ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியாக ஆறு சிக்சர்களை அடித்து, ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். இருப்பினும் அவரது அதிரடி ஆட்டம் அணியின் வெற்றிக்கு வழி வகுக்கவில்லை.
நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய அந்த அணிக்கு நரேன் (11) ஏமாற்றம் அளித்தாலும், குர்பாஸ் (35), கேப்டன் ரஹானே (30) ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். இளம் வீரர் ரகுவன்சி 31பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார்.
அதேபோல, மற்றொரு முனையில் அதிரடியாக விளையாடிய ரஸல், சிக்சர் மழையை பொழிந்தார். இதனால், அவர் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதனால், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்தது. ரஸல் 57 ரன்களும், ரிங்கு சிங் 19 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து, 207 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பிறகு, குனல் சிங் (0), ஜெய்ஸ்வால் (34), ஜூரேல் (0), ஹசரங்கா (0) ஆகியோர் அவுட்டாகினர்.
இதனால், 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பிறகு, ஜோடி சேர்ந்த கேப்டன் பராக் மற்றும் ஹெட்மெயர் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது.
மெயின் அலி வீசிய 13ஆவதுஓவரில் கடைசி 5 பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டு, பராக் அமர்க்களப்படுத்தினார். அதன்பிறகு, வருண் சக்ரவர்த்தி வீசிய 14ஆவது ஓவரின் 2வது பந்தை சந்தித்த பராக், அதனையும் சிக்சருக்கு பறக்கவிட்டார். இதன்மூலம், தொடர்ச்சியாக அவர் சந்தித்த 6 பந்துகளையும் சிக்சர் அடித்து அசத்தினார்.
இறுதியில் ஹெட்மயர் (29), பராக் (95) அவுட்டாகிய நிலையில், கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. அதில், 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரியை ஷூபம் துபே அடித்தார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது, 2வது ரன் எடுக்கையில் ஆர்ச்சர் ரன் அவுட்டானார். இதன்மூலம், ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கட்டா அணி த்ரில் வெற்றி பெற்றது.