
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான கென்ய நாட்டின் 22 வயது இளம் பெண் ட்ரூபினா முத்தோணி தொடர்ச்சியாக மூன்று நாள்கள் மரத்தைக் கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அவர் நைரி ஆளுநர் அலுவலகத்தில் உள்ள கடந்த 11ஆம் தேதி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.25 மணியுடன் தன்னுடைய 72 மணி நேர சாதனையை முடித்துக்கொண்டார். இதை கின்னஸ் சாதனைக் குழுவினர் நேரில் வந்து ஆய்வுசெய்திருந்தனர். பின்னர் அவர்கள் ட்ரூபீனாவின் சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினர்.
முன்னதாக, அவரே இதில் 48 மணி நேரம் தொடர்ந்து சாப்பிடாமல் தூங்காமல் தொடர்ச்சியாக மரத்தைக் கட்டிப்பிடித்தபடி இருந்தார். கடந்த ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 2ஆம் தேதிவரையும் அவர் இந்தச் சாதனையைச் செய்திருந்தார்.
இப்போது, தன்னுடைய முந்தைய சாதனையையும் அவரே முறியடித்துள்ளார்.
இயற்கையோடு இணைந்து வாழ்வதில் மனமார்ந்த, உணர்ச்சிமயமான பலன்கள் எந்த அளவுக்குக் கிடைக்கும் என்பதையும் மன நலம் பற்றிய விழிப்பூட்டலுக்காக, இந்தச் சவாலை டுரூபினா செய்துள்ளார்.
இசையும் பண்பாடும் படிக்கும் மாணவரான அவருக்கு, இதற்காக ஐந்து மாதங்கள் தன்னைத் தயார்செய்துகொண்டுள்ளார்.
ஒவ்வொரு நாளும் நாற்பத்திரண்டு கி.மீ. தொலைவு நடந்தும் 12 மணி நேரம் மரத்தைப் பிடித்தும் பயிற்சி எடுத்துள்ளார்.
தன்னுடைய முயற்சி குறித்து நேசன் இதழுக்கு அளித்த பேட்டியில், “ இயற்கையை நேசித்து அதன் மீது மக்கள் அக்கறை கொள்ளவேண்டும் என அவர்களிடம் எடுத்துச்சொல்ல விரும்புகிறேன். இப்போதெல்லாம் நிறைய மரம் நடு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அடிக்கடி பூர்வீக வனங்களை அழித்துவிட்டு புதிதாகக் கன்றுகளை நடுகிறார்கள். இதை ஒரு தணிப்பு நடவடிக்கை என நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அப்படி அல்ல. ஏற்கெனவே இயற்கையாக நம்மிடம் என்ன உள்ளதோ அதை முதலில் பாதுகாக்க வேண்டும்.” என்று ட்ருபீனா கூறியுள்ளார்.
கின்னஸ் சாதனைக்காக அவர் பிடித்துக்கொண்டு இருந்ததுகூட, ஆப்பிரிக்க மரபு மரம் ஒன்றைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
”வாழ்க்கையில் கடினமான சூழல் வரும்போது இயற்கை நம்மைத் தாங்கிப் பிடித்துக்கொள்ள முடியும்; மரங்களைப் பாதுகாப்பது என்பது நம்முடைய மன நலனையும் பாதுகாப்பதன் ஓர் அங்கமும் ஆகும்.” என்று சாதனைக்குப் பின்னர் ஊடகத்தினரிடம் ட்ரூபீனா குறிப்பிட்டார்.