காதல் திருமணங்கள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சில நாள்களுக்கு முன்னர் சென்னையில் பேசியது பலத்த எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பக்கம் பெரியாரிஸ்ட்டுகளும் இன்னொரு பக்கம் பா.ஜ.க. உட்பட்ட கட்சியினரும் சண்முகத்தின் கருத்தை அவரவர் நோக்கில் விமர்சனம் செய்யத் தொடங்கினர். அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்த விமர்சனங்கள், ஒரு கட்டத்தில் கும்பலாக சமூக ஊடகத்தில் குவியத் தொடங்கின.
சண்முகம் பேசியதாக வெளியான ஊடகத் தகவல்தான், இவர்களின் சீறலான வாதத்திற்கு அடித்தளம் இட்டது. அந்தத் தகவல் இதுதான் : காதல் திருமணம் செய்துகொள்ள விரும்புவோருக்கு இங்கு தனி ஏற்பாடு இல்லை; மார்க்சிஸ்ட் கட்சியின் அனைத்து மாவட்ட அலுவலகங்களும் இதற்காகத் திறந்திருக்கும்.
காதலர் தினத்தை எதிர்க்கும் பா.ஜ.க. உட்பட்ட இந்துத்துவ அமைப்பினர் இதை எதிர்ப்பதன் காரணம் ஊரறிந்த இரகசியம்தான். அதிலும்கூட எதிர்பாராத அதிர்ச்சியாக, ”காதல் திருமணம் செய்வோர் பா.ஜ.க. அலுவலகத்துக்கும் வரலாம்” என்றார் பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை.
உரசலின் தொடக்கம்!
தீவிர தி.மு.க. ஆதரவு- கம்யூனிச இயக்க அதிருப்தியாளருமான மதுரையில் வசிக்கும் கு.ப. எனும் சமூக ஊடகப் பதிவாளர், “சமூக ஊடக பிரபெரியார் இயக்கங்கள் ஏகப்பட்ட சாதி மறுப்பு திருமணங்களை செய்து வைத்துள்ளனர். வருடத்திற்கு எத்தனை திருமணங்கள் என்பதும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சிபிஎம் செயலாளர் சாதி மறுப்பு திருமணம் செய்ய தனி ஏற்பாடு இல்லை என்று சொல்வது அவருடைய கட்சி காரர்களுக்கே சிரிப்பு வரும்.” என தன் நண்பருடைய பதிவைப் பகிர்ந்திருந்தார்.
அவரின் கருத்தை ஆதரித்தும் விமர்சித்தும் பலரும் தங்கள் பதில்கருத்தை வெளியிட்டனர். பொதுவாக அவருடன் இணக்கமான கருத்து கொண்டவர்கள், மையமாக எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, சண்முகம் பேசியதைப் புரிந்துகொள்ளாமல் கருத்திட்டதாகத் தெரிவித்தனர்.
அப்பட்டமான மார்க்சிஸ்ட் கட்சியினர், சண்முகம் பேசியதை முழுவதும் கேட்காமல், அரைகுறையாக எடுத்துக்கொண்டு பேசுவதா என எகிறவும் செய்தனர்.
பெரியாரிய இயக்கங்களில் தீவிரப் போக்கினரான காட்டாறு இதழ்க் குழுவின் எழுத்தாளர் அதி அசுரன், "இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் கடந்த பிறகு தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு இப்போதாவது பிறந்துள்ள அறிவையும் துணிவையும் பாராட்டுவோம். மற்ற மாநில கம்யூனிஸ்ட்டுகள் என்ன நிலை எனத் தெரியவில்லை. 1929-லிருந்தே ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி வைப்பதைத் தமது தினசரி நடவடிக்கையாகச் சாதித்து வரும் திராவிடர் இயக்கங்களைப் புரிந்து கொள்வோம்." என்று விமர்சனம் செய்திருந்தார். அவரின் கருத்தைப் பகிர்ந்த பல பெரியாரியவாதிகளும், சென்னை, கோவை, திருச்சி என பல ஊர்களில் நீண்ட காலமாக சாதிமறுப்புத் திருமணம் அமைப்புகள் செயல்படுவதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
திருச்சி வட்டாரத்தைச் சேர்ந்த பெரியாரியவாதியும் சிற்றிதழாளருமான அரசெழிலன், சண்முகத்துக்குப் பாராட்டு தெரிவித்ததுடன், நிற்கவில்லை. தமிழ்நாட்டில் அவர் கூறியதற்கு மாறாக, ஏற்கெனவே காதல் திருமணத்துக்கான ஏற்பாடு பெரியாரிய அமைப்புகளிடம் இருக்கிறது என்று குறிப்பிட்டார். சென்னை, பெரியார் திடலில் சுயமரியாதைத் திருமண நிலையம் நீண்ட காலமாகச் செயல்பட்டுவருவதையும் அவர் அழுத்தமாகச் சொல்லியிருந்தார்.
