தமிழ்நாட்டில் பீகாரி எம்.எல்.ஏ.வா... வெளி மாநிலத்தவர் வாக்காளரானால்?

தேர்தல் ஆணையத்தால் பூகம்பம்!
தமிழ்நாட்டில் பீகாரி எம்.எல்.ஏ.வா... வெளி மாநிலத்தவர் வாக்காளரானால்?
Published on

தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் வெளிமாநிலத்தவரை இங்கு வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதா என ஒருசுற்று கடும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டன.

பலருக்கு இதில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய தெளிவில்லாமலும் பேசுகிறார்கள். பலர் கூட்டத்தோடு நாங்களும் குரல் கொடுக்கிறோம் எனக் கடமை உணர்ச்சி பொங்க அறிக்கை விடுகிறார்கள்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தால் பீகார் அரசியலில் ஒரு பக்கம் சூடு கிளம்பியது என்றால், அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலும் பழைய புண்ணைக் கிளறிவிட்டிருக்கிறது, வாக்காளர் விவகாரம்.

தேர்தல் அரசியல் கட்சிகள் எல்லாம் குறிப்பிடும் பொதுவான ஒரு புள்ளி, பீகாரிகள் எல்லாம் அதிகமாக இங்கு வாக்காளராக ஆகிவிட்டால் இங்கு இதுவரையில் இருந்துவரும் தேர்தல் போக்கையே மாற்றியமைக்க வாய்ப்பாகிவிடும் என்பதே!

சில தரப்பினரோ இன்னும் ஒரு படி மேலே போய், அவர்களே இங்கு எம்.எல்.ஏ. ஆகிவிடக்கூட வாய்ப்பிருக்கிறது என வாதிடுகிறார்கள். அப்படி ஆகும்போது, தமிழ்நாட்டுக்கான சட்டங்களை உருவாக்குவதிலும் பாதிப்பை உண்டாக்கும் என அச்சமும் கவலையுமாக தீவிரமாகச் சிந்திக்கிறார்கள்.

இந்தப் பிரச்னை இன்று நேற்று இந்த வாரம் வந்தது அல்ல, தமிழ்நாட்டுக்கு!

நா.த.க. தலைவர் சீமான் இன்று சொல்கிறார், தமிழ்நாட்டுக்குள் வரும் வெளி மாநிலத்தவருக்கு சில வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதைப் போல, உள் அனுமதிச் சான்று கட்டாயம் என அறிவிக்கவேண்டும் என்று!

ஆனால், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் குரலை ஒலித்துவருகிறது, பெ.மணியரசன் தலைமையிலான அமைப்பு. முன்னர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி என்ற பெயரில் செயல்பட்டவர்கள், இப்போது தமிழ்த் தேசியப் பேரியக்கம் என இயங்குகிறார்கள்.

கடந்த 2005ஆம் ஆண்டில் ஈரோட்டில் பழைய த.தே.பொ.க. சார்பில், வெளியாரை வெளியேற்றுவோம் என தனி மாநாட்டையே நடத்தினார்கள். அப்போதே அதற்கு இங்கிருக்கும் கம்யூனிஸ்ட் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பிழைப்புக்காகவும் கல்வி, தொழிலுக்காகவும் வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்திருப்பதைப் போலவே வெளியில் உள்ளவர்களும் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். இதை எதிராகப் பார்ப்பது இன வெறுப்பு அரசியல் என அந்த அமைப்புகள் விமர்சனம் செய்தன.

அந்த நிலையில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும், இடைப்பட்ட காலத்தில், தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் மட்டுமில்லாமல், மாநில அரசுப் பணிகளிலும் வெளி மாநிலத்தவர்க்கு இடம் அளிக்கப்பட்டது பெரும் பிரச்னையை உண்டாக்கியது. அவர்கள் தமிழ்நாட்டில் வளம் இருக்கிறது என பிழைக்க இடம்பெயர்ந்து வருவது யதார்த்தம் என்றாலும், இங்கும் கோடிக்கும் மேற்பட்டவர்கள் உரிய வேலையின்மை பிரச்னையால் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். வாழ்வாதாரத்துக்காக மாவட்டம்விட்டு மாவட்டம் இடம்பெயர்வோர் பல பத்து இலட்சங்கள், அரசுக் கணக்கின்படியே!

