வானம் பார்த்த பூமிக்கு நீர் வார்த்ததைப் போல பரவசத்தையும் மகிழ்ச்சியையும் ஒருசேர அளிக்கின்றன, அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சில பணிகள்.
எத்தனையோ குறைகளுக்கு மத்தியிலும் தமிழக பள்ளிக்கல்வித் துறையில் முன்னெடுப்புகள் தொடர்ந்துவருகின்றன. அதில் ஒன்றாக, கியூஆர் கோட் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தும் ஓர் அரசுப் பள்ளியின் பெருமையும் இணைந்துகொண்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்புட்குழி கிராமத்தில்தான் இந்த அருமை நடந்தேறுகிறது. காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் சாலையில், பாலுசெட்டிசத்திரம் என்ற இடத்தில் இறங்கினால் இந்த ஊரை அடைந்துவிடலாம்.
சுற்றுவட்டாரத்தில் உள்ள பத்து ஊர்களிலிருந்தும் ஆர்வத்தோடு இந்தப் பள்ளியில் மாணவர்களைச் சேர்த்துவருகிறார்கள். பெற்றோரின் திடமான முடிவுக்கான அந்தக் காரணம்தான், இந்த நவீன முன்னேற்றம்வரை கொண்டுவந்து விட்டிருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
இந்த கியூஆர் கோட் முறையில் எப்படி சேர்க்கை நடக்கும் என்கிற கேள்வி எல்லாருக்கும் இருக்கும்.
அது பெரிதாக ஒன்றுமில்லை என அலட்டல் இல்லாமல் சொல்கிறார்கள், இந்த அசத்தல் பள்ளியின் ஆசிரியர்கள்.
பள்ளியின் பெயரைப் பெரிதாகத் தலைப்பிட்டு, ஒரு பெரிய தட்டியை வடிவமைத்திருக்கிறார்கள். இதில் மையமாக கியூஆர் கோட் பதியப்பட்டுள்ளது.
அதை சேர்க்கை தேவைப்படும் மாணவர்களின் பெற்றோர் அவருடைய போன் மூலம் ஸ்கேன் செய்தால், அவருக்கு மாணவர் சேர்க்கைப் படிவம் தோன்றும்.
அதில் கேட்கப்படும் மாணவர், பெற்றோர், இருப்பிடம், மற்ற தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் தட்டி பூர்த்திசெய்து முடித்தால், கடைசியில் தானாகவே பள்ளிக்கூடத்தில் இருக்கும் கணினிக்குப் போய்ச் சேர்ந்துவிடுகிறது.
அதை ஆசிரியர்கள் தாள்களில் அச்செடுத்து தனியாகக் கோப்பில் வைத்துக்கொள்கிறார்கள். இதன்மூலம், மாணவர் சேர்க்கை உறுதியாகிவிடுகிறது என்கிறார்கள்.
மாணவர் சேர்க்கைக்கான இந்த கியூஆர் கோட் உள்ள விளம்பரத் தட்டியை பள்ளி முன்பாகவும், பேருந்துநிலையம் போன்ற இடங்களிலும் வைத்திருக்கிறார்கள். யாருக்காவது சந்தேகம் ஏற்பட்டால் பேசுவதற்கு, தலைமை ஆசிரியர் குமாரின் செல்போன் எண்ணையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதன்மூலம் அவருக்குக் குறுந்தகவலாக அனுப்பினால், அழைத்த எண்ணுக்கு பள்ளியிலிருந்து தொடர்புகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
பள்ளி திறக்கும்போது மட்டும் மாணவரின் பெற்றோர் பள்ளிக்குச் சென்று, மாணவரின் படம் ஒட்டுவது, கையெழுத்திடுவது ஆகியவற்றைச் செய்து சேர்க்கையை முறைப்படி நிறைவு செய்துகொள்ளலாம்.
பள்ளித் தரப்பில் இடைநிலை ஆசிரியர் செல்வகுமாரிடம் பேசினோம்.
