ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பெகல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா முழுவதும் ஆதரவு எழுந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு தமிழகம் இராணுவத்தின் பக்கம் நிற்பதாக கூறியுள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். நாட்டிற்காகவும், ராணுவத்திற்காகவும் தமிழ்நாடு என்று உறுதியுடன் நிற்கும்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
பெகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, ஆபரேஷன் சிந்தூர் துல்லியமாக செயல்படுத்தியதற்காக இந்திய ஆயுதப்படைகளை நான் பாராட்டுகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் விழிப்புடன் கூடிய தலைமையின் கீழ் நீதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்க்கமான நடவடிக்கை, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும், நமது குடிமக்களைப் பாதுகாப்பதற்கும் நமது தேசத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
நாட்டின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானவையே: மத்திய அரசுக்கு அனைவரும் துணை நிற்போம்! காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை; தேவையானவை. இதில் மத்திய அரசுக்கும், முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்க வேண்டும்
நடிகர் ரஜினிகாந்த்
போராளியின் சண்டை தொடங்கியது. இலக்கை அடையும் வரை நிறுத்த வேண்டாம். மொத்த தேசமும் பிரதமர் மோடியின் பின்னால் நிற்கிறது.