மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்பிக்கள் உள்ளனர். இதில், 233 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மீதியுள்ள 12 பேர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
அதில், கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில்துறை, சமூக சேவை, பத்திரிகையாளர் எனப் பலதரப்பட்ட ஆளுமைகளின் பெயர்களை மத்திய அரசு பரிந்துரை செய்யும். அதனை ஏற்று குடியரசுத் தலைவர் அந்த பட்டியலில் உள்ளவர்கள் மாநிலங்களை எம்.பி.யாக ஒப்புதல் வழங்கி அறிவிப்பார்.
அவர்கள் மாநிலங்களவை தலைவர் பொறுப்பு வகிக்கும் துணை குடியரசுத் தலைவர் முன்னிலையில் எம்.பியாக பதவியேற்பர். தற்போது, 4 பேருக்கு நியமன எம்.பி. பதவியை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்து உள்ளார்.
அதன்படி வழக்கறிஞர் உஜ்வல் நிகம், கேரளாவைச் சேர்ந்த கல்வியாளர் சதானந்தன் மாஸ்டர், முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்ளா, வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின் ஆகிய 4 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் விரைவில் எம்.பியாக பதவியேற்க உள்ளனர். இவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.