முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட அன்றைய வை.கோபால்சாமியும்- இன்றைய வைகோவுமான ம.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல் மல்லை சத்யாவரை துரோகிப் பட்டம் என்பது அந்த வட்டாரத்தில் அரசியல் கூத்தாகச் சிரிப்பாய்ச் சிரிக்கிறது.
கருணாநிதியின் அக்கா மகனும் கலாநிதி-தயாநிதியின் அப்பாவுமான முரசொலி மாறன், அந்தக் காலத்தில் தி.மு.க.வின் நாடாளுமன்ற முகம். அவருடைய இளவலாக தி.மு.க.வில் முன்னேறி வளர்ச்சி கண்டவர், அப்போது வை.கோபால்சாமி என அறியப்பட்ட வைகோ. (இனி வைகோ)
பற்றி எரிந்துகொண்டிருந்த ஈழப்பிரச்னையைப் பற்றிய 1980,90களின் வரலாறு, இப்போதைய தலைமுறைக்கு மீண்டும் எடுத்துச்சொல்லப்பட வேண்டியதாக மாறிவிட்டது.
2009ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த ஈழத்தமிழர் இனப்படுகொலை, 1983இல் இலங்கை முழுவதுமான இனவெறித் தாக்குதல் சமயத்தில், வெளிநாடுகள் தலையிடக்கூடிய ஒரு பிரச்னையாக உருவெடுத்தது. தமிழ் வம்சாவளியினர் என்பதால், தமிழ்நாட்டு அரசியல் அமைப்புகளும் கட்சிகளும் பொதுமக்களும் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகத் திரண்டனர். அப்போது தி.க., தி.மு.க.வுடன் பல்வேறு தமிழின அமைப்புகளும் மாநிலம் முழுவதும் பேரணி, போராட்டங்களை நடத்தியது.
அப்படியான சூழலில், தி.மு.க. தன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் இந்தப் பிரச்னையை நாடளாவிய கவனத்துக்குக் கொண்டுசென்றது. அதில் குறிப்பாக வைகோவும் பங்காற்றினார். தில்லியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட முரசொலி மாறனும் வைகோவும் திட்டமிட்டபடி வந்துசேர்ந்தனர்.
திடீரென வைகோவைக் காணவில்லை. கள்ளத்தோணியில் அவர் இலங்கைக்குச் சென்று, விடுதலைப்புலிகள் இயக்கத்தினரைச் சந்தித்தது அவரின் தகவல் இல்லாமல், மூன்றாம் தரப்பினர் மூலமாகவே தாமதமாக தி.மு.க. தலைமைக்குத் தெரியவந்தது.
அப்போது, அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என ஒரு தரப்பும், கூடாது என இன்னொரு தரப்புமாக தி.மு.க.வில் மாறுபாடு எழுந்தது. அதேநேரம், “தலைமையின் அனுமதி பெறாமல் முந்துதகவல் சொல்லாமல் இப்படிப் போனது, கட்சிக்கு பெரும் நெருக்கடியை உண்டாக்கிவிட்டது. இது பச்சைத் துரோகம்.” என கட்சிக்குள் ஒரு தரப்பு சாடியது.
ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுத்தால் கட்சிக்கு தொண்டர்களிடமே கெட்ட பெயர் ஏற்படக்கூடும்; அவருடைய நடத்தையையும் ஏற்கமுடியாது; இப்படியேதான் தோன்றித்தனமாகச் செயல்படவிட்டால் கட்சிக் கட்டுப்பாடு இல்லாமல் போய்விடும் எனும் நெருக்கடிக்குள் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் தள்ளப்பட்டனர்.
இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பி ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில், கருணாநிதி அப்படையை வரவேற்க முடியாது என சட்டப்பேரவையிலேயே அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்திய மண்ணில் இந்த நாட்டின் பிரதமராக இருந்த இராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் சார்பினர் படுகொலை செய்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. புலி ஆதரவாளர்கள் இதை மறுக்கவும் செய்கின்றனர்.
இந்தப் பின்னணியில், விடுதலைப்புலிகளால் கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து என மத்திய உளவுத் துறை தகவல். இந்தத் தகவலையும் அவரேதான் செய்தியாளர்களிடம் சொன்னார். உடனே வைகோ தனக்கே உரிய பாணியில் உணர்ச்சிவயப்பட்டு பேச, தலைமை அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
மு.க.ஸ்டாலினும் அப்போது அடுத்த கட்ட நிர்வாகியாக முன்னணியில் வந்துகொண்டிருந்த நிலையில், ”வாரிசு அரசியலுக்காகத்தான் கருணாநிதி வைகோவுக்கு துரோகிப் பட்டம் கொடுக்கிறார்” என்று விமர்சிக்கப்பட்டது. வைகோவும் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அப்போது அவருடன் உடனடியாக 12 மா.செ.களும் இறுதியாக 9 மா.செ.களும் நின்றனர். அவர்கள் உட்பட 400+ பேரைக் கட்சியிலிருந்து நீக்கியது, தலைமை, துரோகிப் பட்டத்தோடு!
