புற்றுநோயால் உயிரிழப்பவர்கள் அதிகரித்துவரும் இந்தியாவில் பாதிக்கும் மேல் பெண்களுக்கே பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது. 51.1 சதவீதம்.
இதேவேளை, இதனால் உயிரிழப்போரில் ஆண்களே அதிகம்; மொத்தத்தில் 55 சதவீதம் என்கிறது அண்மையில் வெளியான புதிய சர்வே.
நாடளவில் 43 புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைகளில் எடுக்கப்பட்ட கணக்காய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
இந்தக் கணக்கெடுப்பு கடந்த 2015 முதல் 2019வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் காலப்பகுதியில் 7.08 இலட்சம் பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டது பதிவாகியுள்ளது. நோய் பாதிப்பால் 2.06 இலட்சம் பேர் இறந்துபோனதும் தெரியவந்துள்ளது.
அந்த பாதிப்பின்படி பார்த்தால், கடந்த ஆண்டு 15.6 இலட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு என்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8.74 இலட்சமாக அதிகரித்திருக்கும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இந்திய அளவில் இப்போதைக்கு 23 மாநிலங்கள், ஒன்றிய ஆட்சிப் பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு பதிவுசெய்யப்படுகிறது. இதற்கான அமைப்புகள் முழுமையாகவோ பகுதியாகவோ இங்கு செயல்பட்டுவருகின்றன. காஷ்மீர், அயோத்தி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் புதியதாக பதிவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனா வந்ததன் காரணமாக 2020 கணக்காய்வு மேற்கொள்ளப்படவில்லை.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை, பல்வேறு புற்றுநோய்த் தடுப்பு, விழிப்பூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் அவை போதுமானவையாக இருப்பதில்லை என்பதையே யதார்த்த நிலை காட்டுகிறது.
இந்தப் புற்றுநோய்க் கணக்காய்வை ஒருங்கிணைத்த புதுடெல்லி, நோய்த் தகவல், ஆராய்ச்சிக்கான ஐசிஎம்ஆர் தேசிய மையத்தின் இயக்குநர் பிரசாந்த் மாத்தூர், பாலின வேறுபாடும் இந்த ஆய்வில் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட்டது என்கிறார்.
பெண்களில் பல்வேறு புற்றுநோய்கள் காணப்படுகின்றன என்றாலும், உயிரிழப்பு அந்த அளவுக்கு இல்லை. மார்பகப் புற்றும் கருவாய்ப் புற்றுமே பெண்கள் புற்றுநோயில் 40 சதவீதம் அளவுக்கு உள்ளது; முன்கூட்டியே கண்டறிதல், சிகிச்சை முதலிய காரணங்களால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு உயிரிழப்புவரை போவது மட்டுப்படுகிறது என்கிறது புள்ளிவிவரம்.
ஆண்களைப் பொறுத்தவரை வாய்ப்புற்று, நுரையீரல் புற்று, வயிறு, குடல் புற்று ஆகியவை பரவலாகக் காணப்படுகின்றன; ஆனால் நோயைக் கண்டறிவது தாமதம் ஆகிவிடுகிறது; அதன் விளைவாக இறப்புகள் அதிகமாகிவிடுகின்றன என்றும் டாக்டர் மாத்தூர் கூறுகிறார்.
வாய்ப்புற்று
புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் எனப் பார்க்கும்போது, வாய்ப் புற்றிலிருந்து மீண்ட பெண்கள் அதே பிரச்னையால் பாதிக்கப்பட்டு மீண்ட ஆண்களைவிடக் கூடுதல் என்றும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்த முறை, அதிக பாதிப்பைத் தந்துள்ள புற்று வகையாக வாய்ப்புற்று முதல் இடத்தில் இருக்கிறது. இதுவரை பரவலாக நுரையீரல் புற்றே அதிகமான பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். ஏனென்றால், ஆண்களில் கணிசமானவர்கள் புகையிலைப் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
இத்தனைக்கும் புகையிலைப் பயன்பாடு அண்மைக் காலமாகக் குறைந்துவருகிறது. 2009-10 ஆம் ஆண்டில் 34.6 சதவீதமாக இருந்த புகையிலைப் பயன்பாடு, 2016-17 காலகட்டத்தில் 28.6 சதவீதம் எனும் அளவுக்கு இறங்கிவிட்டது.
புகையிலை போன்ற பொருட்களின் பயன்படுத்தத் தொடங்கி 20 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அது புற்றாக உருப்பெறுகிறது என்பதை புற்றுநோய் மருத்துவச் சான்றுகள் நிரூபிக்கின்றன. எனவே, புகையிலைப் பழக்கம் இப்போது குறைந்திருந்தாலும், அதன் தாக்கம் உள்ளுக்குள் வளர்ந்து புற்றாக உருவெடுக்கிறது.
புகையிலை மட்டும் இல்லையாம். அளவுக்கதிகமான மதுப் பழக்கமும் வாய்ப் புற்றை உண்டாக்கும் என்கிறார்கள். மதுப் பழக்கத்தால் ஏழு வகையான புற்று ஏற்பட வாய்ப்புண்டு என்பதும் மருத்துவர்களின் கூற்று.
ஆண்களுக்கு பெரும்பாலும் குடல், ஆசனவாய்ப் புற்று பாதிப்பு அதிகமாகப் பதிவாகிறது. மது, புகையிலையும் பொதுவாக புற்று வரக் காரணங்கள் என்றாலும், அவை சேர்ந்தால் இந்தப் பிரச்னைக்கு கூடுதல் வாய்ப்பு இருக்கிறதாம்!
வடகிழக்கு மாநிலங்களில் அதிகம்
நாடளவில் பார்த்தால் வடகிழக்கு மாநிலங்களின் புற்றின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. அந்தப் பகுதியில் ஒரு இலட்சம் பேருக்கு ஆண்களில் 198.4 பேர், பெண்களில் 172.5 பேர் என்கிற அளவில் புற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல், எளிதில் தொற்றுக்கு ஆளாகக்கூடிய தன்மை ஆகியன இதற்குக் காரணங்களாக உள்ளன.
இந்த வட்டாரத்தில் புகையிலைப் பயன்படுத்துவோர் தேசிய சராசரியைவிட மிகவும் அதிகம். அத்துடன், வெற்றிலை பாக்கும் வேறு சில உணவுப் பழக்கங்களும் புற்று உருவாகக் காரணம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, உணவுப் பதனப்படுத்திகள், இறைச்சிக்காகப் புகைமூட்டம் போடுவது ஆகியவை நைட்ரஜனை நுகரும்படி செய்கின்றன. இது புற்று அபாயத்துக்கு முக்கியமான ஒரு காரணம் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.
மார்பகப் புற்று ஐதராபாத் மையத்தில்தான் மிக அதிகமாக இலட்சம் பேருக்கு 54 பேர் என்கிற அளவில் பதிவாகியுள்ளது. ஆண்களில் நுரையீரல் புற்று பாதிப்பு காஷ்மீரின் ஸ்ரீநகரில் (39.5) அதிகமாகக் காணப்படுகிறது.
வாய்ப்புற்றானது குஜராத்தின் அகமதாபாத்தில்தான் 33.6 எனும் அளவுக்கு கடுமையான பாதிப்பு காணப்படுகிறது.
நுரையீரல் புற்று பாதிப்பில் சென்னை உட்பட தென்மாநிலங்களின் பெருநகரங்களும் அண்மைக் காலமாக இடம்பிடித்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.