ஆந்திராவைச் சேர்ந்தவர் காஞ்சி மடத்தின் அடுத்த மடாதிபதி ஆகிறார்!

ஆந்திராவைச் சேர்ந்தவர் காஞ்சி மடத்தின் அடுத்த மடாதிபதி ஆகிறார்!
Published on

காஞ்சிபுரம் மடத்தின் இளைய மடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். அட்சய திரிதியை நாளான வரும் 30 ஆம் தேதி அன்று காஞ்சிபுரம் மடத்தில் பதவியேற்பு விழா நடைபெறும். 

மடத்தின் தற்போதைய மூத்த மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி அவருக்கு முறைப்படி சன்யாசம் வழங்குவார் என்று மடத்தின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

துட்டு வெங்கட சூர்ய சுப்ரமணிய கணேச சர்மா திராவிட் எனப்படும் இவர், ரிக் வேதத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர் என்றும், தெலங்கானாவின் நிஜமாபாத்தில் நிர்மல் மாவட்டம் பசாராவில் உள்ள ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் பணியாற்றியவர் என்றும் மட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் வேதங்களைப் படிக்கத் தொடங்கிய கணேச சர்மா, ரிக் வேதம் மட்டுமின்றி, யஜூர், சாம வேதங்களிலும் சடங்காக்களிலும் ஒன்பது உபநிசத்துகளிலும் தேர்ச்சி கொண்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆதிசங்கரர் கி.மு. 482இல் இந்த மடத்தை நிறுவியதாக ஒரு தரப்பினர் கூறிவரும் நிலையில், அவரின் 2534ஆவது பிறந்த நாள் வரும் மே 2ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

எனவே, இரண்டு நாள்களும் ஒட்டியொட்டி வருவதை மடத்தின் முகவர் சல்லா விசுவநாதா மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com