இது நிகழ்ந்தது, 1993 நவம்பரில்!
அடுத்த ஆண்டு மே 6ஆம் தேதி ம.தி.மு.க. என தனிக் கட்சியையே தொடங்கினார், வைகோ.
அந்தக் கட்சியில் இருந்த பெரிய ஜாம்பவான்கள் குறிப்பாக மதுராந்தகம் ஆறுமுகம், செஞ்சி இராமச்சந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் கோவை கண்ணப்பன் என மூத்தோர் பலரும் தம்பி வைகோவை விட்டு விலகினர். இதில் ஆறுமுகம் தி.மு.க.வில் இருந்தபோதே, எல்லாரும் கருணாநிதியை தலைவரே என்றால் இவரோ கலைஞரே என்றுதான் கூப்பிடுவார். அந்த அளவுக்கு செல்வாக்கு கொண்டவர் வைகோவையும் கோபால்சாமி என்றுதான் குறிப்பிடுவார். அவர் பின்னர் அ.தி.மு.க.வுக்குப் போய் அங்கிருந்தபடியே இறந்துபோனார்.
அவர்கள் ஒவ்வொருவராக கட்சியிலிருந்து வெளியேறிய காலத்திலும் வைகோ உணர்ச்சியமயமாகவே பேசினார். வழக்கம்போல, துரோகிப் பட்டமும் பார்சல் ஆனது! கொஞ்சம் முன்னபின்ன வித்தியாசம் என்பார்களே, அந்த அளவுக்கு இருந்தது!
பல முக்கிய நிர்வாகிகளும் தி.மு.க.வுக்கோ அ.தி.மு.க.வுக்கோ மாறியபோதெல்லாம் வைகோ தரப்பில் ஒரு கட்டத்தில் அவர்களைத் துரோகி ஆக்கிவிடுவார்கள்.
கட்சிப் பத்திரிகையான சங்கொலியில் அப்படியான விளக்கவுரைகள், கட்டுரைகள், திடீர்க் கவிதைகள் வெளியிடப்படும்.
அத்தோடு அந்தப் பட்டங்களின் சூடு ஆறிவிடும். இரு தரப்பும் பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. ஆனால் இந்த முறைதான் இந்த விவகாரம் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வெடித்திருக்கிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திலேயே வைகோவுக்கு உடல்நலிவு ஏற்பட்டது. பிரச்சாரத்தின் இடையேகூட வைகோவின் குரல் கம்மியது. தற்காலிகப் பிரச்னை எனக் கருதப்பட்டது; ஆனால் பொது நிகழ்ச்சிகளில் அவர் பேசுவதும் பதிலளிக்க சில நிமிடங்கள்வரை எடுத்துக்கொள்வதும் நடந்தது.
கட்சிப் பக்கம் மழைக்குகூட ஒதுங்காத துரை வையாபுரி புதிய அவதாரமாக துரை வைகோ என கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியும் இல்லாமல் ஏற்கெனவே இருந்துவரும் நிர்வாகப் பதவியும் இல்லாமல், புதிதாக முதன்மைச் செயலாளர் என துரை வைகோ முன்னில்லைக்குக் கொண்டுவரப்பட்டார். இத்தனைக்கும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கூட தலைமை நிலையத்தில் ஓர் அலுவலகச் செயலாளர்போல இருக்கிற நிலைமையே அப்போதும் இருந்தது.
தி.மு.க.வின் வாரிசு அரசியல் என்ற பிரச்னையால்தான் தனிக் கட்சி தொடங்கினார் வைகோ என்பதுதான் அவரின் தனித்துவம். அதே வைகோ தன் மகனுக்கு புறவாசல் வழியாக தலைமைக்குக் கொண்டுவந்து, எம்பி பதவியையும் பெற்றுத் தந்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
முதல் கட்டமாக எதிர்ப்புத் தெரிவித்தவர்கள், வைகோவுடன் பொடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்கள். மற்றவர்கள் சில மாவட்டச் செயலாளர்கள். பெரும்பாலானவர்கள் தாய்க் கழகமான தி.மு.க. பக்கம் சாய்ந்துவிட்டனர்.