இவர் இதே பள்ளியின் முன்னாள் மாணவரும்கூட.
தற்போது, 435 மாணவர்கள் இந்தப் பள்ளியில் படிக்கிறார்கள்; தலைமை ஆசிரியர் உட்பட 10 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள் என்கிறார் ஆசிரியர் செல்வகுமார்.
எப்படி, எப்போது வந்தது இந்த ஐடியா?
“ எங்கள் மாணவர்களுக்கு கணினிப் பயிற்சி, கல்வியை 2010ஆம் ஆண்டிலிருந்தே அளித்துவருகிறோம். அபாக்கஸ் சிறப்புக் கணிதப் பயிற்சியும் தருகிறோம். நான் இங்கு படித்தபோது 700 பேர்வரை இருந்தோம். அதன்பிறகு பல தனியார் பள்ளிகள் இந்தப் பகுதியிலும் வந்துவிட்டன. ஆனாலும் எங்கள் பள்ளியில் அளிக்கும் தனி கவனத்தால் இங்கு பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள்.
கியூஆர் கோடை பல ஆண்டுகளுக்கு முன்னரே குழந்தைகளிடம் நன்றாகப் புழங்கும்படி செய்துவிட்டோம். பாடத்தைத் தாண்டி பல போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களைப் பற்றிய ஒரு விவரத் தொகுப்பை உருவாக்கி, அதற்கு ஒரு கியூஆர் கோடையும் செய்து அவர்களிடம் தந்துவிடுவோம். அதை அவர்கள் குடும்பத்தினர், உறவினர்கள் சந்திப்பில் காட்டும்போது மாணவர்களின் சாதனைகளை அறிந்து பாராட்டுகிறார்கள். அப்போது மாணவர்களுக்கு அது தரும் உற்சாகத்தைப் பற்றி விவரிக்க வேண்டியதில்லை. பெற்றோருக்கும் இந்தப் பள்ளியின் மீது கூடுதலாக பிடிப்பு...” என விவரித்தவர்,
“ கடந்த ஆண்டு மாணவர்கள் கணினியில் அனிமேசன் செய்யும் அளவுக்குப் பயிற்சியில் சாதித்துக் காட்டினார்கள்.” என குறிப்பிட்டுச் சொன்னார்.
“இந்தப் பின்னணியில், இந்த கியூஆர் கோட் அட்மிசன் விளம்பரத்தை வாட்சாப் மூலமாகவும் வீட்டுக்கு வீடு பேப்பர் மூலமாகவும் அனுப்பிவருகிறோம். இதன்மூலம் பெற்றவர்கள் நேரில் வராமலேயே முதலில் சேர்க்கையை உறுதி செய்துகொள்கிறார்கள். இங்கு பெரும்பாலான பெற்றோர் முதல் ஷிப்ட் வேலைக்குப் போகிறவர்கள்... அவர்களுக்கு இது வசதியாக இருக்கிறது. மார்ச் மாதமே சேர்க்கை தொடங்கிவிடுவதால் மே மாதம் கடைசிக்குள் கிட்டத்தட்ட பெரும்பாலானவர்கள் சேர்ந்துவிடுவார்கள். எத்தனை மாணவர்கள் என எங்களுக்கும் ஐடியா வந்துவிடும். அதற்கேற்ப அவர்களுக்கான புத்தகங்கள், மற்ற நலத்திட்டங்களை பள்ளி திறந்ததும் உடனடியாகப் பெறவும் வசதியாக இருக்கிறது.” என்று முடித்தார் ஆசிரியர் செல்வகுமார்.
ஆண்டிராய்டு போன்கள் பெருகிவிட்ட காலகட்டத்தில், மக்களுக்கு வசதியாக தகவல்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும் என்பதையும் நிரூபித்துக் காட்டுகிறார்கள், இந்தப் பள்ளி ஆசிரியர்கள்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேசின் பாராட்டும் இன்று இவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
அந்திமழையின் சார்பில் வாழ்த்தும் வணக்கமும் ஆசிரியப் பெருமக்களே!