ஷேர்... ஷேரிங் - அன்புமணி மீது இராமதாஸ் வெடித்த பின்னணி!

Ramadass- Anbumani
இராமதாசு- அன்புமணி
Published on

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா சொன்னதைப் போல, குடும்பப் பிரச்னையை இப்படிப் பொதுவெளியில் கொண்டுவந்தது இராமதாசின் தவறு என்கிற குரல்களை பா.ம.க.வின் பெரும்பாலான தொண்டர்கள் சொல்கிறார்கள்.

இன்றைக்கு இராமதாசே சொல்லியிருப்பதைப் போல, நாலு சுவருக்குள் பேசிமுடிக்க வேண்டியதை நாலெட்டு திசைக்கும் போகும்படி ஐயா வெடித்துவிட்டாரே என்பது அவர்களின் ஆதங்கம்!

மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. இரண்டு உறுப்பினர்களைத் தேர்வுசெய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும் நிலையில், அன்புமணிக்கு மீண்டும் அதே எம்.பி. பதவியைத் தக்கவைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த நேரத்தில் கட்சிக்குள் ஒற்றுமையாக இருப்பதுதானே கூட்டணித் தலைமையிடம் அழுத்தமாகப் பேசுவதற்கு சாதகமாக இருக்கும். அப்படி சாதகமாக இருக்காவிட்டால்கூட பரவாயில்லை, பாதகமாகவா நடந்துகொள்வது என்பதே பா.ம.க.வின் நலன்விரும்பிகள் மட்டுமல்ல, மற்ற பல கட்சிகளிலும் உள்ள வன்னியர் தரப்புகளின் ஆதங்கமாகவும் இருக்கிறது.

இதுவரை நடந்தது என்னென்ன என்பதை மீண்டும் விவரித்தால், கூறியன கூறலாகத்தான் அது இருக்கும். சுருக்கமாகப் பார்த்தால், இந்த உள் பஞ்சாயத்தில் அரசியல் பிரச்னையும், குடும்பப் பிரச்னையுமாக நீடித்துவந்த முரண்பாடுகள் உருத் திரண்டு எரிமலையாய் வெடித்துவிட்டன என்பதுதான்.

அரசியலாகப் பார்த்தால், மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சராக(அன்புமணி) இருந்த நிலையெல்லாம் படிப்படியாகக் குன்றி, ஒரு மக்களவைத் தொகுதி உறுப்பினர்கூட இல்லாத நிலைக்கு வந்திருக்கிறது, பா.ம.க.!

சட்டப்பேரவையில் கடந்த தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களைப் பிடித்ததே, பா.ம.க.வுக்குப் பெரும்பாடாக ஆகிவிட்டது.

இப்போது 80 வயதாகும் இராமதாஸ், அவரின் மகன் அன்புமணியைத் தொடர்ந்து அன்புமணியின் மகள்களும் அரசியலுக்குள் நுழைந்துவிட்டார்கள். அதாவது, பா.ம.க.வில் மூன்றாம் தலைமுறை தலையெடுக்கத் தொடங்கிவிட்டது.

ஆனால், ஓர் அரசியல் கட்சியாக அதனால் உரிய இடங்களை அறுவடை செய்யமுடியாமல் இறங்குமுகத்திலேயே இருக்கிறது, கடந்த மூன்று தேர்தல்களிலுமே!

சட்டமன்றம் மட்டுமல்ல நாடாளுமன்றத்திலும்தான்!

வெளிப்படையாகவே வன்னியர் சாதிச் சங்கத்தையே கட்சியின் ஒரு அங்கமாக வைத்திருக்கும் பா.ம.க., அந்தச் சாதியின் வாக்காளர்களிடம் குறிப்பாக அடுத்த தலைமுறையினரிடம் நம்பிக்கையைப் பெறவில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

வாக்குகளின் அளவை வைத்துப் பார்த்தால், சராசரியாக கடந்த 4 தேர்தல்களில் 19 இலட்சம் வாக்குகளை இந்தக் கட்சி பெற்றுள்ளது. ஆனால், எதிர்க் கட்சியைவிட எத்தனை வாக்கு கூடுதல் என்பதுதானே தீர்மானிக்கும் காரணி? அதற்கு பெரும்பாலான கட்சிகளும் கவர நினைப்பது திடமான வாக்காளர்களை!

