'பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வேண்டும்'

ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி
Published on

“பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வர வேண்டும்’ என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், சுவாமி சகஜானந்தா ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் சுவாமி சகஜானந்தர் 135ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.

இவ்விழாவை, தமிழக ஆளுநர் ரவி தொடங்கி வைத்து பேசியதாவது:

இந்த மண் சிவன் பிறந்த மண். சுவாமி சகஜானந்தா தோன்றிய காலத்தில் இரண்டு சக்திகளை எதிர்கொள்ள வேண்டும். அதில் ஒன்று கடவுள் இல்லை என்கிற சக்தி. காரல்டுவெல் அமெரிக்க பத்திரிகையில் இந்திய கலாச்சாரம் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்திடம், இந்திய கலாச்சாரத்தை முழுமையாக சீர்குலைத்தால் மட்டுமே நாம் ஆட்சி செய்ய முடியும் என்று கால்டுவெல் கூறினார்.

அதனால் கிறிஸ்தவ மிஷனரிகள் தங்கள் மதத்துக்கு மாற்ற முனைந்தார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் நம்மை ஆளவந்த பிறகு நாம் எப்படி இருந்தோம்? அவர்கள் ஆள்வதற்கு முன்பு கலாச்சாரம் எப்படி இருந்தது? என்று ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும்.

பிரிட்டிஷ் அரசாங்கம் என்பது 200 ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆளுநர்களை நியமித்து நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் ஆராய்ந்து அதிலிருந்து ஒரு அறிக்கை எடுத்து அதன்மூலம் சீர்குலைக்க தங்களது பணியை தொடங்கினார்கள். எத்தனை கல்விக் கூடங்கள் இருக்கின்றன? அதில் எந்தெந்த சமூகத்தினர் படிக்கிறார்கள்? என்று கணக்கெடுத்தார்கள். மகாத்மா காந்தி, ‘பிரிட்டிஷ் அரசாங்கம் வருவதற்கு முன்பு அழகான மரமாக இருந்தோம், நீங்கள் வந்த பிறகுதான் கிளைகளை அழித்து விட்டீர்கள்’ என்று கூறியுள்ளார்.

நாகை மாவட்டம் கீழ்வெண்மனையில் தலித் சமூகத்தினர் கொல்லப்பட்ட கிராமத்துக்கு சென்றிருந்தேன். அங்கே ஒருவருக்குகூட சரியான வீடு இல்லை. அதனால் பிரதமர் திட்டத்தின் கீழ் அங்கு வீடுகளை கட்டுவதற்கான திட்டத்தை செயல்படுத்துகிறோம். இங்குள்ள அடித்தட்டு மக்கள் வறுமையிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். கிராம அளவில் சென்று என்ன நடக்கிறது என தெரிந்துகொண்டு, நந்தனார் கல்விக்கழகத்தை தொடங்கி இந்த சமூகத்தை உயர்த்த முடியும் என்ற நம்பிக்கையோடு கல்வி மூலம் சமுதாயத்தை சீரமைக்க முன்னெடுத்தவர்தான் சுவாமி சகஜானந்தா.

பட்டியல் சமூக ஊராட்சி தலைவருக்கு நாற்காலி கொடுப்பதில்லை. காலணி அணிந்துகொண்டு கிராமத்தில் செல்ல முடியாத சூழ்நிலை தான் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அரசியல் காரணங்களுக்காக 200 பிரிவுகளுக்கு மேலாக பிரித்து வைத்துள்ளனர். நாம் அவர்களை ஒன்றிணைத்து வைக்க வேண்டும்.

பட்டியல் சமூகத்தில் இருந்து ஒரு முதல்வர் வர வேண்டும். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் இஸ்ரோவின் தலைவராக வர வேண்டும். சகஜானந்தாவின் கனவை நிறைவேற்ற உறுதி ஏற்க வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுவாமி சகஜானந்தா பெயரில் ஒரு இருக்கை அமைக்கப்படும் என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com