இந்த நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டவர் மத்தியில் வெளியிலிருந்து வந்தவர்களால்தான் நமக்குப் பிரச்னை என்கிற பிரச்சாரம் எடுபடத்தான் செய்கிறது. உண்மையில், தமிழ்நாட்டவர் செய்யக்கூடிய வேலைகளை குறைந்த கூலிக்கும், கூடுதல் நேர வேலையும் செய்து, தரக்குறைவான வாழ்க்கையையே வெளிமாநிலத் தொழிலாளர்கள் வாழ்ந்துவருகிறார்கள் என்கின்றன தொழிலாளர் சங்கங்கள்.

அது ஒரு புறம் இருக்க, அந்தத் தொழிலாளர்களுக்கு இங்கு ரேசன் அட்டையும் ஆதார் அட்டையும் தரப்பட்டுவிட்டது; வாக்குரிமையும் இங்கு தரப்பட்டுவிட்டால், தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் அகதியாகி விடுவார்கள்; தஞ்சம் புகக்கூட ஒரு நிலம் இருக்காது என உணர்ச்சிக் கிளறலோடு நரம்பு புடைக்கவைக்கிறார், நா.த.க. சீமான்!

அவர் சொல்லும் கணக்கு, 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை 35 இலட்சம். பத்து ஆண்டுகளில் அது இரட்டிப்பாகியிருக்கும்; எனில் 70 இலட்சம் பேருக்கும் வாக்குரிமை கிடைத்தால் ஆறரை கோடி தமிழக வாக்காளரில் அவர்கள் 10 சதவீதம் ஆகிவிடும் என்பதுதான்!

இது சரியானதா என்றால், முற்பாதி சரியானது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதியன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய தொழிலாளர் நலத் துறை இணையமைச்சர் இராமேசுவர் தெலி தெரிவித்த தகவல் : 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் 34 இலட்சத்து 87ஆயிரத்து 974 பேர். சுமார் 35 இலட்சம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், அந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக ஆகிவிட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சீமான் போன்றவர்கள் இதை மீண்டும் மீண்டும் சொல்வது ஏன்? எப்படிச் சொல்லிக்கொண்டே இருக்கமுடிகிறது? 2011இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகைத் தரவுகள் குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர் தொடர்பாக எட்டு ஆண்டுகள்வரை துல்லியமாக வெளியிடப்படவில்லை. ஆளுக்கு ஒரு தகவலை சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

சில ஊடகங்களில், அதிகாரபூர்வமற்ற தகவலாக, தமிழகத்தில் 18.85 இலட்சம் பேர் என்று தகவல் வெளியானது. அது 2019ஆம் ஆண்டு. அதற்கடுத்து நான்கு ஆண்டுகள் கழித்து மைய இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் முதல் முறையாக அதிகாரபூர்வ விவரத்தை வெளியிட்டார்.

இது ஒரு பக்கம் இருக்க... தேர்தல் ஆணையம் கூறியுள்ளபடி பீகாரில் நீக்கப்பட்ட 6.5 இலட்சம் வாக்காளர்களும் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடுவார்களா, அல்லது சேர்ந்துவிடுவார்களா எனும் கேள்வி எழுகிறது. இது முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது!

