அஜித் மரணம்... “எனக்கு யாருடனும் தொடர்பு இல்லை..!” அழுதபடி நிகிதா வெளியிட்ட ஆடியோ.!

நிகிதா
நிகிதா
Published on

“மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், போலீஸ் ஸ்டேசனில் புகார் கூறிய பிறகு நடந்த எதுவும் தெரியாது. அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக நான் குற்றவாளி கிடையாது,'' என அவர் மீது நகை திருட்டு புகார் கூறிய நிகிதா கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகாரளித்தவர் பேராசிரியை நிகிதா. இவர் மீது பல்வேறு திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்துள்ளன.

இந்நிலையில், நிகிதா ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த ஆடியோவில் அவர் கூறியுள்ளதாவது:

“வேதனையோடும் துயரத்தோடும் இந்த ஆடியோவை அனுப்புகிறேன். ஒரு பெண் படித்து, உயர்கல்வி பயின்று, வேலை வாங்கி தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுவது பெரிய சவாலக உள்ளது. ஒரு பெண் மீது யாராவது சிறு குற்றம் சொன்னால், ஊரே கூடி அந்த பெண்ணை குழித்தோண்டி புதைகின்ற வரை சும்மா இருக்க மாட்டார்கள்.

தம்பி அஜித்குமாரின் மரணம் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது. அவரின் தாயார் அழுதாரோ இல்லையோ என்று தெரியாது நானும் என் அம்மாவும் அழுதுக் கொண்டிருக்கிறோம்.

காவல் துறை தாக்கும் வீடியோவை எடுத்த சக்தீஸ்வரன் என்னுடன் தான் இருந்தார். தாயாருக்கு அடிக்கடி மயக்கம் வரும்போது டீ எல்லாம் வாங்கி கொடுத்து ஆதரவாக இருந்தார். போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் நடந்ததை எழுதி கொடுக்க காத்து இருந்தோம். புகார் எழுதி கொடுத்துவிட்டு வந்துவிட்டோம். இன்ஸ்பெக்டர் 8:30 மணிக்கு வந்துவிட்டார். இதன் பிறகு வந்துவிட்டோம். அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் எதுவும் தெரியாது. என்ன நடந்தது என்பது கூட தெரியாது. அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக நான் ஒன்றும் குற்றவாளி கிடையாது. அது கடவுளுக்கு தெரியும். எவ்வளவு பேர் என் மீது என்னென்னமோ வாரி இறைக்கிறீங்க. இந்த சூழ்நிலையை என்னுடைய மன உறுதியை கடவுள் சோதிக்கிறார் என நினைத்து கொள்கிறேன்.

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என்பது எவ்வளவோ துயரங்களையும், துரோகிகளையும் சந்தித்தது. என்னை பற்றி பேட்டி கொடுக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையை திருப்பி பார்த்தால், அவர்கள் எவ்வளவு பெரிய மோசமானவர்கள் என்பது தெரியும். அவர்களுக்கு மனசாட்சி இருந்தால்.

முதல்வர் மீது மரியாதையான எண்ணம் தான் உள்ளதே தவிர, தனிப்பட்ட முறையில் எதுவும் கிடையாது. அஜித்குமார் மரணம் அடைந்த பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுத்து வருகிறார். அப்பேர்பட்ட மனிதர், அஜித்குமார் தாயாரின் உணர்வை மதித்து 'சாரி ' கேட்டார் என்றால், நான் அஜித்குமாரின் தாயாரிடம் பல முறை சாரி கேட்க வேண்டும். பல முறை மன்னிப்பு கேட்க வேண்டும். என்னால் நேரில் வர முடியவில்லை. கேமராக்கள் என்னை விடாமல் துரத்துகிறது. வீட்டு கதவை திறக்க முடியவில்லை. நானும் எனது அம்மாவும் தினமும் அழுது கொண்டிருகிறோம்.

உயிர்களை அதிகம் நேசிப்பேன். எந்த உயிரும் கொல்லக்கூடாது. பாதிக்கப்படக்கூடாது என நினைப்பேன். குக்கர் மூடியில் எறும்பு ஒட்டியிருந்தால், அதனை குச்சியில் தட்டிவிடுவேன். வீடுகளுக்கு பல முறை பாம்புகள் வந்தால், அதனை அழிக்க வேண்டாம் என சொல்லி உள்ளேன். வாழ்றது அனைத்து உயிர்களின் உரிமை. இதுபோன்ற சூழ்நிலையில், ஐஏஎஸ் அதிகாரியை தெரியும். அவங்கள தெரியும். இவுங்கள தெரியும். போன் பண்ணியதாக சொல்கின்றனர்.

தம்பி அஜித்குமார் மரணத்தை எப்படி எடுத்து சொல்லணும். அவர் குடும்பம் மீது அக்கறை இருந்து அன்பையும், இரங்கலையும் வெளிப்படுத்த வேண்டும் என்றால், சேனல்கள் திசை திருப்ப பேசி கொண்டு இருக்க மாட்டார்கள்.

எனது தந்தை நேர்மையான அதிகாரி. நாங்கள் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோவையில் தான். பிரச்னைக்கு எல்லாம் காரணம், இவ்வளவு அசிங்கபடுத்துகிறது, மீடியாவில் வருவதற்கு ஆலம்பட்டி ஒன்றிய செயலாளர் சண்முகம் தான். வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கக்கூடாது என்பதற்காக முனைப்பாக செயல்பட்டு வருகிறார்.” இவ்வாறு நிகிதா கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com