வட தமிழகத்தைப் பொறுத்தவரை தே.மு.தி.க.வின் வருகையால் பா.ம.க., வி.சி.க.வின் வாக்குகளில் கணிசமானவை விஜயகாந்த் பக்கம் தாவின என உறுதியாகச் சொல்லமுடியும்.

அதையடுத்து, ஒரே கூட்டணியைவிட்டு இரு கட்சிகளும் வெளியே வந்ததன் மூலம் ஓரளவுக்கு புதிய கட்சியைச் சமாளிக்க முடிந்தது.

மீண்டும் அப்படியொரு சூழல் விஜய்யின் புதிய கட்சியால் பல கட்சிகளுக்கும் வந்திருக்கிறது; பா.ம.க. உட்பட என்பதைத் தனியாகச் சொல்லவேண்டியதில்லை.

ஊர் ஊராகப் போய் கட்சியை வளர்த்த இராமதாசுக்கு, இதை எளிதாகச் சரிசெய்துவிட முடியும் என்பது அவரின் உறுதியான நம்பிக்கை. ஆனால் அவருடைய எதிர்பாப்புகள் பொய்த்துப்போகின்றன. தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் அப்படி சரியாக நடந்துவிடும் என்பதும் அவருடைய எண்ணமாக வெளிப்படுகிறது. அதுவே ஒரு கட்டத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், பகிரங்கமாக வெளிப்பட்டது.

தன் மகளின் மகனான முகுந்தனை இளைஞரணித் தலைவராகவும் அவர் அறிவித்தார். உடனே, தன் கையிலிருந்த மைக்கை தூக்கிப்போட்டும் காலை ஆட்டியபடியும் ஊடக நேரலை ஓடிக்கொண்டிருக்கையிலேயே அன்புமணி கடுமையான கோபத்தைக் காட்டினார். அது அப்பா இராமதாசை மேலும் கோபமாக்கி, அந்த மேடையே சூடாக மாறிப்போனது.

அதில் சமாதானம் ஆனதாகச் சொல்லப்பட்டாலும், கட்சியின் தலைவராக அன்புமணியை நீக்கிவிட்டு, தானே இனி தலைவரென்றும் அறிவிப்பு செய்தார், இராமதாசு. கட்சியின் முக்கிய நிர்வாகிகளோ கடுமையான சங்கடத்தில் சிக்கிக்கொண்டு, இரண்டு பேருக்கும் இடையில் தவித்தனர்.

இதனிடையே, மாநிலங்களவைத் தேர்தல் அறிவிப்பு வந்துள்ள நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு வருவது ஒரு புறம் என்றால், அன்புமணியே தொடர்வாரா என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது.

இந்தப் பின்னணியில்தான் இன்று காலையில் முன்னரே அறிவித்தபடி, செய்தியாளர்களைக் கூட்டிய இராமதாசு, அன்புமணியைப் பற்றி குமுறிக் கொட்டிவிட்டார். இனி எந்த சமாதானம் செய்யப்பட்டாலும் அது எந்த அளவுக்கு ஒட்டும் என்கிற அளவுக்கு, குடும்பப் பிரச்னை அரசியல் பிரச்னையாக மாறிநிற்கிறது.

இராமதாசின் கூற்றுப்படி, பா.ஜ.க.வுடன் கடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைக்க அன்புமணியும் சௌமியாவும் காலைப் பிடித்துள்ளனர். இராமதாசின் கடந்த கால பிரபல வசனங்கள் எல்லாம், தண்ணீரில்தான் எழுதப்பட வேண்டும் என்கிற அளவுக்கு தேர்தலுக்குத் தேர்தல் மாறிக்கொண்டே இருக்கும் என்பது பொது.

இதில் அன்புமணியைப் பொறுத்தவரை, குறிப்பாக பா.ஜ.க. மத்திய ஆட்சிக்குப் பிறகு வந்த மக்களவைத் தேர்தல்களில் அந்தக் கட்சியுடன் கூட்டுவைப்பதில் அவ்வளவு தீவிரம் காட்டிவருகிறார். ஒன்று, அவர் மீதுள்ள வழக்கு; அடுத்தது, ஐந்தாறு இடங்களில் வென்றுவிட்டால் எப்படியாவது மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்துவிடலாம் என்பது அன்புமணி தரப்பின் கணக்கு எனச் சுட்டுகிறார்கள், பா.ம.க. வட்டாரத்தில்!

