கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் விபத்து நிகழ்ந்த ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க ஒரு ஆண்டுக்கும் மேலாகியும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுக்கவில்லை என்று தெற்கு ரயில்வே சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
செம்மங்குப்பம் ரயில் விபத்துக்கு மன்னிப்புக் கோருவதாக தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி செந்தமிழ்ச் செல்வன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், செம்மங்குப்பத்தில் ரயில்வே கேட் இருக்கும் இடத்தில் சுரங்கப்பாதை அமைத்து, கேட்டை மூடும் பணிக்காக, தெற்கு ரயில்வே நிதி ஒதுக்கி, ஓராண்டாகிவிட்டது. ஆனால், அங்கு சுரங்கப் பாதை அமைக்க கடலூர் ஆட்சியர் ஒரு வருடமாக அனுமதி கொடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே, ரயில்வே கேட் பகுதியில், தனியார் பள்ளி வேன் மீது விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மோதிய விபத்தில், திராவிடமணி என்பவரின் மகள் சாருமதி (16), மகன் செழியன் (15), விஜயசந்திரகுமார் என்பவரின் மகன் விமலேஷ் (10) ஆகியோர் பலியாகினர்.
மேலும், பள்ளி வேனில் இருந்த ஓட்டுநர் சங்கர் (47) மற்றும் 2 மாணவர்கள் காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக விபத்து குறித்து தெற்கு ரயில்வே முதலில் வெளியிட்ட அறிக்கைக்கும், இரண்டாவது அறிக்கைக்கும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ரயில்வே வெளியிட்ட முதல் அறிக்கையில், செம்மங்குப்பம் ரயில் கேட்டை கேட் கீப்பர் மூடியதாகவும், தனியார் பள்ளி வேன் ஓட்டுநர் கேட்டதால், கேட்டை மீண்டும் திறந்துவிட்டதாக தெரிவித்திருந்தது. பிறகு, அந்த அறிக்கையை திருத்தி இரண்டாவது அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கேட் கீப்பர், ரயில்வே கேட்டை மூட முயன்றதாகவும், அதனை திறக்க சொல்லி ஓட்டுநர் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கேட் கீப்பர் பணியிலிருந்து கைது செய்யப்பட்டிருக்கும் பங்கஜ் சர்மாவை, பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வேன் மீது ரயில் மோதிய வேகத்தில் 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகம் - ஆலப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து நேரிட்டுள்ளது.