அண்ணாமலை
அண்ணாமலை

சிஏஜி அறிக்கையில் ஊழல் என இருக்கிறதா? – ஸ்டாலினுக்கு அண்ணாமலை எதிர்க்கேள்வி

சிஏஜி அறிக்கையில், நெடுஞ்சாலை அமைப்பதில் செலவினங்கள் அதிகரித்துள்ளன என்றுதான் கூறப்பட்டிருக்கிறதே தவிர, ஊழல், முறைகேடு, மோசடி என எந்த இடத்தில் இடம்பெற்றிருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்க்கேள்வி கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

"கடந்த வாரம்தான், என்னவென்று தெரியாமல் துண்டுச்சீட்டைப் பார்த்து அப்படியே ஒப்பிப்பது தர்மசங்கடத்தை உருவாக்கும்; அது முதலமைச்சர் ஸ்டாலின் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று அறிவுறுத்தியிருந்தோம். ஆனால், வழக்கம்போல மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்த துண்டுச்சீட்டை அப்படியே படித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

ஒரு திருமண விழாவில் பேசியிருக்கும் ஸ்டாலின், சிஏஜி அறிக்கையால் மத்திய அரசின் ஏழு விதமான ஊழல் அம்பலமாகியிருக்கிறது என்று அப்பட்டமாக பொய் சொல்லியிருக்கிறார்.

சிஏஜி அறிக்கையில், நெடுஞ்சாலை அமைப்பதில் செலவினங்கள் அதிகரித்துள்ளன என்றுதான் கூறியிருக்கிறதே தவிர, ஊழல், முறைகேடு, மோசடி அல்லது முதலமைச்சர் சொன்ன துவாரகா விரைவு சாலை குறிப்பிட்ட நபர்களுக்கு ஒப்பந்தம் ஒதுக்கீடு என்பது போன்ற வார்த்தை எந்த இடத்தில் இடம்பெற்றிருக்கிறது என்பதை ஸ்டாலின் விளக்கவேண்டும்.

தமிழகத்தின் கனிம வளங்கள் கடத்தப்பட்டு, கேரளாவுக்கு அனுப்புவதில் திமுக அமைச்சர்களுக்கே தொடர்பு இருப்பது பொதுமக்களுக்கே தெரிந்த உண்மை. மாநில வளர்ச்சிப் பணிகளுக்கு உதவாமல், கனிம வளங்களைத் திருடிக் கொண்டிருப்பவர்கள் மீது முதல்வர் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?

சுங்கச் சாவடியில் ஊழல் நடந்திருப்பதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார். சுங்கச் சாவடிகளில் எப்படி ஊழல் நடக்கும் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். இது அவரின் கடமை.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக, போகிறபோக்கில் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடு என்று கூறுவது, வானத்தைப் பார்த்து எச்சில் உமிழ்வதைப் போல. ஒரே எண்ணில் பலரின் கணக்குகள் இணைக்கப்பட்டிருந்தால், அதனைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசிடமும் உள்ளது என்பதைக் கூட அறியாமல் துண்டுச் சீட்டைப் படித்திருக்கிறார்.

ஊழலின் அடையாளமான திமுக, ஊழலற்ற, மக்களுக்கான, நேர்மையான பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது வீண் பழி சுமத்துவதை, எக்காலத்திலும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.” என்று அண்ணாமலையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com