அகமதாபாத் விமான விபத்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனையைத் தருவதாக பிரதமர் மோடியும், மீட்புப் பணியில் ஒவ்வொரு உயிரும் முக்கியம், ஒவ்வொரு நொடியும் முக்கியம் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாதிலிருந்து இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 168 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் என 242 பேர் பயணித்துள்ளனர்.
விமான நிலையத்திற்கு அருகே மெஹானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்துள்ளதால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 130 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரமான விபத்து என்பதால் உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி விபத்து பற்றி எக்ஸ் பக்கத்தில், "ஆமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது. இந்த விபத்து, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனை அளிக்கிறது.
இந்த சோகமான நேரத்தில் எனது நினைவுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வரும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: “ஆமதாபாத் ஏர் இந்தியா விபத்து இதயத்தை நொறுக்கியுள்ளது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் குடும்பத்தினர் உணரும் வலி மற்றும் பதட்டம் கற்பனை செய்ய முடியாதது. இந்த கடினமான தருணத்தில் எனது எண்ணங்கள் அவர்கள் ஒவ்வொருவருடனும் உள்ளன.
அரசு நிர்வாகத்தின் அவசரகால மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு உயிரும் முக்கியம், ஒவ்வொரு நொடியும் முக்கியம்.
காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் உதவ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.