நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டியில் கார்ல்சனை உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ் மற்றும் அர்ஜூன் எரிகைசி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அதேபோல, நார்வேவைச் சேர்ந்த 5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் உள்பட மொத்தம் 6 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்று நடந்த போட்டியில் குகேஷ், நார்வேவின் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். வெள்ளை நிற காயுடன் ஆட்டத்தை தொடங்கிய குகேஷை விட கார்ல்சனே பெரும்பாலான சமயங்களில் ஆதிக்கம் செலுத்தினார். இருப்பினும் சாமர்த்தியமாக விளையாடிய குகேஷ் இறுதியில் வெற்றி பெற்று, கார்ல்சனுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். இதனால், ஏமாற்றம் அடைந்த கார்ல்சன் மேஜையை கையால் ஓங்கி அடித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் நார்வே செஸ் போட்டியின் புள்ளிகள் பட்டியலில், குகேஷ் 8.5 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.