எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணையும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று கூறிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், என்.டி.ஏ கூட்டணிக்கு ஓ.பன்னீர்செல்வம் வர வேண்டும் என்பது எங்களின் விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அக்கட்சியின் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று அயனாவரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய டிடிவி தினகரன், "எங்களுக்கு மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கி 7 ஆண்டுகள் முடிந்து, எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். அமமுக எந்த இலக்கை நோக்கி தொடங்கப்பட்டதோ அந்த இலக்கை அடையும் வரை எங்களுடைய பயணம் ஓயாது. தீய சக்தி திமுகவை வீழ்த்துவதற்காக ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் ஒரே குடையின் கீழ் பல சண்டை சச்சரவுகளை தாண்டி ஒன்றிணைந்துள்ளோம்" என்றார்.
தொடர்ந்து, "ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும், பாஜகவின் டெல்லி தலைவர்கள் அதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். பி.எல்.சந்தோஷ் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அவரை மீண்டும் கூட்டணிக்குள் அழைத்து வந்தால் மகிழ்ச்சிதான். கடந்த ஒரு வருடமாக நான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கிறேன். தேவை ஏற்பட்டால் பாஜக தலைவர்களை நேரில் சந்திப்பேன்" என்றார்.
ஆட்சிகளிலேயே மிக மோசமான ஆட்சி தற்போது நடந்து கொண்டிருக்கும் திமுக ஆட்சிதான். வருகிற 2026ஆம் தேர்தலில் திமுக ஆட்சி நிச்சயம் வீழ்த்தப்படும். திமுக திராவிட மாடல் ஆட்சி எனக் கூறி விளம்பரப்படுத்தி கொள்கிறது. ஆனால், திமுக ஆட்சியில் தான் துப்புரவு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் போராடி வருகின்றனர்" என்றார்.