
செங்கோட்டையன் நீக்கம் ஏன்?- பழனிசாமி
முதலில் பதவிப் பறிப்பு, இப்போது முழு நீக்கம்
புறக்கணித்த சசிகலா இப்போது வரவேற்கிறார்
ஜெயலலிதா அடித்த டிக்!
அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பா.ஜ.க. மேலிடத்துடன் நேரடித் தொடர்பில் சென்றதற்காக அ.தி.மு.க. முக்கிய பதவிகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கி வைக்கப்பட்டிருந்தார். அதையடுத்து கட்சித் தலைமையுடன் இணக்கமாகக் காட்டிக்கொண்ட அவர், ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருக்கம் பேணி வந்தார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரனுடனும் இணக்கத்தோடு இருந்துவந்தார்.
இலைமறைகாயாக இருந்துவந்த இவர்களின் ஒற்றுமை, நேற்று, பசும்பொன் முத்துராமலிங்கம் நினைவேந்தல் நிகழ்வில் வெளிப்படையானது.
மூவரும் இணைந்து ஊடகத்தினருக்குப் பேட்டி அளித்தனர்.
அ.தி.மு.க.வின் ஒற்றுமைக்குப் பாடுபடப் போவதாக அவர்கள் கூட்டாக அறிவித்தனர்.
அத்துடன், பசும்பொன்னுக்கு வந்திருந்த சசிகலாவையும் செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார்.
இந்தப் பின்னணியில் இன்று மாலையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ”அ.தி.மு.க.வின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாகச் செயல்பட்டதாலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் கட்சியினர் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து கட்சிக்கு மாசு ஏற்படும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயரும் களங்கமும் உண்டாக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் காரணத்தாலும்...” செங்கோட்டையன் நீக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இப்படியொரு சூழல் உருவாகக்கூடும் என அ.தி.மு.க. சார்ந்த வட்டாரங்களில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
நேற்றே இதுகுறித்து செங்கோட்டையனிடம் ஊடகத்தவரும் கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு, “ அப்படி நீக்கினால் எனக்கு சந்தோசம்தான்.” எனக் கூறி முடித்துக்கொண்டார்.
செங்கோட்டையன் நீக்கத்தை அவரோ அவரின் ஆதரவாளர்களோ பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலை எதைக் காட்டுகிறது?
“எத்தனையோ தேர்தல்களுக்கு ஜெயலலிதாவுக்கு பயணத் திட்டம் வகுத்துக்கொடுத்த செங்கோட்டையனுக்கு எடப்பாடி பழனிசாமியின் சக்தி எவ்வளவு எனத் தெரிந்துவிட்டது. அவர் அளவுக்கு மாநில அளவில் ஒரு சக்தியாக இல்லாத தனக்கான இடத்தைப் பற்றி அவர் கவனமாக இருக்கிறார். இடம் என்பது அங்கீகாரம் மட்டுமல்ல, அனைத்தும்.” என அர்த்தபூர்வமாகச் சிரிக்கிறார்கள் சில அரசியல் விமர்சகர்கள்.
இதையொட்டியே அவர், சசிகலாவுடனும் தினகரனுடனும் கைகோத்திருக்கிறார் என்பது அவர்களின் வாதம்.
நேர்மாறாக, செங்கோட்டையன் ஜெயலலிதாவின் கடைசிக் கட்டம்வரையிலான அணுக்க விசுவாசி; அவருடைய குடும்பப் பிரச்னையையொட்டி கோபத்தால் அவருடைய பதவியைப் பறித்தாரே தவிர, என்றைக்கும் தன்னுடைய ஜெ. அணி முதல் கட்ட விசுவாசி என்பதை ஜெயலலிதா மறக்கவில்லை என்பதை நினைவூட்டுகிற தரப்பும் உண்டு.
சசிகலாவின் இடம் ஜெயலலிதா காலத்து அ.தி.மு.க.வில் என்னவாக இருந்தது என்பது ஊரறிந்த இரகசியம். அப்போது சசிகலாவுக்கும் பிடிக்காதவராக இருந்த செங்கோட்டையன், 2016 தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் முதலில் இடம்பெறவில்லை; இறுதிசெய்வதற்கு முன்னர் ஜெயலலிதா பார்வையில் இவரின் பெயரைக் காணாதநிலையில், அவரே தன் கைப்பட, செங்கோட்டையன் என எழுதினார் என்கிறார் அ.தி.மு.க.வின் உள் விவகாரங்களை அறிந்த பத்திரிகையாளர் ஒருவர்.
ஆனால், இன்று நிலைமை தலைகீழ். ஊழல் வழக்கில் ஜெயலலிதாவோடு சேர்த்து குற்றவாளியாகி, நான்கு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த சசிகலா, செங்கோட்டையனின் இருப்பு கூடுதலாகத் தேவைப்படும் எனும் இடத்துக்கு வந்திருக்கிறார்.
உடனடியாக, சசிகலா வேட்பாளராகப் போட்டியிட்டால் என்ன ஆகும் என்பதை ஆரூடம்போலத்தான் சொல்லமுடியும். எனவே, விஜய்யின் த.வெ.க. உடன் கைகோத்து புதிய கூட்டணி காண்பது, பழைய அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பது என்பதை வலுவாக்குவதாக இருக்கும்; தனித்தனியாக பன்னீருக்கும் செங்கோட்டையனுக்கும் தினகரனுக்கும் பலனளிக்கும்; ஆனால், இதில் விஜய்யின் தரப்பு என்ன சொல்லப்போகிறது என்பதே இந்தச் சேர்க்கையைத் தூக்கிவிடவோ விலக்கிவிடவோ செய்யும் என்பது இன்னுமொரு தரப்பின் பார்வை.
அப்படியென்ன விஜய்க்கு இதில் தயக்கம் அல்லது தடங்கல்..?
கரூர் சம்பவத்தைப் பொறுத்தவரை, தான் எதிர்த்த அ.தி.மு.க. பழனிசாமி தனக்கு ஆதரவாகப் பேசியதை விஜய் மென்மையாக அணுகுகிறார். ஆனால் தினகரனோ மற்றவர்களோ விஜய்க்கு ஆதரவாகப் பேசவில்லை. இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டும் அரசியல் ஆய்வாளர்கள், விஜய்யின் திசை நோக்கி செங்கோட்டையன் தரப்பு காத்திருக்க வேண்டும் எனக் கணிக்கிறார்கள்.
