவல்.
இது படிப்படியாக ஒவ்வோர் ஆண்டும் அதிகரிக்கப்பட்டது.
2021-22ஆம் நிதியாண்டில் இந்த இயந்திரங்களின் எண்ணிக்கை முறையே 258, 114, 28, 54 ஆகும்.
2022-23ஆம் நிதியாண்டில் 282, 129, 32, 57 என சற்றே எண்ணிக்கை கூடியது.
2023-24 ஆம் நிதியாண்டில் 300, 142, 35, 60 ஆக இருந்தது.
2024-25 ஆம் நிதியாண்டில் 300, 141, 35, 63 என இருந்தது.
நடப்பு ஆண்டு மார்ச் நிலவரப்படி, 299 தூர்வாரும் இயந்திரங்கள், 181 ஜெட்ராடிங் இயந்திரங்கள், 45 ஜெட்டிங்- உறிஞ்சு இயந்திரங்கள், 73 அதிவேக உறிஞ்சு இயந்திரங்கள், மூன்று கழிவுநீர் ஊர்திகள் என கழிவுநீரகற்றலில் இயந்திரமயத்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தலைநகர் சென்னையின் பெருநகர எல்லை விரிவாக்கப்பட்ட நிலையில், இத்துடன் இணைக்கப்பட்ட பழைய புறநகர்ப் பகுதிகளும் சென்னைக் குடிநீர்- கழிவகற்றல் வாரியத்தின் பொறுப்புக்குள் கொண்டுவரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.