வெளிமாநிலத்தவர் குறிப்பாக வட மாநிலத் தொழிலாளர் பற்றிய தமிழ்நாட்டு பொதுப்புத்தி சித்திரம் ஒன்று உண்டு என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அங்கு நீக்கப்பட்ட அத்தனை இலட்சம் பேரும் முறையாகப் பெயரைச் சேர்க்கவில்லை என்பதும் ஆணையம் சொல்லும் ஒரு காரணம். அப்படிப்பட்டவர்கள் இங்கு மட்டும் சேர்ந்துவிடுவார்களா என்பதைக் கேள்வியாக முன்வைக்கிறார்கள், கொங்கு பகுதியில் தொழிலாளர்கள் இடையே செயல்பட்டுவரும் அமைப்புகளினர்.

”இடையில் கொரோனா வந்தது. பொது முடக்கத்தால் சோற்றுக்கு வழியில்லாமல், புதுதில்லியிலிருந்து நடந்தே பீகாருக்குச் சென்றவர்கள் இலட்சத்துக்கும் மேல் என்றன, அந்த மாநில ஊடகங்கள். அப்போது மட்டுமல்ல, ஆண்டுக்கு ஓரிரு முறை சொந்த ஊருக்குச் செல்வது பீகாரிகள் உட்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்களின் வாடிக்கை. இதை நிரூபிக்க பெரிய சான்று எதுவும் தேவையில்லை; உங்களுக்கு அருகில் பணியாற்றும் எந்த வெளிமாநிலத் தொழிலாளரிடமும் இதை உறுதிசெய்ய முடியும் என்பதே யதார்த்தம்.” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தை மையமாகக் கொண்ட தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கி.வே.பொன்னையன் மிக எளிமையாக தர்க்கத்தை முன்வைக்கிறார்.

“ எங்கள் பகுதியில் ஒப்பீட்டளவில் பீகாரிகளைவிட வங்காளிகள் கூடுதலாக இருக்கின்றனர். நாங்கள் அன்றாடம் சந்திக்கும் மேற்குவங்க மாநிலத் தொழிலாளர்கள் வாரத்துக்கு ஒரு முறை, தங்கள் குடும்பத்தாருடன் தொலைபேசியில் முகம்பார்த்துப் பேசாமல் எந்த வேலையையும் செய்யமாட்டார்கள். அதில் அவ்வளவு கண்ணுங்கருத்துமாக இருப்பார்கள். இரண்டு முறையாவது சொந்த ஊருக்குப் போகாமல் இருக்கமாட்டார்கள். அவர்கள் இங்கு வந்திருப்பது பிழைப்புக்காகத்தானே தவிர, இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும் முனைப்பில் அல்ல. அவர்கள் மட்டுமா, நம்முடைய தமிழர்களும் கூடுதல் வாழ்நிலைக்காக வெளி மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் சென்று அங்கு தொழில்களைச் செய்கிறார்கள்தானே? ஆனால் அவர்களின் மன இருப்பும் துடிப்பும் சொந்த மண்ணில்தானே அதிகமாக இருக்கிறது. இங்கேயே இருக்கவிரும்புவோர் மிகச் சொற்பமானவர்கள்தான். வெளியிடத்துக்குப் போயிருக்கும் நம்மவர்க்கு என்னென்ன உரிமைகள், பலன்கள் கிடைக்கிறதோ அதைப்போலவே வெளியாருக்கும் நாம் செய்கிறோம். இது ஓர் இயல்பான உலகியல் நிகழ்வுதானே!” என இடதுசாரித் தமிழ்த்தேசியத் தன்மையோடு சொல்கிறார் பொன்னையன்.

பீகாரில் ஒரு டஜன் சட்டமன்ற உறுப்பினர்களையும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டது, சிபிஐ எம்எல் லிபரேசன் கட்சி. அங்கு புதிய திருத்தத்தைக் கடுமையாக எதிர்த்துப் போராடிவரும் இந்தக் கட்சி, தமிழ்நாட்டில் உள்ள பீகாரிகள் உட்பட்ட வடமாநிலத் தொழிலாளர்களிடையே வேலைசெய்துவருகிறது. அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரான தமிழ்நாட்டின் சந்திரமோகனிடம், தமிழர்களை அகதிகளாக்கும் அபாயம் என்பதுவரையிலான வாதங்களைக் குறிப்பிட்டு பதில்கூறுமாறு கேட்டோம்.