வைகோவும் மகனின் நகர்விலேயே கண்வைத்தபடி போனவர்களைப் பற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை.
கடைசியாக, தலைமை நிர்வாகிகள் மட்டத்திலும் அது ஊடுருவித் தாக்கியது. துரை வைகோ தன் அப்பாவின் சொத்தைப் போல கட்சியைக் கருதி, பேசுவதும் நடந்துகொள்வதுமாக உலாவந்ததை, அவைத்தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி, சத்யா போன்றவர்கள் சகித்துக்கொள்ளவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் துரைசாமி வெளியேறினார்/ வெளியேற்றப்பட்டார்.
இப்போது, சத்யா!
இன்றைக்கு இரண்டு தொலைக்காட்சி ஊடகங்களில் கண்ணீர் வடித்து அழுதார், மல்லை சத்யா.
வைகோவைப் போலவே அவரும் உணர்ச்சிமயமாகவே பேசினார்.
பரஸ்பரக் குற்றச்சாட்டுகள்... துரை வைகோவும் அவரின் தரப்பினரும் சத்யா மீது வைத்த சாட்டுகளை இலாவகமாக எதிர்கொண்டார், மல்லை சத்யா.
தன்னை தி.மு.க. சார்பு எனக் குற்றஞ்சாட்டுபவர்கள், பா.ஜ.க. ஆதரவு சங்கிகள் என பகிரங்கமாகவே பதிலுக்குச் சொன்னார் அவர்.
வாரிசு அரசியலுக்காக வைகோ துரோகி பட்டம் சூட்டுவதாகவும் உணர்ச்சிமயத்துக்கு இடையிலும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டார்.
துரோகிப் பட்டம் வாங்குவதும் கொடுப்பதும் வைகோவுக்குப் புதியது அல்ல. அதற்கான பதிலடிகளும் மிகவும் சுரீர் இரகம்!
எல்லாரிடமும் தொக்கிநிற்கும் ஒரே கேள்வி, சத்யா அடுத்து எந்தப் பக்கம் செல்கிறார் என்பதுதான்.
தி.மு.க. அணியிலிருந்து சில கட்சிகள் தங்கள் அணிக்கு வரக்கூடும் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் கூறியிருந்தார். அதையடுத்த சில நாள்களில், வைகோ தானே அறிவாலயத்துக்குச் சென்று மு.க.ஸ்டாலினுடன் பேசிவிட்டு வந்தார்.
கூடுதல் சீட் கேட்டதாக வந்த செய்திக்கு விளக்கம் அளிக்கவே அந்தச் சந்திப்பு என்று ம.தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், இதைப் போலவே, வி.சி.க.வும் கூடுதல் இடம் கேட்டதாக ஒரு பேச்சு வந்தபோது அவர்கள் தரப்பில் அறிவாலயம் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க.வுடன் எந்தக் கட்சி அணி தாவுகிறதோ ம.தி.மு.க. தி.மு.க. அணியில் தொடரும்; கருணாநிதிக்கு தான் வாக்குறுதியைக் காப்பாற்றுவேன் என வைகோ வலிந்து அழுத்தமாகச் சொன்னார்.
இந்நிலையில், ம.தி.மு.க. கூட்டணியில் தொடரும்வரை குறிப்பிட்ட காலத்துக்கு சத்யாவைச் சேர்த்துக்கொள்வதை அறிவாலயத் தரப்பும் தயக்கத்தோடு அணுகுகிறது என்கிறார்கள். மாமல்லபுரத்தைச் சேர்ந்த சத்யாவுக்கும் தன்னுடைய பழைய வலிமையை மீட்டுக் காட்டுவதற்கு ஒரு கால அவகாசம் தேவைப்படுகிறது; அதில்தான் அவர் தீவிரமாக இறங்கியிருக்கிறார்; அந்த வட்டாரத்தில் நடைபெறும் சுக, துக்க காரியங்களில் சத்யாவின் தலையைத் தொடர்ந்து பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
இந்தப் பரபரப்பெல்லாம் வைகோவின் 90-கள் பரபரப்புக்கு முன், மிகவும் சிறியது; நாளைக்கே சத்யா ஒரு தலை ஆகி, வைகோ மகனும் அவரும் கட்டித்தழுவி ஏதோ ஒரு வசனத்தைப் பேசி அதுவும் ஒரு வரலாறாக மாறலாம் என்கிறார்கள், இரு தரப்பிலும்.
சிங்கம், அசிங்கம் எல்லாவற்றின் சங்கமமும்தானே அரசியல்? ஆம், இ/எதையும் மறுப்பதற்கில்லை!