மாசுபாடே உருவாக்காத- முழுவதும் மின்சாரத்தாலேயே இயங்கக்கூடிய விமானங்களுக்கு மாற நியூசிலாந்து அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
ஏர் நியூசிலாந்து விமான சேவை நிறுவனம் இதற்காக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பீட்டா டெக்னாலஜி நிறுவனத்துடன் கைகோத்திருக்கிறது. இரு தரப்பும் சேர்ந்து நான்கு மாத சோதனையோட்டத்தைத் தொடங்கியுள்ளன.
நேர்த்தியான, கார்பன் உமிழ்வே இல்லாத பீட்டா அலியா சிஎக்ஸ் 300 என்கிற சரக்கு விமானத்தை வைத்து நியூசிலாந்தில் ஆய்வுச் சோதனையில் ஈடுபடவுள்ளனர்.
இந்தத் தொழில்நுட்பக் கூட்டாண்மைக்கான ஒப்பந்தப்படி, ஹாமில்டனிலிருந்து புறப்படும் விமானங்களில் ஆய்வுச் சோதனையோட்டம் தொடங்கப்படும். இந்த மாதமும் அடுத்த மாதமும் வெலிங்டன் - பிளன்ஹெய்ம் இடையிலான விமான சேவையில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
தொழில்நுட்ப ஆய்வில் விமானச் செயல்பாடு, சுற்றுச்சூழல் விளைவுகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். அந்த வட்டாரத்தின் வான் போக்குவரத்துக்கும் இந்தச் சோதனையோட்டம் உதவியாக அமையும் என்று கூறுகின்றனர்.
நியூசிலாந்தைப் பொறுத்தவரை வட்டார விமானங்களில் 60 விழுக்காட்டு விமானங்கள் அதிகபட்சம் 350 கி.மீ. தொலைவுக்கும் குறைவான பயணப் பாதையையே கொண்டுள்ளன. மேலும், அந்த நாட்டின் மொத்த மின்சாரத்தில் 85 விழுக்காடு புதுப்பிக்கத்தக்க வகை என்பதால் அடுத்த தலைமுறைக்கான விமானத்தைச் சோதனைசெய்ய நியூசிலாந்துதான் சரியான ஆய்வுக்கூடம் என்கிறார், ஏர் நியூசிலாந்து விமான சேவையின் தலைமை அலுவலர் நிகில் இரவிசங்கர்.
விமானப் பாதைக்கு சரியான இலக்கைத் தீர்மானித்து ஆய்வு செய்யப்படுகிறது. ஹேமில்டனிலிருந்து தெற்குப் பகுதியான வெலிங்டனுக்கு விமானம் செல்லவேண்டும். வழியில் தௌபோ, நேப்பியர், வடக்கு வால்மெர்ஸ்டன் ஆகிய ஊர்களில் தரையிறங்கிச் செல்லும்.
இந்த விமானத்துக்கு 65 கிலோவாட் மின்சாரத்தை சார்ஜ் செய்துகொள்ள வசதியாக, ஹேமில்டன், வெலிங்டன், பிளன்ஹெய்ம் விமானநிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொண்ணூறு நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால், அதை வைத்து பல வழித்தடங்களில் விமானத்தை இயக்க முடியும் என்று கூறுகின்றனர்.
இந்த ஆய்வின் கடைசிக் கட்டமாகவும், முக்கியமான பகுதியாகவும் குக் நீரிணை- பிளன்ஹெய்ம் பாதையில் நடக்கும் சோதனை இருக்கும்.
இந்தப் பாதையில்தான் சவால்கள் காத்திருக்கின்றன.
ஏனென்றால், இந்த வழித்தடத்தில் காற்று வலுவானதாக இருக்கும்; வானிலை இப்படித்தான் இருக்குமென்று முன்கூட்டியே கணிக்க முடியாது. இதன் காரணமாக, இந்தப் பயணப் பாதையின் சோதனை விவரங்கள் வான் போக்குவரத்துக்கு உயர்மதிப்பான விவரமாக அமையும்.