ஆனால், இராமதாசுக்கு கடந்த தேர்தலில்கூட கடைசிவரை பா.ஜ.க. அணிக்குப் போவதில் விருப்பார்வமாக இல்லை. கடைசிவரை அது இழுபறியாகவே இருந்தது. அ.தி.மு.க.தான் அவருடைய முன்னுரிமை விருப்பம்!

முரண் நிலை பெரிதாவதற்கு முன்னர்வரை, இராமதாசுக்கு எதிலாவது கருத்து மாறுபாடு இருந்தால்கூட, அதில் அன்புமணி வேறு ஒரு முடிவை எடுத்து அவரை ஒப்புக்கொள்ள வைத்துவிடுவார். இன்றைய பெரு வெடிப்பில் அன்புமணி அப்படி எதுவும் இப்போதைக்கு செய்துவிடமுடியாது! அந்த அளவுக்கு அப்பா- மகன் உறவுக்குள் சிக்கலாகி காயம் பெரிதாகிவிட்டது.

வன்னியர் சங்கம் கட்டிய பாணியில் கட்சியையும் நடத்தப் பார்க்கும் இராமதாசுக்கு, கட்சியின் சட்டதிட்டம்கூட சாதகமாக இல்லை. சூழலும் மோசம். பா.ம.க. வரலாற்றிலேயே இராமதாசு கூட்டிய மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில், முக்கால்வாசிப் பேர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது, இப்போதுதான்.

எனில், இது கட்சியின் கட்டுப்பாடு யார் கையில் இருக்கிறது என்பதைக் காட்டுவதாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக, தேர்தல் காலம், ஆட்சியில் பங்கேற்பது போன்ற தருணங்களில், ஒட்டுமொத்த குடும்பத்தினரிடமும் மகிழ்ச்சியான விசயங்களைப் பகிர்ந்துகொள்வது இராமதாசின் வழக்கம்.

கடந்த தேர்தலோ வரும் தேர்தல்களோ இந்தப் பங்கேற்பும், பகிர்வும் இல்லாமல் போய்விடும் என்கிற நிலை வந்துவிட்டது, இராமதாசுக்கு!

அவரே கூறியிருக்கிறபடி, கடந்த மக்களவைத் தேர்தல் கூட்டணியை அன்புமணியும் அவரின் மனைவியும்தான் தீர்மானித்திருக்கிறார்கள்.

அண்மையில் நடைபெற்ற மாமல்லபுரம் சித்திரைத் திருவிழாவிலும் தம்பதியரின் செல்வாக்கையும் அவர்களுக்கான ஆதரவையும் பார்க்கமுடிந்தது.

அதாவது, இராமதாசையும் மீறி அடுத்த தலைமுறை இவர்களின் பின்னால் நிற்கிறது.

(தேர்தல் போன்ற பொதுக் களத்தில் இவர்களின் செல்வாக்கு, எந்த அளவுக்கு வெற்றியாக மாறும் என்பதுதான் முக்கியம் என்பது தனி.)

எப்படியோ, இதில், அன்புமணி, அவரின் மனைவி, மகள்கள் என கிளைத்த ஒரு குடும்பத்துக்கு பங்கு இருக்கிறது. ஆனால், கட்சியை நிறுவிய இராமதாசின் மற்ற பிள்ளைகளான மகள்களுக்கோ அவர்களின் பிள்ளைகளுக்கோ பங்கு இல்லையா, அவர்களுக்கான இடம்தான் என்ன என குடும்பத்துக்குள் அரசியல் பிரச்னை வெளிப்படையாகவே பேச்சாகி இருந்திருக்கிறது. முற்றி முற்றி அது இப்போது பகிரங்கமாக வெடித்திருக்கிறது.

தனக்கு அடுத்து அன்புமணிதான் என்பதில் இராமதாசுக்கும் பிரச்னையில்லை; அவரே கண்ட கனவுதானே இது? ஆனால் இதுவரை இராமதாசின் மகள்கள் உட்பட்ட கூட்டுக் குடும்பத்துக்குள் இருந்துவந்த பகிர்வு, பங்களிப்பு இல்லாமல் போகும் சூழல்தான் இராமதாசைக் கடுமையான கோபத்துக்கு ஆளாக்கியது. அதுதான் அவரின் வெடிப்புக்குக் காரணம் என்கிறார்கள், பா.ம.க.வின் உள்வட்டாரத்தில்!

logo
Andhimazhai
www.andhimazhai.com