எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை!

எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை!
Published on

எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியரை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பொது இடங்களில் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பஞ்சாப், ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரு மாநிலங்களிலும், போலீசாரின் விடுமுறை ரத்துசெய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை காவல்துறையினர் வார விடுமுறை, விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக பஞ்சாப்பில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது.

ஏவுகணை எதிர்ப்பு அமைப்பால் இடைமறித்து அழிக்கப்பட்ட ஏவுகணை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பஞ்சாப்பின் அமிர்தசரசில் செயலிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், பஞ்சாப்பின் பெரோஸ்பூர் பகுதியில் எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தானிய ஊடுருவல்காரர் நேற்று இரவு, சர்வதேச எல்லையின் பாதுகாப்பு வேலியை தாண்டி உள்ளே நுழைவதை எல்லை பாதுகாப்பு படையின கண்டனர். அப்போது எல்லை பாதுகாப்பு படையினரின் எச்சரிக்கையையும் மீறி அவர் நுழைய முயன்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்லப்பட்டவர் யார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, அவருக்கு தீவிரவாத அமைப்புகளோடு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com