பீட்டா டெக்னாலஜி நிறுவனத் தயாரிப்பான இந்த மின்சார விமானம், வழக்கமான முறையில் தரையிறங்கும்- மேல் எழும்பிச் செல்லும் விமானத்தைப் போலவே விமானநிலையங்களின் தற்போதைய கட்டமைப்புக்கு ஏற்றதாக இருக்கிறது. பறக்கையில் உந்துதலின்போது ஏற்படும் காற்று மாசுபாடு உருவாகாமல் இது இயங்குகிறது என்பதுதான் சிறப்பு.
அதிகபட்சமாக 398 கி.மீ. தொலைவுவரை பறக்கக்கூடிய வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சோதனையோட்ட விமானத் தடப் பாதை 200 கி.மீ. தொலைவுக்குள்ளேயே இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு விமானப் பணியாளர்களும் 200 கன அடி சரக்குகளையும் சுமந்துசெல்ல முடியும்.
பீட்டா நிறுவனத்தினருடன் ஏர் நியூசிலாந்தின் விமானிகள் ஆண்ட்ரு மெர்சர், ஜேம்ஸ் ஓவன் ஆகியோர் குழுவுடன் இணைந்து செயல்படுகின்றனர். இரு தரப்பும் இணைந்து குறிப்பிட்ட வழித்தடங்கள், சூழல் நிலவரங்களில் விமானங்களை இயக்கி, அவற்றின் தரவுகளைச் சேகரிக்க உதவுவார்கள்.
ஏர் நியூசிலாந்தின் பருவநிலை- இயற்கை நிதியம் இத்திட்டதுக்கான நிதியுதவியைச் செய்துதருகிறது.
கடந்த அக்டோபர் 27ஆம் தேதி இதன் சோதனையோட்டத் தொடக்கம் நடைபெற்றது. முதல் நாளிலேயே தௌரங்கா பகுதியிலிருந்து ஹேமில்டன் பகுதிக்கு விமானம் பறந்தது. அடுத்த ஆண்டின் தொடக்கம்வரை இந்த விமானம் நியூசிலாந்தில் தொடர்ந்து இருக்கும். அதன்பிறகு அது பீட்டா நிறுவனத்துக்குக் கொண்டுசெல்லப்படும்.
இதனிடையே, இப்படியான புதியவகைத் தொழில்நுட்பங்கள், வான் போக்குவரத்து ஒழுங்குமுறை விதிகளுக்கு சவாலாக இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். நடப்பில் உள்ள விதிகளுடன் புதியவகை வான்போக்குவரத்து தொழில்நுட்பங்கள் பொதுவாக ஒத்துப்போவதில்லை என்கிறார் அந்நாட்டின் சிவில் விமான அதிகாரசபையின் இயக்குநர் கானே படேனா. இந்தச் சோதனையோட்டம் விதிகள், விமானம் ஆகியவற்றின் பாதுகாப்பான ஒருங்கிணைவுக்கு உரிய வழியாக அமையும் என்றும் அவர் சொல்கிறார்.
எல்லாம் திட்டமிட்டபடி நடந்துவிட்டால் நியூசிலாந்தில் குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட- குறைந்த செலவிலான, அடுத்த தலைமுறை விமான சேவையை விரைவில் தொடங்கலாம் என்கிறார்கள்.
உலக அளவில் வளிமண்டலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும்- புவி்வெப்பமயமாகி பருவநிலை தப்புதலுக்கும் காரணமாகியுள்ள பசுமைக்குடில் வாயுக்களை உருவாக்குவதில், விமானங்களின் பங்கு 3 சதவீதம் அளவுக்கு ஆகிவிட்டது. எனவே, விமானங்களில் கார்பன் உமிழ்வு குறைக்கப்படுவதும் இல்லாமல் ஆக்கப்படுவதும் எவ்வளவு பெரிய நன்மை!
இந்தச் சோதனையோட்டம் நல்லபடியாக நடந்து முடியட்டும்!