சென்னையை அடுத்த ஆவடியைச் சேர்ந்த எழுத்தாளரும் மார்க்சியவாதியுமான இக்பால் அகமது, “தோழர் பெ. சண்முகம் தவறாக எதுவும் கூறவில்லை, பிற இயக்கங்களை இதில் குறை சொல்லவும் இல்லை. சாதி மறுப்பு திருமணங்களுக்கு எந்த இயக்கமும் கட்சியும் ஆதரவளித்து தத்தமது அலுவலங்களில் நடத்திக்கொள்ள யாரும் தடை விதிக்க முடியாது. வரவேற்க வேண்டியதுதான். ஆனால் சாதி மறுப்பு திருமணங்களுக்கு இங்கே எந்த ஒரு இயக்கமும் சிங்கிள் டெண்டர் எடுத்து சொந்தம் கொண்டாட முடியாது.” என்று நறுக்கென சுருக்கமாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். அவருடைய கருத்தை மார்க்சிஸ்ட் தரப்பில் கணிசமாகப் பகிர்ந்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து, அதிகமாகப் பகிரப்பட்ட கருத்து, தீக்கதிர் நாளேட்டின் முன்னாள் ஆசிரியரும் தற்போதைய பெங்களூர்வாசியுமான எழுத்தாளர் சு.பொ.அகத்தியலிங்கம் அவர்களின் கருத்து.
அவர் எழுதியது தீக்கதிர் செய்தித்தாளில் மட்டுமல்லாமல், ஆளும் கட்சியான தி.மு.க.வின் முரசொலியிலும் எடுத்து மறுபதிவு செய்திருந்தார்கள்.
சாதி மறுப்புத் திருமணங்களும் கம்யூனிஸ்டுகளும் எனத் தொடங்கி, ஆதலினால் காதல் செய்வீர் என முடித்திருந்தார், மூத்த எழுத்தாளர் சு.பொ.
”சுதந்திரப் போராட்டத் தியாகிகள் தோழர் கே டி கே தங்கமணி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 100 வயது ஆர்.நல்லகண்ணு, மறைந்த உமாநாத், என்.சங்கரய்யா, பி.ராமமூர்த்தி, ஷாஜாஜி கோவிந்தராஜன், மைதிலி சிவராமன், உ.ரா.வரதராசன், வாசுகி, பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் என காதல் திருமணம் செய்து கொண்டவர்களின் பட்டியல் போடத் தொடங்கினால் பல நூறு பக்கங்கள் தேவைப்படும்.
தோழர் என் சங்கரய்யா ஒவ்வொரு மேடையிலும் காதல் திருமணங்களுக்கு பகிரங்கமாக ஊக்கம் தருவார். அது மட்டுமல்ல ’தன் சகோதரிகளின் காதல் திருமணத்திற்காக வீட்டில் போராடுக’ என வாலிபர் சங்க மாநாட்டில் அழைப்பு விடுத்தவர் என்.சங்கரய்யா. அவர் குடும்பம் சாதி மதங்களின் சங்கமம்.” என்றவர்,
தான் ஜனநாயக வாலிபர் சங்கச் செயலாளராக இருந்தபோது டெல்லியில் ஓர் நிகழ்வில் மூத்த தலைவர் பசவபுன்னையாவோடு நடைபெற்ற கலந்துரையாடலை விவரித்துள்ளார்.
அப்போது, ”பீகார் தோழர் ஒருவர் தாங்கள் ஒரு காதல் திருமணத்தை சாதிமறுப்பு திருமணத்தை நடத்தி வைத்ததை பெருமையோடு குறிப்பிட்டார்கள். தமிழ்நாடு, கேரள தோழர்கள் இதெல்லாம் நாங்கள் தொடர்ந்து செய்வதுதானே இதை முன்னுதாரணமாகச் சொல்லவேண்டிய அவசியம் என்ன என்று கேட்டோம். அப்போது குறுக்கிட்ட தோழர் பசவபுன்னையா , “ தமிழ்நாடு கேரளாவில் சமூகச் சீர்திருத்தம் ஓரளவு நடந்துள்ளது. ஆகவே இது புதுமையாகத் தோன்றாமல் இருக்கலாம். பீகார், உ.பி. போன்ற மாநிலங்களில் இப்படிப்பட்ட திருமணங்கள் சவால்தான். வாலிபர் சங்கச் செயல்பாட்டில் இத்தகைய திருமணங்களை ஊக்குவிப்பது மிக முக்கியம். இந்துத்துவா தலை எடுக்கும் காலம் இது. ஆகவே வருங்காலத்தில் தமிழ்நாட்டிலும் இது முக்கிய கடமையாகும். வாலிபர் சங்கம் தம் கடமையில் இதையும் ஒன்றாகக் கொள்க.’ என்று சொன்னார்.
