‘அமித் ஷா அல்ல… எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை பா.ஜ.க.வால் ஆள முடியாது’ – முதல்வர் ஸ்டாலின்

அமித் ஷா - மு.க.ஸ்டாலின்
அமித் ஷா - மு.க.ஸ்டாலின்
Published on

எங்கள் தமிழ்நாடு எப்போதும் தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொன்னேரியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசையும், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் பல்வேறு கருத்துகளை முன்வைத்துப் பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரு மாநிலத்துக்குள் சென்று, அங்குள்ள ஆட்சியை உடைத்து பாஜகவால் ஆட்சியமைப்பதைப் போல தமிழ்நாட்டில் செய்ய முடியாது. டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றுமே அடிபணியாது. அமித் ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை பாஜகவால் ஆள முடியாது. ஏனென்றால் இது தமிழ்நாடு

2026ஆம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சிதான். உங்கள் உருட்டல் மிரட்டல்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்,

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு எல்லா வகையிலேயும் நமக்கு தடையை ஏற்படுத்துகிறார்கள். எப்படியெல்லாம் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு குடைச்சல் கொடுக்க முடியும் என்று யோசித்து அனைத்து ரூபத்திலேயும் அதை செய்கிறார்கள். ஆனால், இது எல்லாவற்றையும் மீறி, மத்திய அரசே வெளியிடுகின்ற அனைத்து தரவரிசையிலும், அனைத்து புள்ளி விவரங்களிலும் நம்முடைய தமிழ்நாடு தான் முதன்மை இடத்தை மீண்டும் மீண்டும் பிடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் என்ன? நம்முடைய திறமையான நிர்வாகம்! இத்தனை இடர்பாடுகளை நீங்கள் உருவாக்கும்போதே நாங்கள் இந்த அளவு சிறப்பாக செயல்படுகிறோம் என்றால், எங்களை வஞ்சிக்காமல் தமிழ்நாட்டிற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை கொடுத்தால், எங்கள் உரிமைகளில் தலையிடாமல் இருந்தால், எங்களால் இன்னும் பல மடங்கு சிறப்பாக செயல்பட முடியும்! நீங்கள் செய்யவில்லை என்றால், நீங்கள் ஏற்படுத்துகின்ற தடைகளை எல்லாம் ஒவ்வொன்றாக சட்டபூர்வமாக உடைத்தெறிவோம்!

தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் நம்பர்-1 மாநிலமாக மாற்றுவதற்கு நாங்கள் உழைத்துக் கொண்டே தான் இருப்போம். இதனால் தான் தமிழ்நாடு மட்டும் எப்படி தனித்துவமாக இருக்கலாம் என்று நினைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2026-ல் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று நாடாளுமன்றத்தில் பேசுகிறார். தமிழ்நாட்டிற்கு வந்து அதை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நான் அவருக்கு சவாலாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தில்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது. அப்படி ஒரு தனி குணம், ஒரு தனித் தன்மை கொண்டவர்கள் நாங்கள். மற்ற மாநிலங்களுக்குச் சென்று அங்கே உள்ள கட்சிகளை உடைத்து, ரெய்டு மூலமாக மிரட்டி, ஆட்சி அமைக்கின்ற உங்களுடைய ஃபார்முலா இங்கே தமிழ்நாட்டில் வேலைக்கு ஆகாது. நீங்கள் ஏமாற வேண்டாம்.

எங்கள் தமிழ்நாடு மத்திய அரசுக்கு எப்போதுமே அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான். இங்குள்ள சிலரை மிரட்டி கூட்டணி வைத்துள்ள நீங்கள் ஜெயிக்க முடியுமா? உங்கள் பரிவாரங்கள் அனைத்தையும் அழைத்து வாருங்கள். ஒரு கை பார்த்துவிடலாம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com