‘படை தலைவன்’ திரைப்படம் திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் நாயகன் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சகாப்தம், மதுரை வீரன் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில், தற்போது படை தலைவன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் அன்பு என்பவர் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படம் 23ஆம் தேதி திரைக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் 'படை தலைவன்' திரைப்படம் திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சண்முக பாண்டியன் பதிவிட்டுள்ளார். "'படை தலைவன்' படம் மே 23ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக பட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதியை விரைவில் உறுதி செய்து அறிவிக்க உள்ளோம்" என்று சண்முக பாண்டியன் தனது இன்ஸ்டிராகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.