அடிக்கடி நிலநடுக்கத்துக்கு ஆப்கானிஸ்தான் இரையாவது ஏன்?

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் வீடிழந்த மக்கள்
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் வீடிழந்த மக்கள்
Published on

போருக்குப் பேர்போன ஆப்கானிஸ்தான் மண்ணில் இப்போதுதான் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக மூச்சுவிடத் தொடங்கினார்கள். ஆனால், துயரம், அடுத்தடுத்து இயற்கைச் சீற்றங்கள் ஆயிரமாயிரம் மனிதர்களை ஒரே நாளில் பலிகொண்டுவிடுகின்றன.

கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் அந்நாட்டுத் தலைநகர் காபூல் உட்பட 23 மாநிலங்களில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பெருத்த சேதத்தை உண்டுபண்ணிச் சென்றது. அதில் சிக்கி உயிரிழந்தவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கையே பல நூறுகளைத் தாண்டும். தாலிபான்கள் முறைப்படி அரசாங்கத்துக்கு வந்து ஆண்டுகள் கடந்தாலும், பருவநிலை தப்புதலால் ஏற்படும் திடீர் இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ள ஆப்கனில் முறையான ஏற்பாடுகள் இல்லை.

மொத்தமுள்ள 34 மாநிலங்களில் 21 மாநிலங்கள் வெள்ள பாதிப்பு நேரக்கூடியவை. ஆனாலும், மழை, வெள்ளம் போன்ற பாதிப்புகளைக்கூட ஒரு பக்கம் முன்கூட்டியே விழிப்பாக இருந்து சமாளித்துவிடலாம்.

சென்ற ஞாயிறு அன்றும் அதையடுத்து இன்றும் ஏற்பட்ட நிலநடுக்கம் போன்ற நிலைமைதான் அந்த நாட்டுக்குத் தொடரும் துயரமாக மாறிவருகிறது.

1991 இந்துகுஷ் மலைப்பகுதியில் 6.9 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 848 பேர் இறந்துபோனார்கள்.

1998 பிப்ரவரி, மே மாதங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கங்களில் 7,500 பேர் கொல்லப்பட்டனர்.

2002 மார்ச்சில் ஏற்பட்ட இரு வேறு நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல்!

பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்துகுஷ் மலைப் பகுதியிலேயே மீண்டும் ஒரு நிலநடுக்கம்... ஆப்கனிஸ்தான் வரலாற்றிலேயே மிக மோசமாக பாதிப்பை ஏற்படுத்திய - கடுமையான வீச்சுகொண்ட அதன் அளவு 7.5 ரிக்டராகப் பதிவாகியிருந்தது. அதில் 399 பேர் பலியாகினர்.

2022 ஜூனில் கோஸ்ட் பகுதியில் 6 புள்ளிகளாகப் பதிவான நிலநடுக்கத்தால் 1,300 பேர் உயிரிழந்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஹீரட் மாநிலத்தில் 2023 அக்டோபரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரம் பேருக்கும் மேல் கொல்லப்பட்டனர்.

ஆப்கன் நிலநடுக்கங்கள்

தரைக்குக் கீழே 70 கி.மீ. ஆழம்வரையிலான நிலநடுக்கங்கள் ஆழம்குறைவான நிலநடுக்கங்கள் எனப்படுகின்றன. இவை ஆழமான நிலநடுக்கங்களைவிட அபாயகரமானவை ஆகும். ஏனென்றால், 70-700 கி.மீ. ஆழத்தில் உண்டாகும் நிலநடுக்கத்தின் நிலநடுக்க அதிர்வலைகள் நீண்ட தொலைவுக்குக் கடந்து தரையைத் தொடும்போது அதன் வீச்சு குறைந்துவிடும்.

இதேசமயம், ஆழத்துடன் நில அதிர்வின் அளவும் எப்படியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைத் தீர்மானிக்கும். ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகள் என்றாலே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதுதான். அதிலும் மக்கள் அடர்த்தியாக இருக்கும் பகுதிகள் என்றால் சேதம் அதிகமாக இருக்கும்.

நேற்றுமுன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வு 6 ரிக்டர் எனும்நிலையில், இன்றுவரை 1400 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நாட்டுக்கு மட்டும் ஏன் இப்படி துயரம்?

ஆப்கனைப் பொறுத்தவரை இந்திய, யுரேசிய நிலத் தட்டுகளுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு நாடு. இந்தப் பகுதியில் பூமிக்குக் கீழே அடிக்கடி நிலத்தட்டுகள் நகரக்கூடிய தன்மை கொண்டவை.

இந்த இந்திய நிலத்தட்டு யுரேசியத் தட்டை நோக்கி ஆண்டுக்கு 45 மி.மீ. அளவுக்கு நகர்ந்தபடி இருப்பதாக பிரிட்டன் நிலநடுக்கவியல் ஆய்வகம் கண்டறிந்துள்ளது.

உலகத்திலேயே அதிகமான அளவு அதாவது 15 சதவீதம் நிலநடுக்க அலைகள் உருவாகும் இடம், இந்தப் பகுதிதான்.

ஆப்கனில் இந்துகுஷ் மலைப்பகுதியில் மட்டும் 1900ஆம் ஆண்டு முதல் இதுவரை 12 முறை ரிக்டர் 7-க்கு மேலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்றால், அதன் பாதிப்புத் தன்மையை உணர்ந்துகொள்ள முடியும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com