பிரபல ஓவியர் மாயா (98) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்.
மகாதேவன் என்ற இயர்பெயர் கொண்ட மாயா திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோபாலச்சத்திரத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே சென்னை வந்தவர், 16 வயதிலிருந்து ஓவியம் வரையத் தொடங்கினார். தமிழின் பல முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்.
சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூத்த ஓவியருக்கான ஒரு லட்சம் விருதை சென்ற ஆண்டு இவருக்கு வழங்கியது.
இந்தநிலையில், வயது மூப்பின் காரணமாக நேற்று உயிரிழந்த மாயாவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மாயாவைப் பற்றி மூத்த பத்திரிகையாளர் செ. இளங்கோவன் எழுதியுள்ள இரங்கல் குறிப்பில், “ஒரு கணவன் தனது மனைவியை எந்த அளவுக்குக் காதலிக்க வேண்டும்? தமது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் எனக்குச் சொல்லாமல் சொல்லிக் கொடுத்தவர், மறைந்த ஓவியர் மாயா (மகாதேவன்) அவர்கள்தான். அப்படியென்ன சம்பவம்?
1983இல் ‘இதயம் பேசுகிறது’ வார இதழில் வேலைக்குச் சேர்ந்தேன். அதன் ஆசிரியர், மணியன். பொறுப்பாசிரியர், தாமரை மணாளன். ஆர்ட் டைரக்டர், ஓவியர் மாயா. என் வேலை முடிந்து விட்டால், நான் எப்போதும் மாயாவின் அறையில்தான் அரட்டையடித்துக் கொண்டிருப்பேன். தாங்கள் ஆனந்த விகடனில் பணியாற்றியபோது நடந்த சம்பவங்களையெல்லாம் எனக்குச் சொல்லுவார். அங்கே மாநில மலர்களை வெளியிட்டபோது, காஷ்மீர்வரை தாங்கள் காரிலேயே பயணித்த அனுபவங்களையெல்லாம் சுவாரஸ்யமாக விளக்குவார். நான் எழுதும் பேட்டி மற்றும் அரசியல் கட்டுரைகளையெல்லாம் விமர்சிப்பார்; பாராட்டுவார்; ஆலோசனைகளையும் வழங்குவார். கட்டுரைகளைக் காட்சிப் படுத்தி, அதைப் படிக்கத் தூண்டுவது புகைப்படங்கள்தான் என்பதால், அவற்றின் முக்கியத்துவத்தையும் அவை எப்படி எடுக்கப்பட வேண்டும் என்பதையும் விளக்குவார்.
நான் இன்றைக்கும் ‘உடையார் முன் இல்லார்’போல, பிறருடைய அறிவையும் அனுபவத்தையும் பெற்றுக் கொள்வதற்கான ஆர்வமெனும் பிச்சைப் பாத்திரத்துடன் காத்துக் கிடப்பவன் என்பதால், அவரும் ஆர்வத்தோடு விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுவார். எப்போதும் புன்சிரிப்பு மாறாத முகம். ஒரு நாள் இப்படி பேசிக் கொண்டிருந்தபோது, என் முகத்தில் ஒருவித சோர்வைக் கண்டு பதறிப் போனார். எழுந்து என் அருகில் வந்து, என் கழுத்தில் கைவைத்துப் பார்த்தவர், ‘என்ன இப்படிக் கொதிக்குது? வாங்க டாக்டரைப் பார்க்கலாம்’ என்று என்னைக் கட்டாயமாக இழுத்துக் கொண்டுபோய், தனது காரில் ஏற்றிக் கொண்டு அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அசோக் நகரிலுள்ள அவரது வீட்டை ஒட்டியபடி ‘மாயா நர்சிங் ஹோம்’ முளைவிட ஆரம்பித்திருந்த சமயம் அது. மாயாவின் டாக்டர் மருமகள்தான் ஆரம்பித்திருந்தார். உடனே மருமகளை வீட்டுக்கு வரச்சொல்லி, எனக்கு மருத்துவம் பார்த்தார். அன்றிரவு அவருடைய இல்லத்திலேயே தங்க வைத்தார். மறுநாள் காலையில் காய்ச்சல் காணாமல் போனதும்தான் நிம்மதியானார். தன்னுடனேயே என்னை அலுவலகத்திற்கு அழைத்து வந்தார்.
சரி. முதல் வரியில் சொன்ன விஷயத்திற்கு வருவோம்.
வழக்கம் போல நாங்கள் அரட்டையடித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள், பேச்சு எங்கெங்கோ சுற்றி, கடைசியில் கணவன், மனைவிக்கிடையிலான காதலுக்கு வந்து சேர்ந்தது. அப்போது, ‘சிரிக்காமல் இருந்தால் ஒரு விஷயம் சொல்லுவேன்’ என்றார்.
‘நான் ஏன் சார் சிரிக்கப் போறேன், சொல்லுங்க’ என்றேன்.
‘எனக்குக் கல்யாணமான புதிது. ஒரு நாள் காலையில், நான் பக்கத்திலிருந்த கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வீட்டை நெருங்குவதற்குச் சற்று முன்னால், கீரை வண்டிக்காரர் எனக்கு எதிரில் வந்தார். அவரிடம், ‘ஏம்பா, எங்க வீட்டுக்குக் கீரை கொடுத்தியாப்பா?’ என்று கேட்டேன். ‘குடுத்துட்டேன் சார்’ என்றார் அவர். இருந்தாலும் எனக்குச் சந்தேகம். மறுபடியும் கேட்டேன். ‘ஆமா சார்…பல்லுக்கூட கொஞ்சம் தூக்குனாப்ல இருக்குமே…அவுங்கதானே ஒங்க வூட்டுக்காரி. குடுத்துட்டேன் சார்…’ என்றார் அவர்.
‘என் மனைவிக்குப் பல்லு கொஞ்சம் தூக்கின மாதிரி இருக்குமா? எப்படி எனக்குத் தெரியாமல் போனது?’ ஆச்சரியத்தோடு வீட்டுக்கு வந்து என் மனைவியைப் பார்த்தேன்.
‘கீரைக்காரர் சொன்னது உண்மைதான். ஒரு சாதாரண கீரைக்காரருக்குத் தெரிந்தது எப்படி எனக்குத் தெரியாமல் போனது? யோசித்துப் பார்த்தேன். கீரைக்காரர், என் மனைவியைத் தன்னிடம் வழக்கமாகக் கீரை வாங்கும் ஒரு வாடிக்கையாளராகவும் ஒரு பெண்ணாகவும்தான் பார்த்தார். அதனால்தான் அவருக்குக் குறைகளும் தெரிந்தன. நானோ அவளை ஒரு பெண்ணாக மட்டுமல்ல; என் மனைவியாகவும் அளவற்ற காதலோடும் பார்த்தேன். அதனால்தான் என் கண்களுக்குக் குறைகளே தெரியாமல் போயின.’
மாயா அவர்களே, நீங்கள் சொன்னது கணவன்மார்களுக்கு மட்டுமல்ல; மனைவிமார்களுக்கும் சேர்த்தே சொன்னதுதான். உங்களுக்கு என் இதய பூர்வமான அஞ்சலி.” என்று தெரிவித்துள்ளார்.
ஓவியர் மாயாவின் இறுத்திச்சடங்கு இன்று மாலை ஈக்காட்டுத்தாங்கலில் நடைபெற உள்ளது.