
கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் குறித்த ஹாட் செய்திகளின் எண்ணிக்கை கொஞ்சமும் குறையவில்லை. அந்தப் படத்திலிருந்து ரோஷத்தோடு சுந்தர்.சி வெளியேறிய நிலையில் அடுத்த டைரக்டர் யார் என்பதுதான் கோடம்பாக்கத்தின் மில்லியன் டாலர் கேள்வி.
அந்தப் பட்டியலில் இயக்குநர் பா.ரஞ்சித் தொடங்கி ஹெச். வினோத் வழியாக மணிரத்னம் வரை எத்தனையோ ஸ்டார் டைரக்டர்களின் பெயர் இடம் பெற்றாலும் இரு ஜூனியர்கள் செமி ஃபைனலில் இருப்பதுதான் செம ட்விஸ்ட்.
ரஜினிக்கு கதை பிடித்திருந்தால் அறிமுக இயக்குநரை வைத்துக்கூட அப்படத்தை தயாரிப்போம் என்று சமீபத்தில் கூறியிருந்தார் அல்லவா? இப்போது நடக்கவிருப்பது கூட அதற்கு நெருக்கமான ஒன்றேதான்.
யெஸ்.. இந்த அரையிறுதி லிஸ்டில் இருப்பவர்கள் இருவருமே ஏறத்தாழ புதுமுக இயக்குநர்கள் போலத்தான். முதலாமவர் ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய ராம்குமார். சிம்புவை வைத்து படம் இயக்கக் காத்திருந்தவர் அப்படம் தாமதமாவதால் அதே சிம்புவின் மூலம் கமலை அணுகி ஒரு கதை சொல்ல, அக்கதை கமலுக்கு மிகவும் பிடித்துவிடவே மிக விரைவில் ரஜினியிடம் கதை சொல்லப்போகிறார். அப்படி ரஜினி நோ சொன்னாலும் இவரை வைத்து படம் தயாரிப்பது உறுதி என்னும் முடிவில் இவருக்கு கமல் தனி அலுவலகமே போட்டுக்கொடுத்திருக்கிறார்.
அடுத்தவர் ‘குரங்கு பொம்மை’, ‘மகாராஜா’ படங்களை இயக்கிய நித்திலன். இவர் மகாராஜா ரிலீஸ் சமயத்திலேயே ரஜினிக்கு ஒரு கதை சொல்லியிருந்தார். அக்கதையில் கமர்ஷியல் அம்சங்கள் குறைவாக இருப்பதால் வேறு கதை இருந்தால் சொல்லுங்கள் என்று சொல்லியிருந்த ரஜினி மறுபடியும் அவரை அழைத்து இரு கதைகள் கேட்டிருக்கிறார்.
ஆக கமல் கேட்ட ராம்குமார் கதையை ரஜினி கேட்க வேண்டும். ரஜினி கேட்டிருக்கும் நித்திலன் கதைகளை கமல் கேட்க வேண்டும். இந்த இரு சந்திப்புகளுமே இன்னும் ஓரிரு தினங்களில் நடந்து ரிசல்ட் வந்து விடும் என்பதுதான் தற்போதைய நிலவரம்.
பிப்ரவரி அல்லது மார்ச்சில் படப்பிடிப்பு கிளம்பும் திட்டத்தில் ராஜ்கமல் நிறுவனம் இருப்பதால் இந்த இரு இயக்குநர்களில் ஒருவரை கமலும் ரஜினியும் இணைந்து முடிவு செய்வார்கள் என்கிறார்கள்.
படத்துக்கு ‘கதை கேளு கதை கேளு’ன்னுதான் டைட்டில் வைப்பாங்க போல.