‘திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் என்றும் ஆதரவு தர வேண்டும்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலுார் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, தனியார் நிறுவனத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதை எதிர்த்து, அப்பகுதி மக்கள் போராடி வந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்தும் மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்யப்பட்டதற்காக அரிட்டாப்பட்டியில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
“டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில்எம்.பி.க்கள் பேசினர். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளித்தனர். அப்போது நான் சட்டசபையில் பேசும்போது, மக்களால் ஆட்சியில் இருக்கும் நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் வராது. அது பற்றி மக்கள் கவலைப்பட தேவையில்லை. அப்படிவந்தால் பதவியில் இருக்க மாட்டேன் எனச்சொன்னேன்.
எனக்கு பாராட்டு தெரிவிப்பதை விட, உங்களுக்கு பாராட்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். இங்கு பிரித்து பேச விரும்பவில்லை. நாம், நமக்கு எனவே பேச விரும்புகிறேன். இன்னும் ஒன்றரை ஆண்டில் தேர்தல் வரப்போகிறது. அதில், நீங்கள் என்ன முடிவில் உள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது. ஆட்சிக்கு மக்கள் என்றும் ஆதரவு தர வேண்டும்.” என்றார்.