ஓ.பி.எஸ். விரும்பினால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு! - நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்
Published on

ஓ.பன்னீர்செல்வம் விரும்பினால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு' என்ற அமைப்பை உருவாக்கி, தனது ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார்.

இந்த கூட்டணி வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட உள்ளது. அதே நேரம் தாங்கள் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து வந்தார்.

இதற்கிடையே கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை, நேரில் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தி அடைந்தார்.

இந்த நிலையில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அப்போது, 'நம்மை மதிக்காத பாஜக கூட்டணியில் இனியும் இருக்கக்கூடாது' என்று நிர்வாகிகள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார். இதையடுத்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று 2 முறை சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் ஓபிஎஸ் விலகல் குறித்து செய்தியாளர்கள் பல கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு அவர் அளித்த பதில், “தேசிய ஜனநாக கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகுவதாக அறிவிப்பிறதற்கு முன்னரே அவரிடம் பேசினேன். எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என கூறினேன். கூட்டணியிலிருந்து விலகியதற்கான காரணத்தை அவர்தான் கூற வேண்டும்.

ஓபிஎஸ் முதல்வரை எதற்காக சந்தித்தார் என்று தெரியவில்லை. தொகுதி பிரச்னைக்காகவோ, சொந்த பிரச்னைக்காகவோ சந்தித்திருக்கலாம். அதனால் சந்திப்பு குறித்து எதுவும் சொல்ல முடியாது.

ஓபிஎஸ் கேட்டுக் கொண்டால் பிரதமர் மீண்டும் தமிழகம் வரும்போது அவரை சந்திக்க ஏற்பாடு செய்வேன்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com