70 இலட்சம், 10 சதவீதம் என்கிற புள்ளிவிவரங்களை சிரித்தபடியே கேட்டுக்கொண்டார். முதலில் அதிகாரபூர்வமற்ற இந்த விவரங்களை வைத்துக்கொண்டு பேசுவது பொருத்தமில்லை என்றார்.

“கடந்த மக்கள்தொகை விவரப்படி அப்படியே அந்த எண்ணிக்கை இருப்பதாக வைத்துக்கொண்டால், அதில் 10 சதவீதம் பேர்தான் இங்கு குடும்பத்தோடு தங்கியிருப்பார்கள்; இது எங்களுடைய தோராயமான கள மாதிரிக் கணக்கு. சொந்த மாநிலத்தைவிட கொஞ்சம் மேம்பட்ட ஊதியத்துக்காகத்தான் அவர்கள் இங்கு வருகிறார்கள்; இங்கேயே குடியிருந்துவிடுவதற்காக அல்ல; முதலில் இந்த உண்மையை எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டும்; தெரியாமல் இருப்பதால்தான் கதை விடுகிறவர்கள் சொல்வதை அப்படியே நம்பக்கூடிய ஒரு நிலைமை வந்துவிட்டது. இங்கு குடியிருக்கும் பத்து சதவீதத்தில்கூட அதிகபட்சம் பாதி பேர்தான் இங்கேயே குறிப்பிட்ட காலத்துக்கு தங்கிவிட வாய்ப்பு உண்டு. தொழிலாளர் முகவர்கள், தெரு வியாபாரம் போன்றவற்றில் இருப்பவர்கள், பிள்ளைகளின் கல்வி, தமக்கு நம்பகமான, பாதுகாப்பான வாழ்வுக்கான இடம் என நிரந்தரமாகத் தங்கவும் விரும்பலாம். அப்படியென்றால் ஓரிரு இலட்சம் பேர் இருக்கப்போகிறார்கள். அவர்களிலும் வாக்களிக்க ஊருக்குச் செல்ல விரும்புவோர் இல்லாமலா இருப்பார்கள்? எனவே, இனவெறுப்புடன் எந்த அடிப்படையும் இல்லாமல் பிழைப்புக்காக வந்திருக்கும் உழைப்புக் கூலிகளைப் பற்றி தவறான கருத்துகளைக் கொள்வதும் பரப்புவதும் தவறு.” என்கிறார் சந்திரமோகன் கண்டிப்புடன்.

”அப்படியே வந்தாலும் அவர்களை வாக்காளர்களாக ஏற்றுக்கொள்வதுதான் ஜனநாயக முறை; மகாராஷ்டிரத்தில் தமிழர்கள் இல்லையா? தமிழரே சட்டமன்ற உறுப்பினராக இல்லையா? அதனால் மும்பையில் என்ன கெட்டுப் போயிற்று? குறிப்பிட்ட அளவுக்கு மேல், இந்த இனத்தின் மீதே ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு வெளியாரின் இருப்பு அதிகமானால் அதை ஒழுங்குபடுத்துவது குறித்து அந்த சமயத்தில் முடிவெடுக்கலாம். அதற்குகூட மாநிலங்களுக்கு தெளிவான அதிகாரம் இல்லாத நிலைதான் நடப்பு சட்டத்தில் இருக்கிறது. ஐயோ இனவுரிமை பறிபோகிறது என்பவர்கள் இப்படியான ஒரு கோரிக்கைக்காக ஒன்றிய அரசை வலியுறுத்தி தனி இயக்கம் நடத்த வேண்டும்.”என்கிறார் தேசிய இன அரசியல் ஆய்வாளர் இர. குமரன்.

logo
Andhimazhai
www.andhimazhai.com