"உங்களுக்கு என்ன பிரச்சினை?" - வைரலான அரியலூர் பைக் இளைஞர் தாய் ஆவேசம்!

"உங்களுக்கு என்ன பிரச்சினை?" - வைரலான அரியலூர் பைக் இளைஞர் தாய் ஆவேசம்!
Published on

சமீபத்தில், அரியலூரை சேர்ந்த ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் லட்ச ரூபாய் மதிப்பிலான பைக் வாங்கியது பேசுபொருளானது.

சமூகவலைதளங்களில் நல்ல விஷயங்களை போலவே நெகட்டிவ் விஷயங்களும் வைரலாகும். ஆனால், இப்போது நல்ல விஷயம் ஒன்று நெகட்டிவாக வைரலாகி இருக்கிறது. அரியலூரை சேர்ந்த ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு பிடித்தமான இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான பைக் ஒன்றை வாங்கி இருக்கிறார். ஷோரூமில் பைக் வாங்கும்போது அவர் உடன் இருந்த பெண்மணியை அந்த இளைஞரின் தாயார் என நினைத்த இணையவாசிகள் பொட்டு தங்கம் இல்லாமலும் காலில் செருப்பு இல்லாமலும் இருந்த அவரது தோற்றத்தை பார்த்து உடனே அந்த இளைஞரை திட்ட ஆரம்பித்தனர். தனது தாய்க்கு நல்ல உடையோ, நகைகளோ வாங்கிக் கொடுக்காமல் இவ்வளவு செலவு செய்து பைக் வாங்குவது அவசியமா என திட்டித் தீர்த்தனர். இந்த விஷயம் சர்ச்சையானதை அடுத்து இதற்கு அந்த இளைஞரின் குடும்பம் விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அரியலூரில் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார் இளைஞர் அஜய். அவர் தன் பைக் வீடியோ இணையத்தில் பேசுபொருளானது பற்றி பகிர்ந்து கொண்டிருப்பதாவது, “கடந்த இரண்டு நாட்களாக என் வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. என் வீட்டில் இருப்பவர்களை கஷ்டபடுத்தியோ கடன் வாங்கியோ இந்த பைக் வாங்கினேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. சிறுவயதில் இருந்தே எனக்கு பைக் மீது அதிக விருப்பம் உண்டு. பாலிடெக்னிக் படித்துக் கொண்டிருந்தாலும் காலை, மாலை என பார்ட் டைம் வேலைக்கு சென்று என்னால் ஆன தொகையை சேர்த்து வைத்தேன். என் அம்மாவும், என் மாமாவும் இந்த பைக் வாங்க தங்களால் முடிந்த தொகையை கொடுத்தார்கள். இப்படித்தான் அந்த பைக் வாங்கினேனே தவிர என் வீட்டில் உள்ளவர்களை கஷ்டப்படுத்தியோ, நகைகளை அடமானம் வைத்தோ பைக் வாங்கவில்லை.

அந்த வீடியோவில் என்னுடன் இருப்பவர் என் அத்தை தனலட்சுமி. ஊர் பக்கம் எதாவது விசேஷம் என்றால்தான் நகை போடுவார்கள். நான் திடீரென்று சர்ப்ரைஸாகதான் என் அத்தையை பைக் வாங்குமிடத்திற்கு அழைத்து சென்றேன். அதனால்தான் அவர் எளிமையாக இருந்தார். மற்றபடி, உங்களுக்கு ஒரு கனவு இருந்தால் அதை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். அதைவிடுத்து, கனவை நிறைவேற்றியவர்களை கேலி செய்வதோ தப்பும் தவறுமாக மீம் போடுவதோ தேவையில்லாத வேலை. உங்களால் கனவு நிறைவேற்ற முடியவில்லை என்று எங்களை கஷ்டப்படுத்தாதீர்கள். இதை பார்க்கும்போது எனக்கு மனவேதனையாக இருக்கிறது. 250 சிசி பைக் வாங்கி இருக்கிறேன் என்றால் அவ்வளவு வேகமாக நான் வண்டி ஓட்டப்போவதில்லை. எனக்கும் குடும்பம் இருக்கிறது என்பதால் பொறுப்புடன்தான் நடந்து கொள்வேன்” என்றார்.

அஜய்யின் தாயார் அமுதா பகிர்ந்து கொண்டதாவது, “குடும்ப உறுப்பினர்களாக நாங்கள் எல்லோரும் சேர்ந்துதான் எங்கள் வீட்டுப் பிள்ளைக்கு பைக் வாங்கி கொடுத்தோம். இதை ஏன் இணையவாசிகள் கேள்வி எழுப்புகிறீர்கள்? இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பது புரியவில்லை. இந்தப் பிரச்சினையை இதோடு நீங்கள் விட்டுவிடுங்கள். தேவையில்லாத கருத்துகளை பகிர்வது சரியல்ல! இதுதொடர்பாக மேற்கொண்டு எதுவும் பேச வேண்டாம்” என்றார் ஆதங்கத்தோடு.

logo
Andhimazhai
www.andhimazhai.com