தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 14ஆம் தேதி வரை வலியுறுத்தி வந்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், 16ஆம் தேதி பணிநிரந்தரம் செய்ய வேண்டாம் என பேசியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியார் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் வழங்கியதைக் கண்டித்து அந்த மண்டலங்களின் தூய்மைப் பணியாளர்கள் 13 நாள்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களின் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், திமுக கூட்டணிக் கட்சிகள் சிலவும் கடைசி வரை தங்களின் ஆதரவைத் தெரிவித்துவந்தன.
இதற்கிடையே, ஆக.05ஆம் தேதி நள்ளிரவு தூய்மைப் பணியாளர்களை நேரில் சென்று சந்தித்த திருமாவளவன், போராட்டக்காரர்களின் கோரிக்கையை கேட்டறிந்து, அவர்களுக்கு ஆதரவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஆக.13ஆம் தேதி நள்ளிரவு தூய்மைப் பணியாளர்கள் காவல் துறையால் அப்புறப்படுத்தப்பட்டனர். இதைக் கண்டித்து மறுநாள் (ஆகஸ்ட் 14) அறிக்கை வெளியிட்ட திருமாவளவன், ”தனியார்மயமாக்குவதைக் கைவிட்டு தமிழகம் தழுவிய அளவில் அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்”என வலியுறுத்தியதோடு, ”தூய்மை பணியாளர்கள் ஆற்றும் பணியின் தன்மையைக் கருத்தில் கொண்டு இவர்களுக்கு சிறப்பு முன்னுரிமையின் அடிப்படையில் பணிநிரந்தரம் வழங்கிட வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார்.
வேறு எந்த அரசியல் கட்சிகளும் முன்வைக்காத ’சிறப்பு முன்னுரிமை’ என்ற கோரிக்கை கூடுதல் கவனம் பெற்ற நிலையில், ஒரே நாளில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
நேற்று முன்தினம் (ஆகஸ்ட் -16) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழாவில் பேசிய திருமாவளவன், “தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் போராட்டக் குழுவினரின் கோரிக்கைகளை நாம் ஆதரிக்கின்றோம். அதேசமயத்தில், குப்பை அள்ளுபவர்களைப் பணி நிரந்தரம் செய்து நீங்கள் குப்பையை மட்டுமே அள்ளுங்கள் என்று சொல்வதில் உடன்பாடு இல்லை. குப்பை அள்ளும் தொழிலிருந்து அவர்கள் மீளவேண்டும் என்பதுதான் நம்முடைய போராட்டம். பணி நிரந்தரம் என்பது குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும் என்ற கருத்துக்கு வலுசேர்ப்பதாக உள்ளது.
பணி நிரந்தரம் செய்யக் கூடாது என்பதுதான் சரியான கருத்து. அதிலிருந்து அவர்களை மீட்பதுதான் சமூகநீதி.” என்று பேசியிருந்தார்.
பணி நிரந்தரம் தொடர்பாக திருமாவளவனின் முன்னுக்குப் பின் முரணாகக் கருத்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, அவரை விமர்சிக்க தொடங்கியுள்ளனர் இணைய ஊடகத்தினர்.