நாங்கள் சென்னையில் வாலிபர் சங்கத்தை தொடங்கியபோது சந்தித்த முக்கிய பிரச்னைகளில் காதல் திருமணமும் ஒன்று . அப்போது மாவட்டத் தலைவர்களாகத் திகழ்ந்த தோழர்கள் பி.ஆர்.பரமேஸ்வரன், வி.பி.சிந்தன், வே.மீனாட்சிசுந்தரம், கே.எம்.ஹரிபட், (தி இண்டு பத்திரிகை என்.இராமின் சமகாலத் தோழர்) மைதிலி சிவராமன், உ.ரா.வரதராஜன் தலைமையில் சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் சாதிமறுப்புத் திருமணங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். அதில் பெரும்பாலோர் கட்சி உறுப்பினரகவோ கட்சி ஆதரவாளராகவோகூட இருக்க மாட்டார்கள். கட்சித் தோழர்களின் நண்பர்களாக உறவினர்களாக பிரச்னையோடு வருவார்கள். கட்சி ஆதரவுக் கரம் நீட்டும்.
எனக்குத் தெரியும், காதல் திருமணங்களுக்கு எதிராக கட்சிக்குள் யாராவது முணுமுணுத்தால் தோழர்கள் பி.ஆர்.பி.யும் விபிசியும் மீனாட்சிசுந்தரமும் மைதிலிசிவராமனும் அதை சீரியஸான பிரச்னையாகப் பார்த்து உடனே தலையிட்டு சீர்செய்வார்கள். காதல் திருமணத்தை எதிர்த்த ஓரிரு தோழர்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானதும் உண்டு. நாங்கள் நடத்திவைத்த காதல் திருமணங்களில் நூற்றுக்குத் தொண்ணூறு வெற்றிகரமான வாழ்வையே தந்தன. தோற்றவை மிக சொற்பம். ஏற்பாட்டுத் திருமணங்களிலும் வென்றதும் தோற்றதும் இருக்கத்தானே செய்யும்!
நான் என் பொதுவாழ்வில் முதல்முறை ஓர் இரவு முழுவதும் போலிஸ் ஸ்டேஷனில் இருந்தது ஒரு காதல் திருமணத்தால்தான். நானும் என் நண்பர்களும் திருமணத்தை நடத்தி வைத்துவிட, போலீஸ் எங்களைக் கைது செய்து காவலில் வைத்தது. தோழர் உ.ரா.வரதராஜன் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி புகாரைத் திரும்பப் பெறச் செய்து திருமணத்துக்கு ஒப்புதல் பெற்றார். அதன்பின் நான் செய்துவைத்த காதல் திருமணங்களுக்கு கணக்கில்லை. நிறைய. அப்படி திருமணம் செய்தவர் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்துவைத்துள்ளேன்.
என் மகன் ,மகள் திருமணங்கள் மட்டுமல்ல; எங்கள் குடும்பத்திலும் பல நடத்தி வைத்துள்ளேன். என் குடும்பத்தில் எல்லா சாதி மதங்களும் சங்கமம்.
இப்படி நிறைய குடும்பங்கள் எம் கட்சியில் உண்டு. தற்போது ஆணவப் படுகொலைகள் நடந்துவரும் சூழலில் தோழர் சண்முகம் சாதி மறுப்பு காதல் திருமணங்களுக்கு ஊக்கம் தரும் வகையில் பேசியது எம் வரலாற்றில் தொடர்ச்சியே. புதிதல்ல. எம் வரலாற்று வேர் அது.” என்று சு.பொ. அகத்தியலிங்கம் உணர்ச்சிபூர்வமாகவும் சாதிமறுப்புத் திருமண வைபவங்களைப் பட்டியல்போட்டு எழுதியுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில், காதல் திருமணமும் அரசியலானதை அடுத்து, இப்படி இரு தரப்பும் சூடாகச் செய்த விவாதத்தை தி.மு.க.வின் முரசொலி நாளேடு முத்தாய்ப்பாக முடித்துவைத்தது என்று சொல்லலாம்.