வைகோ-திருமா... வார்த்தை விளையாட்டா, விவகார அரசியலா?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
Published on

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கும் வி.சி.க.வுக்கும் இடையில் வார்த்தை விளையாட்டாகத் தொடங்கி அரசியல் கூட்டணி விவகாரமாகிப் போனது. 

தி.மு.க. கூட்டணியில் இருந்தபோதிருந்தே வைகோ வி.சி.க. மீது தாங்கலாகப் பேசிவந்தார். அதாவது, விஜய் அமைச்சரவையிலும் பங்கேற்று, தி.மு.க.வுடனும் இணக்கம் என்பதைக் கிண்டலாகக் குறிப்பிட்டு வந்தார். இதில், மற்ற கட்சிகளையும் சேர்த்து சொல்வதைப் போல அவர் பேசிவந்தார். 

அதன்பிறகு தி.மு.க. அணியைவிட்டு வெளியேறி, த.வெ.க. கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் வைகோ கலந்துகொண்டபோது வி.சி.க. மீது அவர் எந்த மாறுபாட்டையும் வெளிப்படுத்தவில்லை. 

இந்தப் பின்னணியில் சங்கரன்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சரவையிலும் இருக்கிறோம்; தி.மு.க.வுடனும் நட்பு தொடரும் எனத் திருமாவளவன் பேசியது நோபல் பரிசுக்கு உரிய பேச்சு எனக் கிண்டலடித்தார். 

இதனால், அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே கூட்டணியில் இருந்துகொண்டு அவர் இப்படி பகிரங்கமாகக் கூறியது சர்ச்சை ஆனது.  

அரியலூரில் திருமாவிடம் செய்தியாளர்கள் இதைப் பற்றிக் கேட்க, நோபல் பரிசுக்குப் பரிந்துரைத்ததற்காக வைகோவுக்கு நன்றி; பரிசு கிடைத்தால் நன்றி சொல்வேன் என்று பதிலுக்கு நக்கலாகக் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து, வி.சி.க.வின் பொருளாளர் பாலாஜி, நோபல் பரிசுக்கு கோயபல்ஸ் தகுதியானவர் அல்ல என காட்டமாகச் சாடி கருத்து வெளியிட்டார்.

இன்று காலையில் சங்கரன்கோவிலில் மீண்டும் ஊடகத்தினரிடம் பேசிய வைகோ, தான் நேற்று சொன்னது திருமாவின் மனதைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தப்படுவதாகவும் அதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் ஒரேயடியாக பல்டியடித்தார்.

திருமாவளவனை ஆகோ ஓகோ என்றும் அவர் புகழ்ந்தார்.

நல்வாய்ப்பாக இத்துடன் இந்த விவகாரம் நிறைவு பெற்றது.

logo
Andhimazhai
www.andhimazhai.com