பாகிஸ்தான் ராணுவத்துக்கு ரகசிய தகவலைப் பகிர்ந்து உளவு பார்த்ததாக மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர் மோதி ராம் ஜாத் என்பவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில், ”கைது செய்யப்பட்ட மோதி ராம் ஜாட் என்பவர் 2023 முதல் பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளுடன் ராணுவ ரகசிய தகவலை பகிர்ந்துள்ளார்.
இதற்காக பல முறை பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளிடம் இருந்து பணம் பெற்றது கண்டறியப்பட்டுள்ளது. இவரை டெல்லியில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றோம்.
சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மோதி ராமுக்கு, ஜூன் 6 ஆம் தேதி வரை என்ஐஏ காவல் விதிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெகல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து இந்தியாவில் இருந்து கொண்டு தேசவிரோத செயல்களில் ஈடுபடும் நபா்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
அரியாணாவைச் சோ்ந்த பெண் யூடியூபா் ஜோதி மல்ஹோத்ரா உள்பட 4 உளவாளிகள் அண்மையில் கைது செய்யப்பட்டார். அதேபோல், கடந்த சனிக்கிழமை குஜராத்தில் கட்ச் மாவட்டத்தில் உள்ள ராணுவ நிலைகள் தொடர்பான புகைப்படங்கள், தகவல்களை பாகிஸ்தானைச் சோ்ந்த பெண் உளவாளிக்கு அளித்த சுகாதாரப் பணியாளர் சாந்தேவ்சிங் கோகில் என்பவர் மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.