அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்துவிட முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "நம்முடைய கூட்டணி பலமாக கூட்டணியாக அமையும். பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிமுக இத்தோடு முடிந்துவிடும் என ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால், ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது. நாட்டை காப்பதற்கு ராணுவம் போல அதிமுகவை வெற்றி பெறச் செய்ய சிப்பாய்களாக தொண்டர்கள் உள்ளனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும். அதிமுகவின் பூத் கமிட்டி ஏஜெண்ட் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 25 வாக்குகளைப் பெற்றுத் தர வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் பலமான கூட்டணி அமையும். முதற்கட்டமாக பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதற்குக் கூட பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டீர்களா என்று ஸ்டாலின் பதறுகிறார். அதிமுக யாருடன் கூட்டணி வைத்தால் ஸ்டாலினுக்கு என்ன கவலை?
பாஜக - அதிமுக கூட்டணி வைத்த உடனேயே ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வாக்குகள் சிதறாமல் அதிமுகவுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கூட்டணி அமைக்கப்பட்டது. மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டும் என்பதற்காகவே கூட்டணி அமைத்துள்ளோம்.
அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் பேசுகின்றன. 31 வருடங்கள் தமிழகத்தில் ஆட்சி புரிந்த, பொன் விழா கண்ட அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்துவிட முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவை அழிக்க கருணாநிதி எவ்வளவோ முயற்சிகள் செய்தார். ஆனால், அனைத்தையும் முறியடித்தோம். கருணாநிதியாலேயே அதிமுகவை ஒழிக்க முடியவில்லை. ஆகவே, ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது.
எடப்பாடி பழனிசாமி பொறுப்பு ஏற்ற பிறகு 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துவிட்டது என்று ஸ்டாலின் பேசுகிறார். ஆனால், 2011 முதல் 2021 வரை எத்தனை முறை திமுக தோல்வி அடைந்தது என்று அவர் யோசித்துப் பார்க்க வேண்டும். 2011ஆம் ஆண்டு எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாமல் போனது திமுக. ஆகவே, அதிமுகவை விமர்சனம் செய்ய திமுகவுக்கு தகுதியில்லை.
2021 இல் மக்களை ஏமாற்றுவதற்காக சுமார் 500-க்கும் மேலான அறிவிப்புகளை வெளியிட்டார்கள். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது திமுக. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், சிலிண்டர் மானியம், கல்விக் கடன் என்று எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை.
திமுக அமைச்சர்கள் மீது உள்ள அனைத்து ஊழல் வழக்குகளும் அதிமுக ஆட்சி அமைந்ததும் விரைந்து விசாரிக்கப்படும். ஒருவரையும் விடமாட்டோம். வேண்டும் என்றே பொய் வழக்கு போடுவது, அதிமுகவை அவதூறாக பேசுவதை எல்லாம் நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா? வேடிக்கை பார்த்த அந்தக் காலம் எல்லாம் மாறிவிட்டது. அன்று இருந்த பழனிசாமி வேறு, இனி பார்க்க போகிற பழனிசாமி வேறு." என ஆவேசமாகப் பேசியுள்ளார்.