‘தமிழ் மருத்துவ ஏடுகளை களவாடும் வடக்கத்திய கும்பல்’

கவிஞர் குட்டி ரேவதி
கவிஞர் குட்டி ரேவதி
Published on

தமிழர்களின் மருத்துவ அறிவுக் களஞ்சியமான சித்த மருத்துவ மூல புத்தகங்கள் பலவற்றை, ஆயுர்வேத மருத்துவ அட்டவணையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் இணைத்துள்ளது கண்டனத்திற்குரியது என கவிஞரும் சித்த மருத்துவருமான குட்டி ரேவதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக ஊடகப்பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“சமீபத்தில் ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் பிப்ரவரி 7,2025 வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், தமிழர்களின் மருத்துவ அறிவுக் களஞ்சியமான சித்த மருத்துவ மூல புத்தகங்கள் பலவற்றை ஆயுர்வேத மருத்துவ அட்டவணையில் இணைத்துள்ளது. இது மிக கண்டனத்திற்குரியது.

இது குறித்தான கருத்துக்களை பொதுமக்கள் மூன்று மாதங்களுக்குள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் மிகப்பெரிய அளவுக்கு விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய இவ்விடயமானது ஒன்றிய ஆயுஷ் அமைச்சகத்தின் உள் நடைபெறும் அலுவல் ரீதியான சீரமைப்பாகவும், போதுமான புரிதல் இல்லாமையாலும் தினம்தோறும் நம்மை சுற்றி நடைபெறும் பரபரப்பான அரசியல் நிகழ்வுகளாலும், முழு கவனம் கொள்ளப்படவில்லை.

தமிழ் செவ்வியல் இலக்கியங்களைத் தொகுத்துப் பாதுகாத்துக் கொண்டாடும் தமிழ் சமூகம் அறியாமையால், தமிழ் மருத்துவ ஏடுகளை களவாடும் வடக்கத்திய கும்பலின் சூழ்ச்சியை புரிந்து கொள்ளாதவர்களாக உள்ளோம்.

இதனை துறை சார்ந்த பிரச்சனையாகவோ, ஆளும் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கையாகவோ கருதி கடந்து செல்லாமல். உலகத் தமிழர்கள் தமிழர் மருத்துவ அறிவான சித்த மருத்துவத்தை நவீன அறிவியல் துணை கொண்டு ஏற்றுக் கொண்டாலும் அல்லது விமர்சனம் செய்தாலும், தமிழர் மூல மருத்துவ ஏடுகளை பிறர் களவாடும் போது அதனை ஒன்றுபட்டுப் பாதுகாப்பது, எதிர்வினையாற்றுவது நமது கடமையாகக் கொள்ள வேண்டும் .

அந்த வகையில் ஒன்றிய அரசின் தவற்றைக் கண்டித்தும், தமிழக அரசு ஆற்ற வேண்டிய உரிய எதிர்வினையை சுட்டிக்காட்டியும் நமது எதிர்ப்பினை ஆயுஷ் அமைச்சக மின்னஞ்சலில் பதிவு செய்ய வேண்டுமாறு சித்த மருத்துவ சமூகத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இதைச் செய்வதன் வழியாக, சமூகத்தின் அரிய பணியை ஆற்றியவர்களாகிறோம்.”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com